கறுப்பி

பிப்ரவரி 28, 2005

“டூஸ்” தற்பால் நாட்டம்

Filed under: Uncategorized — suya @ 10:07 முப

“Fire” போன்ற திரைப்படங்கள் கல்லூரி மாணவிகளுக்கு ஓரினச்சேர்க்கையைப் பரீச்சித்துப் பார்க்க வைக்கின்றன என்ற உஷாவின் கட்டுரைக்குப் பல வாசகர்கள் தமது கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். ஆராய்சிக் கட்டுரைகள், எழுத்தாளர்களின் சுயஅனுபவ நாவல்கள் போன்றவை பலரால் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.
இத்தகவல்களைப் படிக்கும் போது எனக்குள் எனது பாடசாலை நாட்கள் வந்து,வந்து போனது. இது போல் இன்னும் பலருக்கும் மீட்டிப்பார்க்கும் பல நினைவலைகள் இருக்கலாம். (சொல்ல மறுக்கும் ஞாபகங்கள்)

கறுப்பி ஐந்தாம் வகுப்பு வரை ஒரு கிராமப்பாடசாலையில் படித்து விட்டு உயர்தரக்கல்விக்கு நகரத்தில் இருக்கும் ஒரு மகளீர் பாடசாலைக்குப் போய்ச் சேர்ந்தாள். அம்மாவுடன் இழுபட்டுப் போய் வந்த (எனது அம்மா ஒரு ஆசிரியை) நாட்கள் போய் யூனிபோர்ம்,ரை,சொக்ஸ், சப்பாத்து என்று ஸ்கூல் பஸ்சில் பாடசாலை போய் வருவது மிகவும் த்ரில்லாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்க எப்போதும் எல்லோரையும் “ஆ” வென்று பாப்பவளுமான இந்தக் கறுப்பி தனது வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து போய் வரும் ஒருத்தியுடன் (பாதுகாப்பிற்காக) ஒட்டிக்கொண்டு திரியத் தொடங்கினாள்.
பாடசாலையில் இரண்டு சிறிய இடைவேளைகளும், ஒரு சாப்பாட்டு இடைவேளையும் இருக்கின்றது. கறுப்பியின் நண்பி முதலாவது இடைவேளை வரும் நேரம் நெருங்கும் போதே தனது மேசை லாச்சிக்குள் இருந்து ஒரு பூ, இல்லாவிட்டால் ஒரு இனிப்பு என்று ஏதாவதை எடுத்து வைத்துக் கொண்டு மிகக் கவனமாக மடித்து வைக்கப்பட்ட ஒரு காகித உறையையும் மறைத்து வைத்துக் கொள்வாள். இடைவேளைக்கான மணி அடித்ததுதான் தாமதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தனது “டூஸ்” ஐப்பார்க்கப் போவாள். அது அவளிலும் பார்க்க நான்கு அல்லது ஐந்து வயது கூடிய ஒரு அக்காவாக இருக்கும். அந்த டூஸ் அக்கா தனது வகுப்பறைக்கு வெளியிலோ இல்லாவிட்டால் ஒரு மரத்தடியிலோ இவளுக்காகக் காத்திருப்பாள். ஒருவரையொருவர் காணும் போது காதலர்களைக் காண்பது போல் முகம் சிவந்து வெட்கப்படுவார்கள். பூக்களும், இனிப்புக்களும், கடிதமும் கைமாறும். இப்படியாக மரங்களின் அடியில் வகுப்பறைக்குத் தள்ளிய ஒதுக்குப் புறங்களில் பல டூஸ் ஜோடிகள் ஜொள்ளு விட்டுக்கொண்டிருப்பார்கள். சாப்பாட்டு நேரம் கூட சாப்பிட மறந்து கதைப்பார்கள். அப்படி என்ன கதைக்கின்றார்களோ எனக்குத் தெரியாது.(என்னை எனது நண்பி எப்போதும் தனக்குப் பாதுகாப்பிற்காகவே உபயோகப்படுத்தினாள். யாராவது ஆசிரியர் அந்தப் பக்கம் வந்தால் அவர்களுக்குச் சொல்லும் வேலை எனக்கு)
தொடக்கத்தில் எனக்கு ஒன்றுமாக விளங்கவில்லை. எனது தோழியுடன் சும்மா இழுபட்டுக்கொண்டிருபன். ஒருநாள் எனது தோழி சொன்னாள் நான் தன்னுடன் வருவது தனக்கு தன் டூஸ் அக்காவுடன் கதைக்க டிஸ்ரேபன்ஸா இருக்கு என்று என்னை அழைத்துப் போவதை நிறுத்தி விட்டாள்.
டூஸ் பற்றிய போதிய விளக்கம் எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனால் எனக்கும் ஒரு “டூஸ்” பிடிக்க ஆசையாக இருந்தது. இருந்தும் எனது வீட்டு நிலமை – அதாவது எனது மூன்று மூத்த சகோதரிகள் யாழ்ப்பாணத்தின் இன்னுமொரு மகளீர் கல்லூரியில் கல்வி கற்று வந்தார்கள். அவர்கள் வீட்டில் இந்த டூஸ் மார் அடிக்கும் கூத்தைப் பற்றி நக்கலாகக் கதைப்பார்கள். இது எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. இருந்தும் டூஸ் பிடிக்க ஆசை. ஆனால் எப்படிப் பிடிப்பது? நண்பியிடம் கேட்க கூச்சம். இப்படியான நாட்கள் ஏக்கத்தோடு நகர்ந்து கொண்டிருக்க ஒருநாள் எனது நண்பி சொன்னாள் தனது டூஸ் இன் நண்பி என்னைத் தனக்கு டூஸாக வைத்திருக்க ஆசைப்படுகின்றாள் என்று. நான் வெட்கப்பட்டு நெளிந்து, கிழிந்து சம்மதித்தேன். எனது நண்பியின் உதவியுடன் எனது டூஸ் இற்கு முதல் கடிதம் எழுதப்பட்டது.
அன்புள்ள ஜெயந்தி அக்கா,
நான் நலம் நீங்கள் நலமாக இருக்க இறைவனை வேண்டுகின்றேன் என்று தொடங்கி (இடையில் எழுதியதை மறந்து போய் விட்டேன்)
முடிக்கும் போது நிச்சயமாக எல்லோருடைய கடிதத்திலும்
ஆழ் கடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாத
என்று முடிந்திருக்கும்.
முதல் கடிதம் ஆகையால் மிகுந்த பயம், வெட்கம் எல்லாம் கலந்திருக்க கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கும் துணிவு இல்லாமல் போய் எனது நண்பி தான் கொடுத்து வருவதாகப் போனாள். போய்ச் சிறிது நேரத்தின் பின்னர் முகம் பேயறைந்தது போல் என்னிடம் வந்து அக்கான்ர கிளாஸ் டீச்சர் என்னைக் கூட்டிக்கொண்டு வரட்டாம் என்றாள். நான் கை,கால் உதற அங்கே போனேன். டீச்சர் என்னைப் பார்த்து விட்டு நீர் — மாஸ்டரின்ர மகளோ? என்று கேட்டார் (அப்பாவும் பாடசாலை ஆசிரியர்) நான் கண்களின் கண்ணீர் மல்க “ஓம்” என்பதாய்த் தலை ஆட்டினேன். இதென்ன கடிதம்? பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வாறனீங்களோ வேற என்னத்துக்கும் வாறனீங்களோ? என்று பலரின் முன்னால் அவமானப்படுத்தி தான் அப்பாவிடம் அந்தக் கடிதத்தைக் கொடுக்கப் போவதாக என்னை வெருட்டி அனுப்பி விட்டார். எனது முதல் “டூஸ்” உறவு முதல் நாளே முறிந்து போனது. அதன் பின்னர் ஒவ்வொரு நாளும் பாடசாலையால் வீட்டிற்கு வரும் போது மனம் திக்குதிக்கென்று அடித்துக் கொள்ளும். “டூஸ்” பிடிக்கும் ஆசை பின்னர் எழுவில்லை.
என் ஞாபகத்திற்கு எட்டியவரை. அனேகமாக எல்லா “Popular Girls” இற்கும் இந்த டூஸ் உறவு இருந்தது. ஆணைக் காதலிப்பது என்பது கெட்ட விஷயமாகப் பார்க்கப்பட்டதால் காதல் செய்ய விரும்பும் பெண்கள் தமது பெயரைக் காத்துக்கொள்ள ஒரு வடிகாலாக இந்த டூஸ் உறவை வைத்துக் கொண்டடிருக்கலாம். உடல்உறவு என்பது இங்கு சாத்தியம் இல்லை. ஆனால் மனதால் ஒருவகை சுயஇன்பம் காணும் தன்மையே இந்த டூஸ் உறவு எனலாம். அத்தோடு ஹொஸ்டலில் வசித்து வந்த அக்காமார் தமது டூஸ்சை ஹொஸ்டலுக்கு அழைத்துச் சென்று உடல் உறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று rumour இருந்தது. “டூஸ்” அக்காவிற்குத் திருமணம் நிச்சயமானபோது அதனைத் தாங்க முடியாமல் மருந்து குடித்த ஒரு மாணவி இருக்கின்றாள். ஒருவருக்கு உடல் நலமில்லாவிட்டால் மற்றவர் வகுப்பில் இருந்து அழுவது, (அவருக்குப் பத்துப் பேர் ஆறுதல் சொல்வது) ஒரு டூஸ் சை விட்டு விட்டு இன்னுமொருவரைப் பிடிப்பது. இப்படி காதலருக்கான அத்தனை அடையாளமும் இந்த உறவிலும் காணப்பட்டது. ஹோர்மோன் மாற்றத்தின் சேஷ்டைகளால் சுயஇன்பத்திற்கான தொடக்க நிலை இந்த உறவாகா இருக்கலாம்.
நான் அக்காவாகிய காலங்களில் இந்த உறவு முற்று முழுதாக கல்லூரிகளில் மறைந்து போய் விட்டது. காரணம் தெரியவில்லை.

Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. நான் பள்ளிக்கூடத்தில படிக்கும் போது இந்த விளையாட்டு இருந்தது. ஆனால் “டூஸ்” என்கிற வார்த்தைப்பிரயோகம் இதற்குப் பாவிக்கப்படவில்லை. நாங்கள் “Fan” (விசிறி) என்று தான் சொல்லுவோம். இதில் தமிழ்ப்பிள்ளை தமிழ் அக்காவிற்குத் தான் விசிறியாக இருக்க வேண்டிய நியதி இருக்கவில்லை. சிங்களப்பெண்ணாகவோ, முஸ்லிம் பெண்ணாகவோ இருக்கலாம். ஆரைப் பிடிக்குதோ அவங்களுடைய விசிறிதான். நானும் ஒரு அக்காவுக்குப் பின்னாலே வாலைப் பிடித்துக் கொண்டு திரிந்தேன். இப்ப நினைக்க சிரிப்பாக இருக்கு.

  கடிதங்கள் பரிமாறப்பட்டவையா என்று சரியாகத் தெரியவில்லை. சின்னச் சின்ன பொருட்கள், வாழ்த்து அட்டைகள் விசிறிகளால் கொடுக்கப்படும். சில வேளைகளில் மாறியும் நடந்திருக்கிறது. இப்பவும் பள்ளியில் இது தொடர்கிறதோ என்னவோ தெரியவில்லை. நான் A/L படித்த காலத்தில் இப்பழக்கம் குறைந்து போய்விட்ட மாதிரித் தெரிந்தது. ஒரு வேளை எனக்கு யாரும் வால் பிடிக்காத காரணத்தினாலாக இருக்கலாம் :oD

  அன்புடன் ஷ்ரேயா

  பின்னூட்டம் by 'மழை' ஷ்ரேயா — பிப்ரவரி 28, 2005 @ 1:54 பிப

 2. தனது சக டூஸை எப்படிப் பயன்படுத்துவார்கள்? விடுதிகளில் பயன்படுத்துவது போன்றா?

  பின்னூட்டம் by Moorthi — பிப்ரவரி 28, 2005 @ 8:06 பிப

 3. இது போன்ற நிகழ்வுகளை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பரவாயில்லை சுவாரஸ்யமாகவே உள்ளது!!!

  பின்னூட்டம் by சங்கரய்யா — மார்ச் 1, 2005 @ 12:11 முப

 4. This post has been removed by the author.

  பின்னூட்டம் by Chandravathanaa — மார்ச் 1, 2005 @ 12:43 முப

 5. எங்களுர் பாடசாலைகளில் பெண்களுக்கிடையில் இப்படியான நிகழ்வுகள் இருந்ததை இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.
  ஒருவேளை எனது பாடசாலை வேம்படி மகளிர் கல்லூரி போல இல்லாததாலோ தெரியவில்லை. வேம்படி பற்றி ஒரு தினுசாகச் சிலர் பேசுவார்கள். எங்கள் வடமாராட்சி இந்து மகளிர் கல்லூரியிலும் ஹொஸ்ரல் இருந்தது. எனக்கு அவர்களில் நண்பிகளும் இருந்தார்கள்.. ஆனால் இது போன்ற எந்த விதமான நடைமுறைகளும் எனக்குத் தெரிய அங்கு இருந்ததில்லை.

  பின்னூட்டம் by Chandravathanaa — மார்ச் 1, 2005 @ 12:44 முப

 6. ம்… பெண்டுகள் எல்லாரும் கதைக்க வெளிக்கிட்டிட்டியள். சுவாரசியமாத்தான் இருக்கு. சந்திரவதனா அக்கா சொன்ன மாதிரி வேம்படி, உடுவில், சுண்டுக்குளி மகளிர் கல்லூரியள் பற்றி பெடியளிட்ட பலகதையள் உலாவிறது தான். என்னத்தையும் எழுதுங்கோ. ஆனா “நாங்கள் எழுதியிட்டம் நீங்களும் எழுதுங்கோ” எண்டு எங்களக் கேக்காத வரைக்கும் பிரச்சினையில்ல. (அதுசரி! வேம்படியப் பற்றி கத வந்திட்டுது ஆனா ஆளக்காணேல.)

  பின்னூட்டம் by வசந்தன்(Vasanthan) — மார்ச் 1, 2005 @ 4:17 முப

 7. ம் மூர்;த்தி ஆசை தோசை அப்பளம் வடை.. நீங்கள் கேப்பீங்களாம் நாங்கள் சொல்வமாம்..
  சங்கராய்யா புதிய விடையங்களை அறிந்து கொள்ளுங்கள். நன்றி
  சந்திரவதனா ஆமாம் வேம்படியைப் பற்றிப் பல கிசுகிசுக்கள் இருந்தன. உண்மை எந்த அளவிற்கு என்று எனக்கும் தெரியாது. ஆனால் பரவலாக கொஸ்ரலில் இருக்கும் பெண்களை மற்றவர்கள் கேலி செய்வது எல்லாக் கல்லூரிகளிலும் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
  வசந்தன் ஆண்கள் பற்றி எனக்கு நிறையவே தெரியும். தாங்கள் எழுத வேண்டிய அவசியம் இல்லை. எல்லா ஆண்களுமே 13 14 வயதில் ஒரு மார்க்கமாக இருந்து பின் வெளிவருவார்கள் என்பது நான் அறிந்து கொண்ட உண்மை. பெண்களை விட ஆண்களுக்கு ஓரினச்சேர்க்கையில் அதிக அனுபவம் இருப்பதாகக் கூறுகின்றார்கள். (எல்லா ஆண்களுக்கும்) நான் கேள்விப்பட்டதுதான் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 1, 2005 @ 6:32 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: