கறுப்பி

மார்ச் 10, 2005

ராஜகுமாரனும் நானும்..

Filed under: Uncategorized — suya @ 11:24 முப

இரவு அடங்கிப் போகும் நேரம். காற்றின் ஒலி மட்டும் கேட்டது. மல்லிகை மணந்தால் எப்படியிருக்கும்?

நான் கிறங்கினேன். ஒன்று இரண்டு வாகன ஒலி மட்டும் கேட்டபோது எனக்குக் கோபம் வந்தது. குளம்பொலி எங்கே? எனக்கு வேண்டியது அதுதான்.

தனிமை.. தனிமையால் வதைபடுகின்றேன்.. எங்கே என் ராஜகுமாரன்? இன்று வரமாட்டானோ.. மனம் வலித்தது.. வருவான். நிச்சயம் வருவான். அவனில் எனக்கு நம்பிக்கை இருந்தது. நேரம் போகப்போக குழப்பத்துடன் கூடிய கோபம் வந்தது.. வருவான் அவன் வருவான்.. நம்பிக்கையுடன் உடைகளைத் தளர்த்தி விட்டேன்.. கண்மூடிச் சிறிது சோகித்து.. கண் திறந்த போது அவன் நின்றுகொண்டிருந்தான்.. என் ராஜகுமாரன். அதே கம்பீரம் கலந்த குறும்புச் சிரிப்பு. நான் சிரிக்கவில்லை.. முகத்தை உம்மென்று தூக்கி வைத்துக் கொண்டேன்.
“கோபமா?”
நான் பேசவில்லை
“என் கண்மணிக்கு என் மேல் கோபமா?” குழைந்தான்.
என் வயிற்றில் புளி கரைந்தது. இருந்தும் நான் மசியவில்லை.
“என் கண்ணம்மா” நெற்றியில் முத்தமிட்டான்.
நான் கரைந்து போனேன். “ம் நேற்று ஏன் வரவில்லை?” கேட்டேன்
தலை குனிந்தான்.
என் கோபம் தலைக்கு ஏறியது. “அப்படியென்றால் நீ வேறு யாருடனாவது?” நான் முடிக்கவில்லை.
“ஐயோ என்ன இது” தன் இரும்புக் கரம் கொண்டு என் இதழ் பொத்தினான். எனக்கு வலித்தது. சுகமாகவும் இருந்தது. நான் அவன் விரல் நனைத்தேன். புன்னகைத்தான். மீண்டும் கேட்டேன்.
“நேற்று ஏன் வரவில்லை?”
அவன் கண்கள் கலங்கிற்று. இறுக்கமாகத் தன் இதழ் கடித்தான். நான் துடிதுடித்துப் போனேன்.
“மன்னித்துவிடு நான் கேட்கவில்லை நீ காரணம் சொல்ல வேண்டாம்”
“நான் வந்திருந்தேன் ஆனால்” அவன் நா பிரண்டது.
“வந்திருந்தாயா? எப்போது? நான் குழம்பிப் போனேன். “வந்திருந்தால் ஏன் என்னிடம் நீ பேசவில்லை?”
“நான் வந்திருந்தேன் ஆனால் நீ பல் கடித்துக் கண்ணீர் விட்டபடியிருந்தாய் என்னால் சகிக்க முடியவில்லை. போய்விட்டேன்”.
நான் விக்கி விக்கி அழத்தொடங்கினேன்.
“என் செல்லக் கண்ணம்மா என் ராசாத்தி எதற்காக வதைபடுகின்றாய் போய் விடு. ஓடிவிடு இங்கிருந்து. என்னால் தாங்கமுடியவில்லை.” விம்மினான்
“உன் மாளிகையில் எனக்கு இடமுண்டா?”
“நிச்சயமாக வந்துவிடு என்னுடன்”
“நான் மட்டுமா? இல்லை குழந்தைகளையும் அழைத்து வரவா?”
“இது என்ன கேள்வி. உன் குழந்தைகள் எனக்கும் குழந்தைகள் தானே”.
மாளிகை எப்படியிருக்கும்? இது கனடா மாளிகை கற்பனைக்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டேன்.

“என்ன அதுக்கிடேலை படுத்திட்டியே?” வில்லன் குரல். என் கற்பனை கலைந்தது. நான் அவசரமாக மூச்சை இழுத்துவிட்டேன். சிறிது குறட்டை விட முயன்றேன் முடியவில்லை.
“ஓரு பிசாசு ஒண்டு வந்து வாச்சிருக்கு. எனக்கு ஒண்டுக்கும் லாக்கில்லை. எப்ப பாத்தாலும் மூசி மூசி நித்திரை கொள்ளத்தான் தெரியும்”. பியர் வாடை கப்பென்றடித்தது.
ராஜகுமாரன் போயிருப்பான். அவனால் இதையெல்லாம் சகிக்கமுடியாது. எனக்குள் பெருமூச்சு எழுந்தது. இருந்தும் நித்திரை போல் நடிப்பதில் குறியா இருந்தேன். பின்னால் எதுவோ ஊர்ந்தது. எனக்கு அருவருத்தது. சிறிது விலகிக் கொண்டேன்.
“வாடி இஞ்ச” அணைக்க முயன்றான். அவன் முரட்டுக் கரம் பட்டு விழித்தது போல் நடித்தேன்.
“எனக்கு நித்திரை வருகுது நாளைக்கு வேலைக்குப் போகவேணும்”.
“ஏன் நானும் தான் வேலைக்குப் போகவேணும். இவ மட்டும்தான் உலகத்திலேயே வேலைக்குப் போறா”. நக்கலாய்க் கூறிய படியே இதழ் தேடினான்.
“எனக்கு வயித்துக்க நோகுது என்னால இண்டைக்கு ஏலாது” தள்ளிப்படுத்தேன்.
“உனக்கு எப்பதான் ஏலும்? இதைத்தானே நெடுகலும் சொல்லுறாய்” அவன் கை உடல் அளைந்தது. முழங்கை கொண்டு அவன் நெஞ்சில் இடிக்கத் தோன்றியது. கட்டுப்படுத்திக் கொண்டேன். அவசரப்பட்டால் காயப்படப்போவது நான்தான்.
“என்னால ஏலாது நேற்றைய நோவே இன்னும் போகேலை” விலகிக் கொண்டேன். அவன் ஏளனமாச் சிரித்தான்.
“நேற்றோ! நேற்று என்னடி செய்தனி மரக்கட்டை மாதிரிக் கிடந்து போட்டு. ஏண்டி உனக்கு வேற யாரோடையாவது சினேகிதமே” தொடங்கி விட்டான். இனி அவன் பேசும் பேச்சுக்கள் காது கொண்டு கேட்க முடியாமல் இருக்கும்.
“என்ன கேக்கிறன் பேசாமல் கிடக்கிறாய்? சொல்லு. வேலைக்குப் போறன் எண்டிட்டு யாரிட்டையாவது போய் மேஞ்சு போட்டு வாறாய்?”
“சும்மா இருக்கிறீங்களே ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்கள்?”
“அப்ப என்னோடையும் படுக்க மாட்டன் எண்டுறாய் வேறு ஒருத்தரோடையும் தொடர்பில்லை எண்டால். என்ன நீ…?”
“ஐயோ என்ன இது”. நான் காதுகளைப் பொத்திக் கொண்டேன். என் கண்கள் கலங்க மங்கலாக அவன் தெரிந்தான். ராஜகுமாரன் போகவில்லை இங்கேதான் நிற்கிறான்.
“ராஜகுமாரா! ராஜகுமாரா!” நான் புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடி விட்டான்.
“கூறிவிடு! என்னைப்பற்றி அவனுக்குக் கூறிவிடு” என்னை அணைத்துக் கொண்டான்.
“இல்லை ராஜகுமாரா, சொன்னால் உன்னையும் என்னிடமிருந்து பிரித்து விடுவான் என் வாழ்வில் எனக்குத் துணையாக இருக்கும் ஒரே ஜீவன் நீதான். உன்னை நான் இழக்க மாட்டேன்”.
குறட்டை கேட்டது. அப்பாடா அவன் தூங்கிவிட்டான்.
“என்னுடன் வந்துவிடு” ராஜகுமாரன் கேட்டான்.
“எப்படி?” கண்ணால் வெளியே காட்டினான். எட்டிப்பார்த்தேன். வெள்ளைக் குதிரை வாலை ஆட்டியபடி நின்றது.
“சரி” என்றேன். என்னை வாரி எடுத்துக் குதிரையில் இருத்தினான். அவன் மாளிகை என் வீடு போலவே இருந்தது. பொருட்கள் எல்லாம் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது.
“இன்று ஓவர் ரைம் செய்து வீட்டி வேலை எல்லாம் செய்து களைத்திருப்பாய் இதைக் குடி“ நீட்டினான். ஆவி பறக்கும் தேன் கலந்த பால். குடித்தேன்.
“காலை வேலைக்குச் செல்ல வேண்டும் படுத்துக் கொள்“
“நீ“
“நானும் தான்“ என்னை இழுத்து முத்தமிட்டு “குட்நைட“; என்றான். நான் மனம் நிறைந்து போக நித்திரையானேன்.
“நித்திரை கொண்டது காணும். போ! போய் ஒரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா“ நான் விழித்துக் கொண்டேன். பம்பரமானேன். வழமை போல. வெறுத்தது. வாழ்வு வெறுத்தது. எங்கே என் ராஜகுமாரன். தேனீர் கலக்கும் போது பின்னால் நின்று அணைத்துக் கொண்டான்.
“நான் தேனீர் கலக்கிறன் நீ குழந்தைகளின் வேலையைப் பார்“ என்றான். முரட்டுப்பிடியைத் தளர்த்தாது.
“ச்சீ! என்னடா இது பட்டப்பகலில“ நான் நெகிழ்ந்தேன்.
“என் கண்ணம்மாவை நான் எப்போது வேண்டுமானாலும் அணைத்துக் கொள்வேன்“ பிடி மேலும் இறுகியது.
“ஆ“
“என்னடி தேத்தண்ணி கேட்டாக் குசினிக்க நிண்டு தானாக் கதைக்கிறாய்“
“ச்சீ போ“ நான் ராஜகுமாரனின் பிடி விலக்கி விரைந்தேன். ராஜகுமாரன் போய் விட்டான். வருவான். இன்று இரவு மீண்டும் வருவான். பகல் வேளை ஒரு பிசிறு மாறாமல் ஒவ்வொருநாளும் ஒரே மாதிரி முடிந்து போனது. நான் களைத்துப் போனேன். குழந்தைகளைப் படுக்க வைத்து விட்டு கட்டிலுக்கு வந்தேன். வழமை போல் அவன் இல்லை. வருவான் பாதி இரவில் பாதி போதையில் வருவான். நான் அவனை என் நினைவிலிருந்து அகற்றினேன். இது ராஜகுமாரனின் நேரம். அவனுக்காக நான் காத்திருக்கும் நேரம். நான் உடைகளைத் தளர்த்திக் கொண்டேன். ராஜகுமாரன் வந்தான். நான் அவன் முகம் தேடினேன். போனவாரம் திரையில் பார்த்த ஜாடை கொஞ்சம். மூன்று நாட்கள் முன்பு வீடியோவில் பார்த்த முகம் கொஞ்சம். நண்பி வீட்டிற்கு வந்து போன இளைஞனின் முகம் கொஞ்சம். சரியாக முடிவெடுக்க என்னால் முடியவில்லை. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஆனால் பிடித்திருந்தது.
“என்ன?’ நான் குழைந்தேன்.
“நீ அழகாக இருக்கிறாய்“ என்றான்
“ஆ! நீயும் தான்“ என் உடல் உஷ்ணம் உணர்ந்தேன். அருகே வந்தான். நான் இருகை நீட்டினேன். அவன் முகம் நோக்கி. கதவு திறந்து கொண்டது. தள்ளாடியபடியே அவன் வந்தான். வில்லன். என் உடலின் உஷ்ணம் அடங்கிக் கொண்டது. கண் மூடினேன். அவசரமாக தொம் என்று கட்டிலில் விழுந்தான். இறுக என்னை அணைத்துக் கொண்டான். நான் விலக முயன்றேன். முடியவில்லை. நான் திணறினேன்.
“ராஜகுமாரா! ராஜகுமாரா காப்பாற்று என்னை“ புலம்பினேன். ஓடிவந்து என் தலை வருடியபடியே
“காலால் உதைத்து விடு“ கத்தினான். முயன்றேன் நான். முயன்றேன். முடியவில்லை. செய்வதறியாது தடுமாறினான் ராஜகுமாரன்.
“என் கண்ணே என் ராசாத்தி“ என் நெற்றியில் முத்தமிட்டான். நான் நான் பரிதாபமான அவனைப் பார்த்தேன். என்னை இறுக அணைத்துக் கொண்டான். அவனின் ஸ்பரிசம் சுகமாக இருந்தது. நானும் அவனை அணைத்துக் கொண்டேன். ராஜகுமாரன் தன் இதழ் கொண்டு என் உயிர் குடிக்க நான் கிறங்கிப் போனேன்.

உயிர்நிழல் -2000

Advertisements

1 பின்னூட்டம் »

  1. நீஙளும் சுமதி ரூபனும் ஒருவரா? திண்ணையில் உள்ள அவரது படைப்புகளும்,இங்கும் ஒரே மாதிரியான சொற்பிரயோகங்களை காண்கிண்றேன்.கொஞ்சம் அந்தரங்கமான விஷயம்தான்.இருப்பினும் இருவரும் ஒருவர் எனில் வினவுகிறேன்

    பின்னூட்டம் by Vaa.Manikandan — ஏப்ரல் 12, 2005 @ 11:47 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: