கறுப்பி

மே 4, 2005

ஒரு படம் பல பாடங்கள்

Filed under: Uncategorized — suya @ 9:32 முப

நாராயணனின் பதிவு ஒன்றில் தங்கமணி இட்ட பின்னூட்டம் என் மனதுக்குள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு அடிக்கடி வந்து அவதிப்பட வைக்கிறது. பெண்ணியம் பற்றிய பார்வை உள்ள எல்லோரும் அறிந்திருக்கும் ஒரு கருவாக இருப்பினும் எதற்காக என்னுள் இந்தளவிற்கு நெருடலை உண்டு பண்ணியிருக்கின்றது என்பது தெரியவில்லை. அதன் பின்னர் உஷாவின் பதிவு ஒன்றில் தங்கமணி நாராயணன் போன்றோர் தந்த பின்னூட்டங்களும் நான் பார்த்த விவரணப்படமும் சேர்ந்து என்னை நித்திரை இல்லாமல் பண்ணிவிட்டது என்று சொல்லலாம்.

நாராயணன் பதிவில் தங்கமணியின் பின்னூட்டம் –

//ஒவ்வொருவரும் சமூகத்துக்கு தெரிவிக்க என ஒரு பண்பாட்டு முகமூடியை வைத்திருக்கின்றனர். பண்பாட்டை போதிப்பதற்க்கான (சமூகத்துக்கு) முழு உரிமையுடன் வந்திருப்பதாக என்ணிக்கொள்கின்றனர். இது ஒரு மன வளர்ச்சியற்ற தன்மை.

அதுக்கப்புறம் இதில் தேசபக்தி இந்தியக் கலாச்சாரம் என்ற மசாலாக்கள் வேறு இருந்துவிட்டால் நமக்கு வெறியே வந்துவிடும்.

விஜய்-ஷாலினி நடித்த படம். காதலை புனிதமாகச் சொல்கிறேனென்று ஜல்லி அடித்த படம். அதில் ஷாலினி விஜயையை திருமணம் செய்யவேண்டாம் என்று முடிவு செய்து தம் வீடு திரும்புவார். வீட்டில் அம்மாவிடம் (அண்ணன்களிடம்) நான் கெட்டுப்போகலேம்மா, உங்க்க பொண்ணும்மா என்பார். எல்லோரும் கண்ணீர் விடுவார்கள். இப்படி ஒரு அருவருப்பான காட்சியை நான் எங்கும் கண்டதில்லை. அதுவரை எனது மற்ற மொழி நண்பர்களுக்கு அவ்வப்போது மொழியெயர்த்து வந்தேன். அப்போது சொன்னேன் “இதை மொழி பெயர்க்கமுடியாது, உங்களுக்குப் புரியாது. இதில் இரண்டாயிர வருட பண்பாடு, ஒழுக்கம், குடும்பப் பாரம்பரியம் இதையெல்லாம் தனது இரண்டு தொடைகளுக்கு நடுவில் வைத்துக்காப்பாற்றும் தமிழ் பண்பாடு இருக்கிறது இது மிக நுட்பமானது”

அப்படி ஒரு பாரம்பரியம் நமக்கு.http://urpudathathu.blogspot.com/2005/04/blog-post_18.html

http://womankind.yarl.net/archives/2005/05/03/427#comments

என்னுடன் வேலை செய்யும் வெள்ளை இனப்பெண்ணெருத்தி (Tammy வயது 22) வெள்ளிக்கிழமையானால் மிகவும் சந்தோஷமாகத் தனது காதலன் இன்று வரப்போகின்றான் சனி, ஞாயிறு அவனுடன் கழிக்கப் போகின்றேன் என்று சொல்வாள். நாங்கள் சிரித்து அவளைக் கிண்டல் அடிப்போம். எங்களோடு சேர்ந்து கொள்ளாமல் முகத்தைத் தூக்கியபடி இருக்கும் வடநாட்டு இந்தியப் பெண் என்னிடம் திருமணம் ஆகவில்லை காதலனுடன் வார இறுதி நாட்களைக் கழித்துக் கும்மாளம் அடிக்கின்றாள். என்ன இந்தக் கலாச்சாரம் என்றாள். நான் அந்த இந்தியப் பெண்மணி முன்னால் Tammy யிடம் சனி ஞாயிறு முழுவதும் காதலனுடன் களிக்கப் போகின்றாயே அப்போ உடலுறவு எல்லாம் உண்டா? என்றேன். அவள் என்னை வினோதமாகப் பார்த்து விட்டு ஏன் என்று கேட்டாள். எங்கள் பண்பாட்டில் திருமணத்திற்கு முன்னர் உடல் உறவு கொள்ளக் கூடாது அதுதான் என்றேன். Tammy சிரித்த படியே நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். மனதை, சிந்தனையை, நாட்களை, உணவை எல்லாவற்றையும் நான் எனக்குப் பிடித்தவனுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இது ஒன்றும் பெரிய விடையமாக உங்களுக்குத் தெரியவில்லை உடல் என்றவுடன் மட்டும் ஏன் வித்தியாசமாகப் பார்க்கின்றீர்கள் என்றாள். இந்தியப் பெண்மணி மௌமாக இருந்தாள். நான் கேட்டேன் நீ அவனைத்தான் திருமணம் செய்யப்போகின்றாயா? என்று, அவள் தெரியாது என்றாள். இன்னும் அதுபற்றி நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. நேரம் வரும்போது இருவருக்கும் பிடித்திருந்தால் செய்து கொள்ளலாம் என்றாள். இந்தியப் பெண்மணி வாய்க்குள் புறுபுறுத்த படியே எங்கள் நாட்டுப் பண்பாட்டிற்காக நாங்கள் பெருமைப்பட வேண்டும் என்றாள். நானும் ஓம் என்று தலையை ஆட்டி வைத்தேன்.

Born into Brothels

பாட்டி, அம்மா, இனி நான். எமது பரம்பரைத் தொழில் விபச்சாரம். வேலைக்குப் போகாத அப்பா, குடிக்க அம்மாவிடம் பணம் கேட்டு அம்மாவை அடித்தார். இடிந்து விழப்போகும் நிலையிலிருக்கும் கட்டிடங்களுக்குள் உணவுப் பொருட்களும், உடைகளும், செருப்புக்களும் கலந்து கிடக்கும் இடத்தில் குடியிருப்பு. காலையில் சாராயத்தைக் குடித்து விட்டு பெண்களைத் தேடிச் செல்லும் ஆண் வர்க்கம். குடியிருப்பில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் தொழில் விபச்சாரம். கல்வி கற்க ஆசை இருப்பினும் எந்த ஒரு பாடசாலையும் சேர்த்துக் கொள்ளாத அவலம். இந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறார்களுக்கு உதவி செய்யும் அமெரிக்கப் பெண்மணியின் அனுபவங்கள், சாதனைகள், வேதனைகள், ஏமாற்றங்கள், வெற்றிகள் தான் “Born into Brothels”.

சேலையுடன், நகையணிந்து, நெற்றியில் பொட்டுடன் என்னைப் போல் பல பெண்கள். இவர்களை வேறாகப் பார்க்க என்னால் முடியவில்லை. எங்களில் இவர்கள்; இவர்கள் வாழ்க்கை கலந்துள்ளது. எமது கலாச்சாரம், பண்பாடு உயர்ந்தது என்று வெள்ளையர்களை மட்டம் தட்டும் ஆசியப்பெண்கள், ஆண்கள். அவர்கள் இந்தப் படங்களைப் பார்ப்பதில்லையா? மூச்சு விட இடமின்றி ஒடித்தப்ப வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடும் எம் பெண்கள் இவர்கள் கண்களில் படுவதில்லையா? எப்படி நாம் பெருமை கொள்ளலாம் எமது கலாச்சாரம் பண்பாடுபற்றி?

பெண்கள், பெண் உடல் தரும் பிரமை, உடல் உறவு தரும் மாயம் கலந்த மோகம் போன்றவற்றால் மனப்பிறழ்விற்குள் ஆளாகிப் போயுள்ளார்கள் இந்த ஆசிய ஆண்கள். எல்லாமே பெண்ணின் உடல் சார்ந்த புனிதமாக இவர்கள் பார்ப்பதால்தான் கட்டாயப் பாலியல் தொழில் என்பது கூட பிரசித்தி பெற்று, இப்படியான நாடுகளில் மிக உச்சத்தில் உள்ளதோ என்ற ஐயத்தைத் தருகின்றது.

“Born into Brothels” பல விருதுகளை வென்றுள்ளது. இந்தச் சமூகத்திற்கு அது மாற்றங்களைக் கொண்டு வராத பட்சத்தில் என்ன பயன்?

Advertisements

11 பின்னூட்டங்கள் »

 1. இது பற்றி நான் கொஞ்சம் சொல்ல இருக்கு. சிறிது நேரங் கழி(ளி)ச்சு வாறன்.

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 4, 2005 @ 9:52 முப

 2. //மூச்சு விட இடமின்றி ஒடித்தப்ப வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடும் எம் பெண்கள் இவர்கள் கண்களில் படுவதில்லையா? எப்படி நாம் பெருமை கொள்ளலாம் எமது கலாச்சாரம் பண்பாடுபற்றி? //

  கறுப்பி, இது ஒருவகை ஆணாதிக்க வழிச்சிந்தனை என்றுதான் நினைக்கிறேன். பாலியல் தொழில், உடலுறவு இவைகளுக்கும் கலாச்சாரம், பண்பாடு இவைகளுக்கும் உண்மையில் என்ன தொடர்பு? சற்று உரக்கக்கேட்டுப்பாருங்கள். பாலியல் தொழில் ஒரு சுரண்டல். அவ்வளவுதான். அவ்வளவே அவ்வளவுதான். ஒரு ஏழைத் (ஆண்) தொழிலாளியிடன் உடழுழைப்பு சுரண்டப்படுவதுபோல, பெண்ணிடம் உடலின்பம் சுரண்டப்படுகிறது. ஆண் தொழிலாளியின் இடத்தில் உடல் உழைப்பு மகோன்னதமாக ஆக்கப்படுகிறது; பெண் பாலியல் தொழிலாளியின் விதயத்தில் அது கலாச்சாரக் கேடாக பார்க்கபடுகிறது. சிலர் பெண் தொழிலாளியும் உடலுழைப்பில் மட்டும் ஈடுபட்டாலும் அது போற்றப்படுகிறட்து என்று சொல்லலாம். உண்மை. ஆனால் நான் கேட்பது கலாச்சாரம் இங்கு எந்த இடத்தில் இருந்து நுழைகிறது? உடலுறவைக் கலாச்சாரமாக ஆக்கியதன் விளைவு, இந்தியாவில் போலித்தனமும், குற்ற உணர்வும், திருமணத்தை முன்வைத்து ஆள் மயக்கும் (பரஸ்பரம்) சாகசமும் போன்றவை மிக இயல்பானவைகளாக தென்படுகின்றன. நேர்மை, இயல்பாயிருத்தல், தனக்கு உண்மையாய் இருத்தல், உடலை, உலகை களித்தல், அதற்கு நன்றியோடிருத்தல், உலகை நன்றியோடு பேணல் போன்ற உண்மையான பண்பாட்டுக்கூறுகள் முற்றாக அழிந்து வருகின்றன. எய்ட்ஸ் நோய் நமது பண்பாட்டு அறைக்கூவல்களைப் பார்த்து கேலியாகச் சிரிக்கிறது. எந்த உரிமையும் மறுக்கப்பட்டு, கீழ்மைப்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான பெண் பாலியல் தொழிலாளிகள், சுரண்டப்பட்டவர்கள் அதற்காகவே இழிவு செய்யப்படுகிறார்கள்; தண்டிக்கப்படுகிறார்கள். திருட்டுக்கொடுத்தவனும், சுரண்டப்படுபவனும் தண்டிக்கவும் படுவான் என்ற அற்புத நீதியை நாம் பெருமையோடு கைக்கொள்கிறோம்.

  நமது பண்பாட்டை, 2000 வருட கலாச்சாரத்தை தொடைகளுக்கு நடுவில் புதைத்து வைத்து வெந்துகொண்டிருக்கிறோம். 2000 வருடங்களுக்கும் பழமையான, திறன்வாய்ந்த, அதி கூர்மையான ஒருமொழி அழிந்துகொண்டிருக்கிறது; அற்புதமான மருத்துவ முறையொண்ரு முற்றாக மறையப்போகிறது, வானளாவிய கோபுரங்களை ஆயிராஆயிரமாயிர ஆண்டுகளாய் நிறுத்திகொண்டிருக்கும் சொந்த கட்டிடக்க்லையும் சிற்பக்கலையும், உலோக அறிவியலும் நசிந்து அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன.ஏரிகளியும் குளங்களையும் எல்லா இடங்களிலும் வெட்டிவைத்து அற்புதமான நீர்மேலாண்மையைச் செய்து இத்துணை வருடங்களாக நிலத்தடிநீரை பேணிக்கொண்டிருந்த ஒரு முறையை 50 வருடங்களிலேயே அழியக்கொடுத்துவிட்டு குடிக்க தண்ணீர் வாங்கிப் பிச்சை எடுக்கப்போகிறோம். இயற்கை வேளாண்மை என்ற அற்புதத்தை அதன் வழியின் வளத்தெடுக்காமல் உரங்களுக்கும் பூச்சிக்கொள்ளிகளுக்கும் தாரை வார்த்து ஒரு நச்சு விவசாயம் செய்துவிட்டொம்.

  இங்கெல்லாம் இல்லை பண்பாடு. தொடைகளுக்கு நடுவில் அதை எப்படி சேமித்தோம் என்பது புரியவில்லை. இத்தனைக்கும் களவொழுக்கம் போதித்த ஊரில்.

  மன்னிக்கவும் கொஞ்சம் நீளமான பின்னூட்டாகிவிட்டது. கலாச்சாரத்தை எண்ணி பாலியல் தொழிலாளிகளின் நிலைக்காக வருந்தாதீர்கள். அது ஆண்களின் சிந்தனை முறை.

  இப்படி வருந்துகிறவர்களால் அது இன்னும் மோசமாக்கப்பட்டுதான் உள்ளது. மஹாரஷ்டிர மாநில அரசின், மது அருந்தும் விடுதிகளில் நடனமாடுவதை தடை செய்யும் ஆணை 75,000 பெண்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியிருக்கிறது.(http://nandalaalaa.blogspot.com/2005/05/001.html) இனி பண்பாட்டு காவலர்கள் மகிழும் இதே நேரத்தில் இவர்களில் பலர் பாலியல் தொழிலுக்குத்தான் தள்ளப்படுவர்.

  உடம்பை பண்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்தாலே பாலியல் தொழில் பலமடங்கு குறையும்.

  பின்னூட்டம் by Thangamani — மே 4, 2005 @ 10:57 முப

 3. கறுப்பி, எனக்கு narain at gmail dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். வேறு ஒரு விஷயம் பேச விரும்புகிறேன்.

  பாலியல் மற்றும் உடலினை பற்றிய என் கருத்தினை நான் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். இது எல்லாமே ஒருவிதமான தெய்வீகதன்மையினை (கற்பரசி) உண்டாக்கி அடிமையாக்கல். உண்மையை சொல்லப்போனால், கழுத்துக்கு கீழே போனால் எந்த சுவையுள்ள உணவானாலும் அது பீ தான். அதேப் போல் தான் உடலும், உடல் சார்ந்த இச்சைகளும். 2000 வருட பாரம்பரியம், யோனியின் இருளில் ஒளிந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதின் அபத்தங்களை கண்டால், வேதனையான சிரிப்புதான் வருகிறது. ஆணாதிக்க வழிச்சிந்தனையாக இருந்தாலும், அதனை பெரும்பாலான பெண்கள் ஏற்றுக் கொண்டு அதை வாழ்வின் guideline ஆக பின்பற்றுவதின் அனர்த்தம்தான் இன்னமும் சுடுகிறது. இந்த மாத உயிர்மையில் எஸ்.ராமகிருஷ்ணன் “வரைபடமில்லாத பயணம்” என்கிற தலைப்பில் சர் ரிச்சர்ட் பர்டன் பற்றி எழுதியிருக்கிறார். காமசூத்ராவினை உலகறிய செய்தவர் இவர். இவ்வளவு தெளிவாக உடலுறவினையும், உடல் சார்ந்த விஷயங்களையும் பேசிய தேசத்தில் தான் இன்று எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரித்திருக்கிறார்கள். பத்மா அரவிந்துக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம், புள்ளி விவரங்களின் படி, சென்னையில் தான் அதிக அளவு சிறுவர்கள் எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது ? நமது உடல் சார்ந்த அழுத்தமும், இறுக்கமும் தான்.

  அனங்க ரங்கா என்றழைக்கப்பட்ட பழைய உடல் பற்றிய நூலினை இங்கு வைக்கிறேன். படிப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும், எவ்வளவு மேம்பட்ட உடல் சார்ந்த ரசனை கொண்ட சமூகமாக ஒரு காலத்திலிருந்ததிது என்பதை – அனங்க ரங்கா

  பின்னூட்டம் by Narain — மே 4, 2005 @ 11:24 முப

 4. This post has been removed by the author.

  பின்னூட்டம் by Narain — மே 4, 2005 @ 11:36 முப

 5. சொல்ல விட்டுப் போனது. அனங்க ரங்காவில் நான் பார்ப்பது ஒரு சமூகம் எவ்வாறு உடலினை கொண்டாடியது என்பது மட்டுமே. மற்றபடி, அதனுடன் நிறைய விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு.

  பின்னூட்டம் by Narain — மே 4, 2005 @ 11:37 முப

 6. கிஷோ நல்லா கழிச்சு எழுதுங்கோ. எம். ரி. மணி எவ்வளவுதான் இதைப்பற்றி வாசித்து அறிந்த போதும் நேரடியாக விவரணப்படத்தைப் பார்த்த போது வெறுமைதான் மிஞ்சிப் போனது. குழந்தைத் தனமான அந்தச் சிறுமிகளின் சிரிப்பு. அம்மா வேலை செய்யும் போது தாங்கள் மொட்டை மாடிக்குப் போய் விடுவோம் என்று அவர்கள் கூறியது. எல்லாமே சகிக்க முடியவில்லை.
  நாராயணன் பின்னூட்டங்களுக்கு நன்றி. மெயில் போட்டேன் கிடைத்ததா?

  பின்னூட்டம் by கறுப்பி — மே 4, 2005 @ 1:18 பிப

 7. This post has been removed by the author.

  பின்னூட்டம் by Thangamani — மே 4, 2005 @ 1:22 பிப

 8. வெறுமையாக இருந்ததும், வேதனையாக இருந்ததும் சுரண்டலைக்கண்டும் அதைமூடி மறைக்கும் பண்பாட்டுப் போர்வைகளைக் கண்டுமாக இருந்தால் நலம். மாறாக இன்னும் பெரிய பண்பாட்டு போர்வைகளை தேடுபவர்கள் இன்னும் நிலைமையை மோசமாக்குகிறார்கள்.
  அதைத்தான் சொன்னேன்.

  ntmani-தங்கமணிதான்

  பின்னூட்டம் by Thangamani — மே 4, 2005 @ 1:26 பிப

 9. கறுப்பி, இதற்கான பின்னூட்டம் என்று சொல்ல முடியாமல் ஒரு பதிவு.

  விடைதேடும் வினாக்கள்

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 4, 2005 @ 3:22 பிப

 10. மன்னிக்கவேணும், வலைநுட்பக் கோளாறு காரணமாக அந்தச் சுட்டி பிழைச்சுப் போச்சு. இதுதான் எனது பதிவிற்கான சரியான சுட்டி.

  விடை தேடும் வினாக்கள்

  பின்னூட்டம் by கிஸோக்கண்ணன் — மே 4, 2005 @ 4:04 பிப

 11. மணி,நாராயணன்,இருவர்தம் கருத்தும் மிகச் சரயான பார்வைகளைக் கொண்டிருக்கின்றன.
  மணியினது சமுதாய ஆவேசம் புரியத்தக்க நியாயமான சமூகப் பிரக்ஜை.இன்று நமது சகல உயிர்வாழ்வாதாரங்களும் தேசங்கடந்த வர்த்தகக் கழகங்களால் சூறையாடப்படுகிறது.அவ்வண்ணமே பெண்ணுடலும் சுரண்டப்பட்டபடி.இருவரினதும் பார்வைகளே இனிமேற் காலத்துக்குத் தேவையான ஜனநாயகப் பண்பை விருத்தியுற வைக்கும் கண்ணிகள்.மணி, அற்புதமான வரிகளை லாவகமாகப் பயன்படுத்தி உண்மைகளைச் சொல்கிறீர்கள்

  பின்னூட்டம் by Sri Rangan — மே 4, 2005 @ 5:59 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: