கறுப்பி

பிப்ரவரி 17, 2005

Mr.X கறுப்பி ஒரு கிசுகிசு

Filed under: Uncategorized — suya @ 12:52 பிப

அப்போது எனக்கு பதினாறு வயது. சோப்பு போட்டு தேய்ச்சு தேய்ச்சு குளிச்ச காலம் போய். பள்ளிக்குப் போகும் போது பெடியங்கள் சைட் அடிச்சு லெட்டர் தர சிலுப்பிக் கொண்டு திரிஞ்ச காலம். கமலஹாசனையும் மோகனையும் வெட்டி?? புத்தகக்துக்க வைச்சுக் கொண்டு திரிஞ்ச காலம். அது ஒரு “கனாக்காலம்”
ஒரு பெடியன் மட்டும் நான் சைக்கிளில போனால் தானும் சைக்கிளில வாறது பஸ்ஸில போனா பஸ்ஸில வாறது நடந்து போனா நடந்து வாறது எண்டு ஒரே தொல்லை (*-*)
அடிக்கடி பாத்ததாலையோ என்னவோ அவன் என்ர மனதில பதிஞ்சிட்டான்.
ஒருநாள் இரவு அது ஒரு நிலாக்காலம். நிலவின் ஒளி எனது அறையின் சாளரத்துக்குள்ளால் ஊடுருவி என் படுகையை வெளிச்சமாக்கிய ஒரு பின் இரவில் (கற்பனைய கன்னா பின்னா எண்டு ஓடவிடா) என்ர இதயம் பிளந்து ஒரு காதல் மலர் பூத்தது.
அப்ப எனக்கு பதினாறு வயசு. நானும் அவனும் மாஞ்சு மாஞ்சு காதலிச்சம். ரியூசனுக்கு எண்டிட்டுச் சுத்திறது. சுபாஸ் கபேக்கு போய் ஐஸ்கிறீம் குடிக்கிறது. படத்துக்குப் போறது. சும்மா நடந்து திரியிறது எண்டு படிப்பைத் தூக்கி மூலையில போட்டிட்டு —-மகனோட சுத்தித் திரிஞ்சன்.

கேள்வி – கறுப்பி நீங்கள் காதலிச்சிருக்காவிட்டால் என்னவா வந்திருப்பீர்கள்?

பதில் – டொக்ரறாய்.

எங்கட காதல் கதை வீட்டில தெரிஞ்சு அம்மா தும்புத் தடியால தும்பு பறக்க அடிச்சா.(இப்ப கிழவி கனடாவிலதான் இருக்குது. நான் ஒருநாள் கேட்டன் லவ் பண்ணிறதுக்கும் ஆரும் அடிப்பீனமோ எண்டு? கிழவி பொக்கை வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்குது) ரியூசனால மறிச்சுப் போட்டீனம். கொஞ்ச நாளா ரேடியோவில சோகப்பாட்டுக் கேட்டு நானும் பாடிக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து திரிஞ்சன். பிறகு என்னட்டச் சத்தியம் வாங்கிக் கொண்டு (அதாவது அந்த — மகனைக் கண்டாக் கதைக்கக் கூடாது எண்டு) நான் உள்ள கடவுளில எல்லாம் சத்தியம் பண்ணிப் போட்டு சோகமா முகத்தை வைச்சுக் கொண்டு ரியூசனுக்குத் திரும்பப் போனன். போக முதலே பக்கத்து வீட்டுப் பெடியனிட்டச் சொல்லி —மகனுக்குத் தகவல் அனுப்பிப் போட்டன் (நான் ஏன் —மகன் எண்டு போடுறன் எண்டு குழம்பாதேங்கோ கடைசியா உங்களுக்கு விளங்கும்)
நாஸ்திகையான எனக்குத் திடீரெனக் கடவுள் நம்பிக்கை வந்தது. வெள்ளிகளில் விரதம் பிடிச்சன். நல்லூர்த் திருவிழாக்கு 25 நாளும் விரதம். அப்பதான் கோயிலுக்குப் போகலாம் —மகனைச் சந்திக்கலாம் எண்ட பிளான் எனக்கு. (என்ர லவ்வுக்குத் தன்னை யூஸ் பண்ணிப் போட்டன் எண்டு கடவுளுக்கு என்னோட இன்னும் கோவம். அதுதான் என்னை உருப்படாமல் பண்ணிப் போட்டார்) இப்பிடியே காதல் பறவைகளாய் பறந்து திரிஞ்சம். என்னை அந்தப் பெடியனோட கண்டதெண்டு அப்ப இப்ப அண்ணாக்கள் வந்து அம்மாட்ட அண்டி கோள்மூட்டுவான்கள் உடன நான் ரெண்டு கடவுள இழுத்துச் சத்தியம் பண்ண அம்மா நம்பீடுவா.(என்னவோ தெரியாது)
இப்பிடி நாங்கள் நல்ல சந்தோஷமா அஞ்சு ஆறு வருஷம் இழுபட்டம். அவன் ஒருநாள் சொன்னான் தங்கட வீட்டில பிரச்சனையாம் (அவன்ர அண்ணா என்ர அப்பான்ர ஸ்ருடண்ட்) கொஞ்ச நாளைக்குச் சந்திக்கேலாது எண்டு. நான் திரும்பவும் ரேடியோவில சோகப்பாட்டைக் கேட்டுக் கொண்டு தூணில சாய்ஞ்சு நிண்டு நிலவைப்பாத்துப் பெருமூச்சு வி;ட்டன். பிறகு ஒருநாள் எனக்குத் தகவல் வந்திது தான் கொழும்புக்குப் படிக்கப் போறான் எண்டு. ஏதோ படிச்சு நல்லா வரட்டும். வந்தாத்தானே வசதியா வாழலாம் எண்ட கற்பனையில நான் இருந்தன். பிறகு ஊர் பிரச்சனை நாங்கள் வீடு மாறினம். இப்பிடியெண்டு கறுப்பியின்ர காதல் கந்தறுந்த கதையாப் போய். என்னை அவன் “காய்” வெட்டிப்போட்டான் எண்டு நான் “பேய்” கோவத்தில இருந்தன். (தற்கொலை செய்வமோ எண்டு யோசிச்சது கூட உண்டு) அப்ப எல்லாம் உந்த பெண்ணியம் ஒண்டும் தெரியாது. ஒருத்தனைக் கலியாணம் கட்டி பிள்ளைப் பெத்து. நல்ல வீடு கார் எண்டு வாழ ஆசை.
—மகனோட தொடர்பு முழுத்தலுமா “கட்” பண்ணுப்பட்டிட்டுது. பிறகு நானும் ஐரோப்பா வந்து கலியாணம் கட்டி கனடா வந்து இப்பிடி வருஷங்கள் ஓடீற்றிது.

ரெண்டு வருஷத்துக்கு முதல் இந்தியா போற வழியில பிள்ளைகளோட லண்டன் போனன். என்ர மச்சாளோடதான் தங்கினனான். அவளுக்கும் என்ர வயசுதான். (அப்ப என்ர லவ்வுக்கு அப்பப்ப கடிதம் குடுத்து உதவினவள்.) சொன்னாள் உன்ர —மகன் இஞ்ச லண்டனில எனக்குக் கிட்டத்தான் இருக்கிறான். எங்கட ரெண்டு பேற்ற பிள்ளைகளும் ஒரே பள்ளிக் கூடத்திலதான் படிக்கினம். நான் அடிக்கடி சந்திக்கிறனான் என்னைக் கண்டிட்டுத் தெரியாத மாதிரிப் போறான் எண்டு அவளுக்குப் பேய் கோவம். பிறகு ஒருமாதிரி தேடிப்பிடிச்சு —மகனோட போன் நம்பர் எடுத்து வீட்டிற்கு அடிச்சு பிள்ளையப் பற்றிக் கதைச்சுப் போட்டு எங்கட வீட்டுக்கு ஒரு விசிட்டர் வந்திருக்கிறா கதையுங்கோ எண்டு போட்டுப் “படார”; எண்டு என்னட்ட ரெலிபோணைத் தந்திட்டாள். நான் ஆரெண்டு சொன்னா “சொறி” எனக்கு உங்களத் தெரியாது எண்டு சொன்னாலும் சொல்லிப் போடுவான் எண்ட பயம் எனக்கு. நான் சொன்னன் நான் உங்களப் படிப்பிச்ச மாஸ்ரறின்ர மகள் எண்டு அவனுக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டிருக்க வேணும் (என்ர கற்பனை) நீங்கள் எங்கட வீட்டுக்கு விசிட்டிங் வர வேணும் என்ர மனுஷி நல்லவ ஒண்டும் சொல்ல மாட்டா எண்டான். (நான் எரிச்சலோட அந்த மனுஷிய ஒருக்காப் பாப்பம் எண்டு) வெளிக்கிட்டுப் போனம் குடும்பத்தோட இருந்து கதைச்சுப் ரீ குடிச்சுப் போட்டு வந்திட்டம். (மனுஷி என்னளவுக்கு இல்லாட்டாலும் பரவாயில்லை – விழுந்தாலும் மீசையில மண் படாது) அடுத்தநாள் அவன் போன் அடிச்சு என்னைக் கேட்டான் ஏன் நான் தன்னை ஏமாத்தினனான் எண்டு?
ம்ம்ம்ம்— மகனே?

Advertisements

13 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி,
  கடைசிவரை எனக்குப் புரியலை.
  —மகன் அப்படின்னா என்ன ?

  பின்னூட்டம் by Muthu — பிப்ரவரி 17, 2005 @ 3:50 பிப

 2. This post has been removed by a blog administrator.

  பின்னூட்டம் by ஒரு பொடிச்சி — பிப்ரவரி 17, 2005 @ 5:06 பிப

 3. யக்கா…பாவம்கா நீங்க! ஒவ்வொருத்தருக் குள்ளும் சோக நினைவுகள்!

  பின்னூட்டம் by Moorthi — பிப்ரவரி 17, 2005 @ 10:31 பிப

 4. மது மன்னிக்க வேண்டும் –மகன் என்றால் தாங்கள் கீறிட்ட இடம் நிரப்ப வேண்டும். (வேயன்னா சையன்னா) ஹ ஹா MR.X இற்கு தமிழில் ஆர்வம் கிடையாது எனது தளத்தைப் பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்காது என்றே நம்புகின்றேன்.

  மூர்த்தி – என்ன செய்வது. “எங்கிருந்தாலும் வாழ்க” Sob Sob Sob

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 7:38 முப

 5. ////கறுப்பி,
  கடைசிவரை எனக்குப் புரியலை.
  —மகன் அப்படின்னா என்ன ? ///

  கறுப்பி,
  இப்போதான் புரியுது. வரிக்குவரி அந்த ஆளைத்திட்டியிருக்கிறீர்கள் :~). அப்புறம் என் பெயர் மது இல்லை, முத்து.

  பின்னூட்டம் by Muthu — பிப்ரவரி 18, 2005 @ 8:50 முப

 6. Sorry Muthu

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 9:28 முப

 7. கறுப்பி, சென்னையில அந்த மகனுக்கு அருமையான வார்த்தையிருக்கிறது…தே****யா பை….ஆ!…..முழு வார்த்தை புரியுமென்று நினைக்கிறேன். உங்களின் வலைப்பதிவின் மரியாதையினை கருதி 😉 முழு வார்த்தையினை பதியாமல் போகிறேன்.

  எல்லாரிடத்திலும் ஒரு கதை இருக்கிறது. இதை விட பெரிய சந்தோஷம்/துக்கம் என்ன பெரிதாய் வந்து விடப்போகிறது. அவரவர் நெனைப்பு. அவரவர் பொழப்பு.

  பின்னூட்டம் by Narain — பிப்ரவரி 18, 2005 @ 11:56 முப

 8. பதிக்க மறந்தது. கவலைப்படாதீர்கள். இதுபோன்ற நிறைய விசயங்களுக்கு சேர்த்து, ஒரு மகா கெட்ட வார்த்தைகளை உள்ளடக்கி ஒரு பதிவினை இடும் எண்ணமிருக்கிறது. என்ன ஒரே பிரச்சனை, அதற்குப் பிறகு, என்னை வலைப்பதிவிலிருந்து துரத்திவிடுவார்கள். அதற்காக தான் யோசிக்கிறேன்.

  கண்டிப்பாக உங்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். மனம் நிறைவு பெறும்வரை நன்றாக உங்கள் நிலையிலிருந்து இறங்கி வந்து ஏசுங்கள். நம் உணர்வுகளை, நம் பதிவில் கூட இட முடியாவிட்டால், பின் என்ன மசிருக்கு சொந்தமாய் ஒரு பதிவு?

  பின்னூட்டம் by Narain — பிப்ரவரி 18, 2005 @ 12:00 பிப

 9. நானென்ன கெட்ட வார்த்தைப் போட்டியா நடாத்திறேன்?

  உங்கள் பதிலைப் பார்த்த போது எனக்கு எனது நண்பர் ஒருவர் சொன்ன ஜோக் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது.
  இங்கே கனடாவில் ஒரு எழுத்தாளரின் புத்தக வெளியீட்டின் போது விமர்சனம் செய்த ஒருவர் அந்த எழுத்தாளரின் இனிஷலான “அ” னாவில் இருக்கும் அழகை. அன்பு அழகு அறிவு இஸ்தியாதி இஸ்தியாதி என்று அளந்து கொண்டே போனாராம். பார்வையாளராக இருந்த ஒருவர் சொன்னாராம் நல்ல வேளை அவரது இனிஷல் “அ” னாவாகிப் போனது இதுவே “சு” என்றால் எப்படி இருந்திருக்கும் என்று?

  எனக்கு நிச்சயமாக இடம் தாருங்கள் முயன்று பார்க்கின்றேன் எதுவரை போக முடியும் என்று

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 12:17 பிப

 10. தவறாக எடுத்துக்கொள்ளாவிட்டால் இரண்டு கேள்விகள்:

  1. உங்கள் பதிவில் எந்த இடத்திலும் அந்த மகன் உங்களை ஏமாற்றிவிட்டுப்போனதாக நீங்கள் எழுதவில்லை (“கொழும்புக்குப் படிக்கப்போனான்” என்றால், ஏமாற்றிவிட்டுப்போனான் என்ற அர்த்தப்படுத்தவேண்டுமா?). இடையிலே நிகழ்ந்தது எதுவுமே சொல்லாமல், நீங்கள் கல்யாணம் கட்டிக்கொண்டு வந்ததைச் சொல்லிவிட்டு, கடைசியிலே “நீ ஏன் என்னை ஏமாத்தினனீ?” என்று அவன் கேட்பற்கு அவனை ஏசினால், வாசிப்பவர்கள் என்னவென்று அர்த்தம் கொள்வது?

  2. அது பெரிய பிரச்சனையில்லை; ஆனால், அதைவிடப்பெரிய சிக்கலொன்று உங்கள் பதிவிலே இருக்கின்றது. அவனைத் திட்டுங்கள்; அதற்குப் போய், இந்தக்காதற்கூத்துகளிலே ‘சேர், களி, பிரி’ என்பது பற்றி ஒரு வரி சொன்னதாக நீங்கள் குறிப்பிடாத, அவன் தாயை வேயன்னா சையன்னா என்று திட்டும் உங்களுக்கு மனுசிகளின் துயரைப் பற்றிப் பேசும் அருகதையை எத்தராதரம் தந்துவிட்டதாக எண்ணுகின்றீர்கள்? 😦

  தறுதலையென்று தவறாக என்னை எடுத்துக்கொண்டாலும் தவறிப்போகமாட்டேன் 🙂

  பின்னூட்டம் by -/பெயரிலி. — பிப்ரவரி 18, 2005 @ 12:24 பிப

 11. கறுப்பி, உங்கள் பதிவுகளில் இரண்டு விசயங்கள் என்னை பாதிகின்றன. ஒன்று, பிறப்பிலேயே சில குணங்கள் வருவதாய் நீங்கள் பின்னூட்டமிட்டிருந்தது. இது ஒரு சாதியம் சார்ந்த பார்வையாகவே தமிழ்நாட்டில் கொள்ளப்படும். சாதியடிப்படையில் யாரையாவது திட்டுவதற்கும், அடிமைப்படுத்தவும் இந்தவகைப் பிரயோகம் பயன்படும்.

  இரண்டாவது, வேசை மகன்.. இப்படி தாய், சகோதரி, மனைவி என்ற பெண்பாலரை உடனிணைத்து ஒருவனை திட்டுவது அவனது சொத்துக்களில் ஒன்றை அசிங்கப்படுத்தி அதன் மூலம் அவனது பெருமியைக் குலைக்கும் வகையாகும். இது பெண்களை சொத்துக்களாகவும், அதுவும் கெட்டுப்போகும் சொத்துக்களாகவும் சித்தரிக்கும் புனைவுகளைத் தரும் ஆணாதிக்க வழிகளாகும்.

  இது உங்கள் இடமென்பதால் எப்படியும் எழுதலாம். ஆனால் நமது கருத்தாக்கங்கள் எல்லாம் சாதிய, ஆணாதிக்க, சுரண்டல்வாத கருத்தாக்கங்களாய் இருப்பதால் ஒவ்வொரு வார்த்தையும், கட்டுடைக்கப்படவும், மீளமைக்கவும் படவேண்டும் என்பது என் எண்ணம்.
  நன்றி!

  (தனிப்பட்ட முறையில் தீட்டுவதற்கும், கெட்டவார்த்தைகளுக்கும் நான் எதிரியில்லை)

  பின்னூட்டம் by Thangamani — பிப்ரவரி 18, 2005 @ 12:33 பிப

 12. தங்கமணி நீங்கள் ரொம்பவும் டீப்பா திங் பண்றீங்கள் எண்டு நினைக்கிறேன்.

  உங்கள் முதல் கருத்திற்கு என் பதில் – உயரம் கட்டை கறுப்பு போன்று சில பிறக்கும் போது வருவது. அதனை மாற்ற முடியாது. சிலர் குணங்களும் அப்படித்தான். யார் எடுத்துச் சொன்னாலும் என்ன செய்த போதும் மாறாத குணம் என்று ஒருவருக்கு இருந்தால் அது பிறப்பில் வருவது. சிந்திக்கத் தெரிந்து மாறினால் அது புறச்சு10ழலால் வருவது. இப்படியாக இரு குணங்கள் இருப்பதென்பதை தாங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா?

  அடுத்தது – கெட்ட வார்த்தை – என்னுடைய எக்ஸ்சை நான் உரிமையுடன் (செல்லமாக) திட்டினேன். கோபத்துடன் அல்ல. இது வழக்கத்திற்கு வந்த சொல். இப்போது இங்கே அதன் ஆழத்தைப் பார்த்து ஆராயாமல் இயல்பாக இருக்கவே விரும்புகிறேன்.

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 12:45 பிப

 13. பெயரிலி கொழும்புக்குப் படிக்கப் போன பின்னர் தொடர்பு விட்டுப் போய் விட்டது. நான் நினைத்தேன் X என்னை ஏமாற்றி விட்டதாக. எனக்கு ஏமாற்றும் எண்ணம் இருக்கவில்லை. எனவே என்னைத் தேடிப்பிடிப்பது அவனுடைய கடமையாக நான் எண்ணி விட்டேன். (என் ஈ.கோ விடவில்லையோ தெரியாது)
  அடுத்த தங்கள் கருத்திற்கு தங்கமணிக்குச் சொன்னதையே சொல்கின்றேன். எனக்குக் கோபம் ஒரு போதும் இருந்ததில்லை. வெறும் செல்லத் திட்டல் தான். தாiயா அல்ல அவனை.

  பின்னூட்டம் by கறுப்பி — பிப்ரவரி 18, 2005 @ 12:56 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: