கறுப்பி

மார்ச் 17, 2005

நடி(க்கிற)கை வாழ்க்கை

Filed under: Uncategorized — suya @ 10:19 முப

நாராயணனின் சிலுக்கு சிமிதா புராணம் படித்தபோது யாரோ நெஞ்சில் ஓங்கி உதைந்தது போல் உணர்ந்தேன். (பலருக்கும் இப்படி உணர்ந்திருப்பார்கள்- ஆண்கள் குற்ற உணர்வால் – பெண்கள் பாதிக்கப்பட நேர்ந்ததால்).
இந்திய தமிழ் சினிமாவில் தமக்கென்று ஒரு இடம் பிடிப்பதென்றால் எவ்வளவு சிரமம் என்று வந்து முகம் காட்டிவிட்டுப் போவோரின் எண்ணிக்கையில் இருந்து தெரிகின்றது. இருக்க – சில்க்- இன்றும் பலரின் நினைவில் நிற்கும் படியாகத் தனது பெயரைத் தக்கவைத்து விட்டுச் சென்றுள்ளார். நிச்சயமாக இது அவருக்குப் பெருமையே. நடிக்க வந்த எந்த ஒரு நடிகையும் சினிமா உலகைப் பற்றி குறைசொல்லாமல் இருந்ததில்லை. (சுகாசினி தவிர – குடும்பமே சினிமாவிற்குள் இருப்பதால் பாதுகாப்பு இயல்பாகவே கிடைத்திருக்கும்) இருப்பினும் அதிஸ்டம் இருப்பின் பெயர்,புகழ்,பணம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய ஒரு தளம் இது. சில்க் மற்றைய கவர்ச்சி நடிகைகளைப் போலல்லாது பல முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். கவர்ச்சி நடிகைகளில் இப்படியா வரவேற்று வேறு ஒருவருக்கும் கிடைத்ததில்லை.

சோபா,பாடாபட்,விஜி, மோனல் என்று தற்கொலை செய்து கொண்ட நடிகைகளுள் சில்க் மட்டுமே கவர்ச்சி நடிகை, எனவே கவர்ச்சி நடிகைகளுக்குத்தான் சினிமா உலகம் சிரமம் கொடுக்கின்றது என்றில்லை. சினிமா உலகத்திற்குள் பல கனவுகளுடன் நுழையும் எல்லாப் பெண்களுக்குமே இந்த உலகம் சிரமத்தைத்தான் கொடுக்கின்றது. இதற்கு முதல் காரணம் வறுமை. தம் வாழ்க்கையை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்தால் வறுமையைப் போக்கலாம் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். (இதையெல்லாம் நடிகர் சங்கம் எங்கே கண்டு கொள்ளப்போகின்றது) முன்னணி,பின்ணனி என்றில்லாமல் எல்லா நடிகைகளுமே இயக்குனரில் இருந்து அவருக்கு வேண்டப்பட்டவர்களின் கைகளில் விளையாட்டுப் பொம்மையாகி வருகின்றார்கள் என்று நடிகை ரம்பாவின் பேட்டி ஒன்றில் படித்ததாய் ஞாபகம்.

அண்மையில் என் நண்பன் நடிகை “த்ரிஸா” விற்கு நடந்த பாத்ரூம் கொடுமையைப் பற்றிக் கூறி அந்த வீடியோ மிக எளிதில் இணையத்தளத்தில் பார்க்கக் கூடியதாக இருப்பதாகக் கவலைப்பட்டான். த்ரிஸா மனம் உடைந்து போகாமல் அதனைக் கையாண்ட விதம் எனக்கு அவர்மேல் மிகுந்த மதிப்பை உண்டாக்கியிருக்கின்றது. (உடைய வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவர் கொடுத்த செருப்படி இது) இவரைப் போல் மனவலிமை எல்லாப் பெண்களுக்கும் இருந்தால் ஆண்களின் வாலாட்டல்களை எளிதாக நறுக்கிவிட முடியும்.

இந்திய தமிழ் சினிமா உலகை விட்டு கொஞ்சம் கடல்தாண்டி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் கலைஉலகம் பற்றிப் பார்ப்போம்.

முன்பு போலல்லாது மேடை நாடகங்களில் பல தமிழ்ப் பெண்கள் தாமாகவே நடிக்க முன்வருகின்றார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. கடந்த 7 வருடங்களாக கறுப்பியும் ஒவ்வொரு வருடமும் ஒரு மேடை நாடகத்தில் நடித்துத் தான் வருகின்றாள். எனது தெரிவிற்கேற்ப முற்போக்கு மாறுபட்ட சிந்தனைகள் கொண்டு சமூகச் சீரழிவுகளை முன்நிலைப்படுத்தும் ஆரோக்கியமான நாடகங்களில் நடித்து வருவது எனக்குப் பெருமையாகவே இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் நாடக அமைப்பில் இருந்து இயங்கும் ஆண்களும் பெண்களும் என்று கூறலாம். முக்கியமாக ஆண்கள் தயங்கி நிற்கும் பெண்களுக்கு நம்பிக்கை தரும் வண்ணம் நடந்து கொள்ளும் முறை. (“சட்டையை இழுத்து விடுங்கள் விலகி நிற்கின்றது” என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெண்களை மதிப்பவர்கள்) இருப்பினும் களை போல் ஒருசிலர் வந்து போவதைத் தடுக்கமுடியாமல் இருக்கின்றது.

முற்போக்கானபெண்கள்,பெண்ணியம் கதைப்பவர்கள், ஆண்களுடன் சரளாமாகப் பழகி தண்ணி அடித்து fun அடிப்பவர்கள் (சுதந்திரமாக தமக்குப் பிடித்த எதையும் செய்பவர்கள்) எனும் பதத்தைப் சிலரால் புரிந்து கொள்ளமுடியாமல் இருக்கின்றது. அவர்கள் கண்களுக்கு இந்தப் பெண்கள் வெளியில் வந்தவர்கள். இவர்கள் எதையும் செய்வார்கள். (செய்கின்றார்கள்) எனவே நானும் ஒரு முயற்சியைப் போட்டுப் பார்ப்போம் பாணியில் தமக்கே உரித்த ஆண் தனத்துடன் பெண்களை அணுகும் “புல்லுருவி”களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்களை அடையாளம் கண்டு துவண்டு விடாமல் தூக்கி எறியும் மனபலம் பலருக்கு இருப்பதில்லை. உடனே பிரச்சனை எதற்கென்று விலகிக் கொள்கின்றார்கள். பெண்கள் ஆண்களின் காமம் பிடித்த கண்களால் அழையப்படுவது தவிர்க்க முடியாதது. அதை அசட்டை செய்து தூசுபோல் தட்டிவிட்டால்?

நாகரீகமாக ஒரு பெண்ணை அணுகி எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று துணிவாகச் சொல்லும் ஆண்களை எப்போதும் நான் மதிக்கின்றேன். அதை விடுத்து ராமர் வேஷம் போட்ட படியே எப்போது எது விலகும் கொஞ்சம் கடைக்கண்ணால் பார்த்து என் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அலையும் “நாயுண்ணி” கள் தான் என்னைக் கோவத்தின் உச்சத்திற்குத் தள்ளுபவர்கள்.

நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா?

Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. தவறான நடக்கும் ஆண்கள் பற்றித் தாங்கள் தங்கள் அமைப்பில் இருப்பவர்களுக்குத் தகவல் சொல்லவில்லையா?

  பின்னூட்டம் by Anonymous — மார்ச் 17, 2005 @ 12:53 பிப

 2. கறுப்பி உங்களின் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லாதபோதும் (ஒருவரிடைய குணம், அவரது பிறப்பால், வளர்ப்பால் வருவது என்று கூறுவது உட்பட) நீங்கள் உங்களவில் நேர்மையாக பல பதிவுகளை எழுதுவதை வரவேற்கின்றேன்.
  இது நல்லதொரு பதிவு. எவ்வளவுதான் பெண்களை புரிந்துகொண்டு ஆண்கள் எழுத முயற்சித்தாலும், பெண்கள் நேரடியகச் சொல்வது போல வராது. நாடகத்தில் ஒரு பெண் பங்கேற்பதிலுள்ள பிரச்சனைகள் பற்றிய எழுதிய இந்தக்குறிப்பு முக்கியமானது. வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது நாடகத்தில் ஆர்வமுள்ள சில தோழியருக்கும் நீங்கள் கூறியமாதிரியான சம்பவங்கள் நடந்ததைக் கண்டிருக்கின்றேன்.
  //நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //
  தெரியவில்லை. ஆனால் அப்படி நெஞ்சைத்தான் ஆண்கள் பார்க்கிறார்கள் என்று தெரிந்தால், தூசைப்போல உதறித்தள்ளிவிட்டு பெண்கள் போய்விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

  பின்னூட்டம் by டிசே தமிழன் — மார்ச் 17, 2005 @ 1:03 பிப

 3. நீங்கள் ஆணா பெண்ணா தெரியவில்லை. இதற்கும் ஆண்களா??தேவை என்ர ஜோலியை நான் பார்க்க மாட்டேனா? கையாளத்தான் மாட்டேனா?

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 17, 2005 @ 1:03 பிப

 4. தங்களுடைய கருத்துக்கு நன்றி டிசே. தொடக்கத்தில் இந்த ஆண்களில் நடத்தையால் பல இரவுகள் நித்திரை இழந்தவள் நான். விலகி விடவேண்டும் என்று கூடச் சில நாட்கள் சிந்தித்ததுண்டு. விலகல் என்பது கோழைத்தனம் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளேன். இந்த உலகம் அழுக்கால் ஆனாது. நாம் திடமாக இருந்தால் பட்ட அழுக்கைக் கழுவி விடலாம். விலகிப் போகின் பயம்தான் எம்மைச் சு10ழ்ந்து கொள்ளும்.

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 17, 2005 @ 1:10 பிப

 5. நல்ல பதிவு.

  //நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //

  சொல்ல வேண்டும். நம் பெண்களுக்கு இன்னமும் தைரியம் வேண்டும்.

  பின்னூட்டம் by மதி கந்தசாமி (Mathy) — மார்ச் 17, 2005 @ 3:58 பிப

 6. கறுப்பி, உங்களின் கருத்துக்களில் டிசே போல் எனக்கும் லேசாக சில இடங்களில் இடிக்கிறது. இன்றைய சூழ்நிலையில், நவீன நாடக அமைப்பில் பெண்ணிருப்பு தவிர்க்க இயலாத அங்கம். நான் பார்த்த வரையில் (சென்னை மட்டுமே…மற்றும் தமிழகத்தில் பிற கல்லூரிகள்)நவீன நாடக குழுக்களில் இப்போது நிறைய பெண்முகங்களைப் பார்க்கிறேன். இங்கே எங்களூரில் விஜய் தொலைக்காட்சி என்ற ஒரு ஸ்டார் தொலைக்காட்சியின் அங்கமொன்று உண்டு. இதுவும் ஒரு தமிழ் தொலைக்காட்சி, இதில் வரும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள், கூத்துப்பட்டறை, மேஜிக் லாண்டர்ன் போன்ற நவீன நாடகக்கூடங்களிலிருந்து வந்தவர்கள். இதில் பெண்முகங்களும் உண்டு என்பது தான் முக்கியமான தகவல்.
  ////நெஞ்சைப் பார்த்துக் கதைப்பவனின் முகத்தை உயர்த்தி எனக்கு முகம் இருக்கு முகத்தைப் பார்த்துக் கதை என்று பெண்கள் சொல்ல வேண்டும். சொல்வார்களா? //
  இதற்கு டிசேயின் கருத்துக்களோடு உடன் படுகிறேன். அதையும் தாண்டி, நா.கண்ணன் என்பதிவிலிட்ட ஒரு விசயத்தையும் பார்க்க வேண்டியதிருக்கிறது. இது நா.கண்ணன் இட்ட பின்னூட்ட பாதி
  //Desmond Morris எழுதிய Man Watching எனும் புத்தகத்தில் ஆண்/பெண் இவர்களின் கண் பார்வை போகும் பிரதேசங்களை ஆய்வு பூர்வமாக ஆராய்ந்து வெளியிட்டுள்ளார். எங்கு நம் எல்லோரின் பார்வை போகும் என்பது உங்கள் யூகத்திற்கே. உயிரியல் ரீதியாகவும் நாம் பாலுறுப்புகளிடம் ஈர்க்கப்படுகிறோம்.//

  இது ஒரு பெரும் விவாதம். உந்துதலால் ஆணாகிய நான் பார்க்கிறேனா அல்லது உயிரியல் ரீதியாக சுஜாதா சொல்லுவது போல் ஹார்மோன்களின் உரசுதலால் பார்க்கிறேனா?

  இதே சொல்லும் அதே நேரத்தில் சாதாரணமாய் பார்ப்பதற்கும், “இவ மாட்டுவாளா” என்று பார்ப்பதற்குமுள்ள வித்தியாசம் ஒரு பெண்ணிற்கு ஒரே பார்வையிலேயே தெரிந்துவிடும் என்பது என் யூகம். பெண்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

  பின்னூட்டம் by Narain — மார்ச் 17, 2005 @ 7:51 பிப

 7. நரேன் நீங்கள் சொல்வது எனக்குப் புரிகின்றது. நான் சொல்வதும் அதைத்தான். ஒரு பெண்ணில் (வயது பற்றி இங்கே நாம் கண்டு கொள்ளத் தேவையில்லை) ஒரு ஆணுக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதே போல்த்தான் பெண்ணிற்கும் உண்டு. எனக்குப் பல ஆண் நண்பர்கள் இருக்கின்றார்கள். என் அன்றைய தோற்றம் பற்றி – அதாவது இண்டைக்கு நல்ல வடிவாய் இருக்கிறாய்.. இல்லாவிட்டால் என்ன முகம் எல்லாம் வீங்கி ஒரு மாதிரி இருக்கிறாய்.. இல்லாவிட்டால் உடம்பு வைத்துவிட்டது. இந்த உடுப்பு நல்லா இருக்கு.. தலைமயிர் இன்று நல்லா இல்லை. இத்யாதி இத்யாதி விமரச்சனங்களை வைப்பார்கள். இவை எனக்கு ஒரு போதும் சங்கடத்தைத் தருவதில்லை. அதே போல் நானும் அவர்களுடன் கதைப்பதுண்டு. ஏன் சங்கடமற்று சகஜமாக செக்ஸ் ஜோக்ஸ் கூட அடிப்போம். இது பரஸ்பரம் எங்களுக்கான புரிந்துணர்வு. நான் விமர்சித்தது இவர்களையல்ல
  எனக்கு நடந்த ஒரு சிறிய சம்பவத்தை இங்கே கூறுகின்றேன். ஒரு பார்ட்டி பல நண்பர்களுடன் கூடி இருந்தோம். பல புதிய ஆண்களும் வந்திருந்தார்கள். அதில் ஒருவர் எனக்கு அதிகம் பழக்கமில்லை. அடிக்கடி அருகில் வந்து எனது எழுத்து நடிப்பு என்பன பற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தார். (இதைச் சொல்ல இவர் ஏன் இவ்வளவு நெருக்கமாக வருகின்றார் என்ற கேள்வி எனக்குள்) நான் அவரைத் தவிர்த்து மற்றைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தேன். சிறிது நேரத்தின் பின்னர் பீட்சா வந்தது. எல்லோரும் சாப்பிட்டோம். நான் ஒரு துண்டை எடுத்துக் கடித்து விட்டு அது எனக்குப் பிடிக்காததால் அதை எனது நண்பனிடம் நீ சாப்பிடுகிறாயா என்று கேட்டு ஒரு கரையில் வைத்துவிட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொண்டு போய் விட்டுத் திரும்பிப்பார்க்க நான் மேற்கூறிய அந்த ஆண் நான் பார்க்கும் போது நான் கடித்த அந்த பீட்சா துண்டை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கடித்த பகுதியை தனது நாக்கால் வருடிய படி என்னைப் பார்த்து ஒரு காம லுக்கு விட்டார். எனக்கு ஓங்கி அறையலாம் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டேன். எனது நண்பன் வீட்டில் எதற்குப் பிரச்சனை. அன்று இரவு என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை. நான் மேற்குறிப்பிட்ட மனிதர் திருமணமானவர். அதன் பின்னர் என்னை வேறு இடங்களில் சந்திக்கும் போது தனது மனைவியை எனக்கு அறிமுகப் படுத்தி மிகவும் பௌவியமாக நடந்து கொண்டார். ஏன் இந்த வேஷம். (இதற்குள் தான் குடிப்பதில்லை சிகரெட் பிடிப்பதில்லை என்ற பெருமிதப் பேச்சு வேற)

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 18, 2005 @ 7:47 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: