கறுப்பி

மார்ச் 18, 2005

பிளாஸ்டிக்…

Filed under: Uncategorized — suya @ 8:38 முப

விண்ணென்று விறைத்ததுபோல் அசையாதிருந்தேன் கட்டிலில். எட்டி எட்டிப் பார்த்துச் சென்றன என் செல்வங்கள். ராகம் போட்டு வாய் பிளந்து பால் வடிய சிரித்துக் கொண்டிருந்தது இன்னுமொன்று பக்கத்தில். என் கடுப்பு எவ்வளவு நேரம். சிதைந்து விடும் விரைவில். இதுதானே என் சுபாவம். எல்லை என்பதாய் ஏதோ வரும். பின்னர் புஸ்ஸென்று மறைந்து விடும். இன்றும் சில மணிநேரம் சிந்திக்கக் கிடைத்தால் ஏதும் செய்து விடுவேனோ என்று அஞ்சியே காலங்கள் கரைந்து கொண்டிருந்தன. இன்றும் அதுபோல் தான்.
பட்டு வேட்டி அவன் உடுத்தாயிற்று.. பட்டில் என் செல்வங்களும் பழபழத்தன. இனி பட்டுடுத்தி பிளாஸ்டிக் பொட்டு பூ வைத்து நானும் புறப்பட வேண்டும். இது எழுதாத எழுத்து. குளிரோ வெய்யிலோ வார இறுதியில் முதுகு கனக்கும் பாரத்துடன் நீண்ட பயணம் போல் கழிந்து கொண்டிருந்தது. பையைத் திறந்து பார்த்தேன். பால் போத்தல், போத்தல்சாப்பாடு, டயப்பர், வீணீர் துடைக்கும் துண்டு, சு10ப்பி, மாற்றுடுப்பு, கம்பளி என்று கச்சிதமாய் எல்லாம் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன் நிறைவாய்ச் சிரித்தான். எப்படிக் குறைகாண. மை நிரம்பிய கண்களுடன் தொடர்ந்தேன் அவனை. தூக்கிப்பிடித்த பட்டுப்பாவாடையுடன் ஓடிச்சென்று காருக்குள் தம்மைப் புகுத்திக்கொள்ளும் என்ர பெட்டைகளின் சிரிப்பை விட என்ன வேணும் எனக்கு. என் முகத்திலும் புன்னகை.
வியர்வை முகத்திலிருந்து வழிந்து கழுத்தால் எதையோ தேடி உள்ளே சென்றது. வாள், வாள் என்று கத்திமுடித்து விம்மலுடன் நித்திரையாய் போயிருந்தான் என் மகன். பட்டிண்கள் கழன்ற மேற்சட்டையுடன் ஓடித்திருந்துகொண்டிருந்த என் பெட்டைகள், குத்துவிளக்கடியில் வரும்போது மட்டும் தானாகவே தலைதிருப்பிக் கண்காணித்துக்கொண்டிருந்தான் நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டிருந்த என் கணவன். வயிறு முணுமுணுத்தது இன்னும் பொம்பிள்ளையே மணவறைக்கு வரவில்லை.. குடிக்கவாவது ஏதாவது தரலாமே. பச்சை உடம்புக்காரி. என்ர பெட்டைகளுக்கு சொந்தங்கள் இல்லாத இடத்திலதான் மாப்பிள்ளை எடுக்கவேணும். எல்லாமே போலியாயிருந்தது. அந்த எல்லை வந்துவிடுமோ என்று அஞ்சி மகனை அணைத்தபடி மேலோட்டமாய் பார்வையை ஓடவிட்டேன்.. பட்டுக்களின் நிறங்கள் இப்போதெல்லாம் எனக்குப் பயத்தைக் கொடுத்தன. ஓடிய பார்வையில் பலமுகங்கள். தெரிந்தவை தெரியாதவை எல்லாமே எனக்குப் பிடிக்காததாய். ஏனிந்த தண்டனை எனக்கு. அலுப்பு வாசல் வரை வந்தபோது அவன் கண்களை நான் சந்தித்தேன். பார்வை அவனைக் கடந்தபோது அவன் பார்வை என்னில் உற்று நிப்பது தெரிந்தது. குனிந்து பார்த்தேன் சீலை சரியாகவே இருந்தது. திரும்பிப்பார்த்தேன் சுவர்தான் தெரிந்தது. அவன் புன்னகைத்தான். என்னை நோக்கி நடக்கத்தொடங்கினான். நான் எதேட்சையாய் முகத்தை வைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்தவளிடம் எதையோ கேட்டு வைத்தேன் அவள் என்னை வினோதமாகப் பார்த்தாள். நான் சிரித்தேன். அவன் கால்கள் என் கண்களுக்குள் தெரிந்தது. கறுப்பு சப்பாத்து, கறுப்பு பாண்ஸ், கோட் கச்சிதமாய் இருந்தது.
வேட்டியுடன் இன்னும் அழகாய் இருப்பான். நான் பேசாமல் இருந்தேன். அவன் சிரித்தான் பின்னர் கேட்டான் “நீ.. நீங்கள் மேகலாதானே..”? நான் திடுக்கிட்டு என் கணவனைப் பார்த்தேன் அவன் ஆழமாக எதையோ நண்பர்களுடன் வாதித்துக்கொண்டிருந்தான்.. அனேகமாக இலங்கை அரசியலாய் இருக்கலாம். இனி அவன் என்னைத் திரும்பிப்பார்க்கக் பல மணிநேரங்களாகும். பெட்டைகளும் மூலையில் இருந்து வேறு குழந்தைகளுடன் நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டி விளையாடிக்கொண்டிருந்தன. எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த விளையாட்டுத் தெரிந்திருந்தது எனக்கு அதிசயமாய் இருந்தது. எல்லா வீட்டிலும் அப்பம்மா இருக்குப்போல.. நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்த மகனை சும்மா ஆட்டினேன். ஊரிலும் கனடாவில் நான் போன பாடசாலைகள் வேலைத்தளங்கள் திருமணங்கள் சாவீடுகள் என்று ஒரு முறை நினைவிற்குக் கொண்டு வர முயன்றேன்.. இந்தக் கருப்புக் கோட்டுக்காரனின் முகம் தட்டுப்படவில்லை. அவன் சிரித்தான்.
“என்ன நான் கேட்டதுக்குப் பதிலைக் காணேலை”
பக்கத்தில் இருந்தவள் தன் கற்பை பாதுகாக்க எண்ணி எழுந்து சென்று விட அவன் இருந்து கொண்டான். ஒரு விதமான விலையுயர்ந்த மணம் அவனிடமிருந்து வெளிவந்தது. நிச்சயமாக எனக்கு அவனைத்தெரிய நியாயம் இல்லை. என் சீலையில் பொட்டில் மேக்கப்பில் கவனம் எடுக்காததற்காய் இப்போது வருந்தினேன். பசியால் உறுமும் பச்சை வயிறு. வுhய் திறந்தால் மணக்குமோ என்ற அச்சம் எனக்கு. என்ன என்பதாய் புருவம் உயர்த்தினேன். அழகான அளவான அந்தச் சிரிப்புடன் மீண்டும் கேட்டான்
“நீங்கள் மேகலா தானே”
அளவாக நானும் வாய் திறந்து
“ஓம் நீங்கள் ஆர் என்ர கஸ்பண்ட பிரண்டோ அவரும் இஞ்ச வந்திருக்கிறார்”
அகலமாக உடலுடன் நெற்றியில் குங்குமம் கையில் குழந்தை என்று இருந்து கொண்டு எதற்காக அவசரமாக எனக்குக் கலியாணம் முடிந்து விட்டதையும் கணவன் அங்கே வந்திருப்பதையும் சொல்ல முயல்கிறேன். ஆசைக்கு அளவே இல்லை..
அவன் கண்கள் ஒரு முறை மிளிர்ந்து அடங்கியது எனக்குப் பயத்தைக் கொடுத்தது. அவன் சிரித்தான் இப்போது வாய் திறந்து பற்கள் தெரிந்தன. டெண்ரிஸ்ஸிடம் ஒழுங்காப் போறான் போல.. டெண்ரல் பெனிபிட் இல்லாத என்ர மனுசன்ர வேலை மேல் எனக்கு கோபம் வந்தது.
“நீங்கள் தின்னவேலி மசுக்குட்டி மாஸ்டரின்ர மகள்தானே..”
அவன் தோற்றத்திற்கும் வார்த்தைகளுக்கம் ஒத்துவராமல் இருந்தது எனக்குப் பிடித்திருந்தது. நான் சிரித்தேன்.. அந்தஸ்த்து இடைவெளி குறைந்து விட்டிருந்தது.
“நீங்கள்.. எங்கேயோ பாத்தமாதிரி இருக்கு ஆனால் ஞாபகந்தான் வரேலை..”
சும்மா பொய் சொன்னேன். “என்ன.. நீங்கள் என்னை மறந்திட்டீங்கள்..”
பொய்க் கோபத்துடன் அவன் சிணுங்கினான்.. கணவன் இன்னும் ஆக்ரோசமாகக் கதைத்துக்கொண்டிருந்தார். பெட்டைகள் குப்புறக்கவிண்டிருந்து எதோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். என் அடிவயிற்றில் ஒரு வித நாதம் எழுந்தது. அவன் சிணுங்கலில் உரிமை தெரிந்தது. நான் பாடசாலையில் ஒருத்தனையும் காதலிக்க அனுமதிக்கப்பட்டதில்லை.. கள்ளமாக மனதுக்குள் காதலித்தது கௌரியின் அண்ணனை மட்டும்தான். இது அவனில்லை.. கனடாவில் அப்பிடி இப்பிடி ஒருநாள் சலனங்கள் வந்திருந்தாலும் இந்தளவிற்கு கச்சிதமானவனை நான் கனவில் கூட நினைத்தில்லை..
“இன்னும் உங்களுக்கு நினைவுக்கு வரேலை போல என்ன..”
அவன் குனிந்து தன் முகத்தை எனக்கு அருகில் கொண்டு வந்தான். நான் முகத்தை இழுத்துக்கொண்டேன். அவன் தன் கன்னத்தைத் தடவியபடியே “மசுக்குட்டி மாஸ்டரின்ர அடி இன்னும் எனக்கு விண்விண் எண்ட மாதிரி இருக்கு” என்றான். அவன் கன்னங்கள் சிவந்து போக கண்களில் எதுவோ தெரிந்தது.. நான் எல்லாவற்றையும் ஒரு கணம் மறந்து அவன் கண்களைப் பார்த்தேன். அவனை இப்போது அடையாளம் தெரிந்தது. எனக்கு வோஸ்ரூமுக்கு போக வேணும் போல் இருந்தது அடக்கிக்கொண்டேன் சுகமாக இருந்தது. “சங்கரா?” சின்னதாக ஒரு குழறலுடன் கேட்டேன். அவன் சிலோ மோஸனில் “ஓம்” என்று தலையசைத்தான். என் உள்ளங்கைகள் குளிர மகன் அசைந்தான். ஒரு பெரிய வட்டத்திற்குள் விழுவது போலிருந்தது எனக்கு.. என்னை நிதானப்படுத்த முயன்று முயன்று தோற்றுத்தோற்று கடைசியில் கேட்டேன்
“எப்பிடி இருக்கிறீங்கள்.. உங்கட அப்பா அம்மா குடும்பம் எல்லாம் எங்க..” அவன் தலையசைத்து ஒரு விதமாகச் சிரித்த படியே
“எல்லாரும் இஞ்சதான் இருக்கீனம்.. ரேணு கலியாணம் கட்டி லண்டனில இருக்கிறாள்..” “உனக்குக் கலியாணம் முடிஞ்சுதா?”
மனதுக்குள் நான் கேட்க.. “நான் இன்னும் கலியாணம் கட்டேலை..” என்றான் அவன். மேளச்சத்தம் அளவுக்கு அதிகமாய் இருப்பதுபோல் பட்டது.. அவன் கலியாணம் கட்டாதது எனக்கு ஏனோ சந்தோஷத்தைத் தந்தது. அவன் என் மகனின் விரல்களைத் தடவி விட என் உடல் புல்லரித்தது.

வீடு அமைதியாக இருந்தது.. அமைதியென்றால் இது மயான அமைதி பெரிய இழப்பின் பின்னர் வரும் அமைதி.. ஆனால் இங்கு இழப்பு இனிமேல்தான்.. அக்காவின் விசும்பல் சத்தமின்றி சுவர்களில் மோதியவண்ணம் இருந்தது ஆச்சி இருமல்களை விழுங்கிக்கொண்டிருந்தாள். அம்மா சுவரில் சாய்ந்து ஏமாற்றியவன் வருகைக்காய் காத்திருக்கும் கதாநாயகிபோல் காட்சியளித்தாள்.. நான் அழுவதற்கு என்னைத்தயார் செய்த நிலையில் குப்புறப்படுத்திருந்து பென்சிலால் சத்தமின்றிச்சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன்..
மசுக்குட்டி மாஸ்டர் வீடு அடிக்கடி இப்படிக்காட்சியளிக்கும்.. இதற்கெல்லாம் காரணம் இந்த வீட்டிலிருக்கும் பெண்கள்.. அது என்னில் தொடங்கி ஆச்சிவரை வயது வேறுபாடின்றி இருக்கும்.. பெண்கள் தவறு செய்யப்பிறந்தவர்கள்.. தவறு செய்தவண்ணமே இருப்பார்கள்.. ஆண்களுக்கு மானம் போகும்.. தவறை தட்டி நிமிர்த்தி நேர்த்தியாக்கி ஒருவாறு பெண்களைக் காப்பாற்றி வருகின்றார்கள்.. பெண்கள் தவறு செய்து தவறு செய்து ஆண்களின் கருணையால் ஏதோ அழிந்து போகாமல் இன்னும் வாழ்ந்த வண்ணமிருக்கின்றார்கள்..
எனது அக்காள் எனப்படும் பதினெட்டு வயது மங்கை மகா தவறை செய்துவிட்டாள்.. எனது குடும்பத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மானத்தையும் தன் நடத்தையால் கெடுக்கப்பார்க்கின்றாள்.. இனி வீட்டுத்தலைவன் வரவேண்டும்.. அவளைத்தட்டி நிமிர்த்தி தவறை உணரப்பண்ணி வீட்டுமானத்தைக் காப்பாற்ற வேண்டும்.. அதற்காகத்தான் இந்தக் காத்திருப்பு.. தன்னோடு படிப்பவன் பாடப்புத்தகம் கேட்டான் குடுத்தேன்.. எனக்கும் அவனுக்கும் வேறு விதமாக ஒன்றுமில்லை அக்காள் விம்மல்களுக்கிடையில் சொல்லிச்சொல்லிக் களைத்துவிட்டாள்.. பாடப்புத்தகம் ஒரு பெடியனுக்குக் குடுத்தது முதல் தவறு அதுவும் இளித்தபடியே குடுத்தது மகா தவறு.. பாடப்புத்தகத்துக்குள் அக்காள் மறைத்து வைத்த காதல் கடிதத்தைப் பெற்று வர மசுக்குட்டி மாஸ்டர் பெடியன் வீட்டிற்குப் போய் விட்டார்.. கடிதம் இருக்குதோ இல்லையோ அக்காள் நிச்சயம் தட்டி நிமிர்த்தப்படுவாள்.. காரணம் பெண்கள் எப்போதுமே தவறு செய்யப்பிறப்பவர்கள் ஆண்கள் அவர்களைத் தட்டி நிமிர்த்தி வாழப்பழகிக்கொடுப்பவர்கள்.. சட்டியில் மீன் குழம்பு காய்ந்து போயிருந்தது.. எனக்கு வயிறு அழுதது.. இனிமேல் இரவுக்குச் சாப்பிட்டால்தான்..

இன்றும் சங்கர் வந்தான்.. அவன் வருவான்.. ஒவ்வொருநாளும் வருவான்.. இல்லாவிடில் நான் அவன் வீட்டிற்குப்போவேன்.. இது எப்படியோ எழுதாத எழுத்தாகிவிட்டது.. முற்றத்து நாவல்பழம் பொறுக்கி வாழைக்குத்தண்ணி கட்டி குட்டிச்சோறு கறியாக்கி மூலைக்கடை போய் சில்லறையாய் பொருட்கள் வாங்கி வந்து.. நானும் சங்கரும் பாடசாலை தவிர்ந்த நேரங்களில் ஒன்றாகக்கழிப்போம்.. அவன் வீடு கோயிலுக்குப்போனால் நானும் அவர்களுடன்.. என் வீடு கீரிமலை போனால் அவன் எங்களுடன்.. இரு வீட்டு உறவும் எங்களால் பிணைந்திருந்தது.. நான் இன்னும் பெருசாகாததால் இன்னமும் மூலைக்குள் குந்தத் தொடங்காததால் மசுக்குட்டி மாஸ்டரின் கவனம் என்மேல் திரும்பியிருக்கவில்லை..
ஆச்சி வினோதமான ஒரு போஸில் படுத்திருந்தாள். தலைமயிர் கலைந்து தலையணைய மூட மெல்லிய சு10ரிய ஒளி முகத்தை சிவப்பாக்கியிருந்தது. நான் குந்தியிருந்து அவளைக் கூர்ந்து பார்த்தேன். பின்னர் மெல்லத்தொட்டுப் பார்த்தேன். பயத்துடன் கைகளை மெல்லத் தூக்கிப்பார்க்க ஆச்சி இருமினாள். உயிரோடதான் இருக்கிறாள்.. எனக்கு யாருடனாவது கதைக்க வேண்டும் போலிருந்தது.. அக்காள் இப்போதெல்லாம் என்னுடன் அவ்வளவாகக் கதைப்பதில்லை.. அவள் கண்கள் சோபை இழந்தவையாய் எனக்கு அச்சம் தருகின்றன.. அம்மா கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாதவள்.. நான் கேள்வி கேட்பதே தவறு என்பது அவள் எண்ணம்.. அதிலும் என் கேள்வி சைக்கில் மிதித்து சந்தைக்குச் சென்றிவிட்ட மசுக்குட்டி மாஸ்டரின் காதில் எப்படியும் விழுந்து விடும் என்பதாய்க் கண்களை அலையவிட்டுத் தவிப்பாள்..
சங்கரின் வீடு வெறுமையாய்க்கிடந்தது.. நான் யாருக்கும் சொல்லாமல் முள்ளுக்கம்மி பிரித்து உடல் நுழைத்து அவன் வீட்டுக்கதவை கை சிவக்கத்தட்டிப் பார்த்துவிட்டேன்.. தோட்டத்துக் குருவிகள் சத்தமும் தூரத்தில் நாய்களில் குரைத்தலையும் தவிர எனக்காய் எந்த ஓசையும் அற்று அடங்கிப்போயிருந்தது அந்த வீடு.. நானில்லாது முதல்முதலாய் சங்கர் வீடு எங்கோ சென்றுவிட்டிருந்து.. இனி இது வெறும் கட்டிடம்.. இங்கே இனிமேல் எனக்கும் சிரிப்புகளுக்கும் இடமில்லை.. பழுத்த பலா இலைகள் காய்ந்து முற்றம் பாழாப்போயிருந்தது.. மாமரத்து ஊஞ்சலின் ஓரத்தில் சங்கரின் பழைய சேட் இன்னமும் அவிழ்க்;காமல் கிடந்தது..

முள்ளுக்கம்பிக் கீறல்களுக்கு துப்பல் போட்டுத் துடைத்துவிட்டாள் ஆச்சி.. “கொப்பனுக்குத் தெரிந்தால் கொண்டு போட்டிருவான்..” தலையை இழுத்துப்பின்னிய படியே பொரிந்து தள்ளினாள்.. கண்ணாடியில் என் கண்களின் சோபையைத் தேடினேன்.. என் கேள்விக்கு ஆச்சியிடம் தான் பதில் கிடைக்கும்.. தலைமயிர் நுனியை கிழித்த துணியால் இறுக மடித்துக்கட்டிய படியே “அந்த ராஸ்கலுக்கு இந்த வயசில இப்பிடிப் புத்திபோனால் கொப்பன் கொண்டுதானே போடுவான்” ஆச்சியின் பூடகப் பேச்சு விளங்காமல் இருந்து..
“எந்த ராஸ்கல் ஆச்சி.. அப்பா ஏன் சங்கருக்கு அடிச்சவர்.. என்னை ஏன் இழுத்துத் தள்ளினவர்.. சங்கரின்ர அப்பாவையும் அம்மாவையும் என் அப்பா பேசினவர்.. சங்கர் ஆக்கள் எங்கை போட்டீனம் ஆச்சி”
ஆச்சி என்னை வினோதமாகப் பார்த்தாள்.. “நீயும் விட்டிருப்பாய் ஆர் கண்டது” எனக்கு ஆச்சியைப் பிடிக்காமல் போயிற்று.. அப்பா,அம்மா,அக்கா, ஆச்சி ஒண்டுமே எனக்குப் பிடிக்காமல் போயிற்று.
சோபை இழந்த கண்களுடன் வாழ நானும் பழகிக்கொள்ள.. அமைதி – பூகம்பம்இ அமைதி – பூகம்பம் என்பதாய் மசுக்குட்டி மாஸ்டரின் வீடு வாழப்பழகிக் கொண்டது.. என் உடல் மாற்றம் கண்டு மூலைக்குள் இருந்து.. அக்காள் தாலி பெற்றுப் பின்னர் பிள்ளை பெற்று.. நான் தாலி பெற்று பின்னர் பிள்ளை பெற்று.. இப்போது கடல் கடந்து மசுக்குட்டி மாஸ்டரின் பார்வையிலிருந்து தூரமாய்.. ஒரு சின்ன மசுக்குட்டி மாஸ்டருடன் அமைதி -பூகம்பம் வடிவில் தொடர்கிறது என் வாழ்வு..

மணவறையின் ஆரார்த்தி எடுத்துக்கொண்டிருந்தார்கள்.. சங்கர் மௌனமாக இருந்தான்.. அவன் கன்னங்களை தடவிவிடலாம் போலிருந்தது.. சங்கர் என் முகம் பார்த்தான் “ உனக்கு எப்பிடியோ தெரியேலை.. ஆனால் உன்ர அப்பா நடந்து கொண்ட முறை சரியான கேவலமானது.. சின்ன வயசுதான் எனக்கு இருந்தும் அந்தக்காயம் ஆறக் கனகாலம் எடுத்துது..” சங்கரின் முகம் இறுகிப்போயிருந்தது.. சங்கர் என்னிலும் விட மூன்று வயது மூத்தவன் கன்னத்தில் மட்டுமல்ல மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை மனதிலும் காயத்ததை அவனுக்கேற்படுத்தியிருந்தது இப்போது எனக்குப் புரிந்தது.
நான் இழந்தது நல்ல ஒரு நண்பனை.. நாள் முழுதும் விளையாடும் ஒரு நண்பனை.. அதனால் எனக்குள் நண்பனை இழந்த காயம் மட்டுந்தான் ஏற்பட்டிருந்தது.. அதற்கு மேல் புரியும் வயது வர சங்கரை நான் மறந்து போயிருந்தேன்.. புதிய நண்பிகள் உறவுகள் என்று என் வாழ்வு மாறிப்போயிருந்தது..
நான் அவன் முகம் பார்த்து “அண்டைக்கு நடந்ததுக்கு இப்ப நான் உங்களிட்ட மன்னிப்புக்கேட்கிறன்” ஏதோ பொருந்தாதது போலிருந்தாலும் அதை விட எனக்கு வேறு வழி அப்போது எனக்குத் தெரியவில்லை.. அவன் சிரித்தான்.. நான் மயங்கினேன்.. மசுக்குட்டி மாஸ்டரின் நடத்தை என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது எனக்குப் புரிந்தது.. என் கணவனையும் பெட்டைகளையும் சந்திக்கவேண்டும் என்றான்.. நான் மௌனமாக தலை குனிந்திருந்தேன்.. தான் சாப்பாட்டிற்கு நிற்கவில்லை போகவேணும் என்று விட்டு எழுந்தான்.. அப்போதும் நான் பேசாமல் இருந்தேன்.. “சரி நான் போட்டு வாறன்” என் மகனின் கையிலும் என் முதுகிலும் அழுத்தி அவன் விடை பெற என் தொண்டை அடைத்தது..
குட்டிச் சோறு காய்ச்சி விளையாடும் போது கண்ணுக்குள் தெறித்த தூசு ஊதாமல் வாயில் அவன் முத்தமிட்டிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.. ஈரம் ஊற நான் எழுந்து சாப்பிடப்போனேன்..

Advertisements

3 பின்னூட்டங்கள் »

 1. Beautiful story. The best story that I have read in the recent past. Fantastic narration. Why is the title “Plastic”.

  K.S.Balachandran

  பின்னூட்டம் by K.S.Balachandran — மார்ச் 19, 2005 @ 12:39 பிப

 2. கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களுக்கு மனிதவாழ்வு, குடும்பஉறவு, மனித மனம் எல்லாம் செயற்கைத் தனமாக உயிர்ப்பற்று இயங்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்காகத்தான் “பிளாஸ்டிக்” என்று பெயர் வைத்தேன். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

  பின்னூட்டம் by கறுப்பி — மார்ச் 21, 2005 @ 8:19 முப

 3. Fantastic Story.

  நிறைய நாளைக்கு நினைவில் நிக்கும்.

  நம்மட ஆக்கள் பலரைச் சந்தித்த அனுபவம்.

  பின்னூட்டம் by மதி கந்தசாமி (Mathy) — மார்ச் 21, 2005 @ 9:00 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: