கறுப்பி

மே 5, 2005

தமிழுக்கு அமுதென்று பெயர்

Filed under: Uncategorized — suya @ 8:14 முப

சந்திரமுகி அலை ஓய்ந்தபின்னர் தற்போது நல்ல தமிழ் தமிழை வளர்க்கும் கோசம் கொஞ்சம் பதிவுகளில் எழுந்துள்ளது. சரி இது பற்றி நானும் ஏதாவது எழுதிப் பார்ப்போம் என்ற போது ஒரு நகைச்சுவை நினைவிற்கு வந்தது. அதை புளொக்கு நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இப்போதெல்லாம் திரைப்படங்களுக்குத் சுத்த தமிழில் பெயர் வையுங்கள் என்றும். பிள்ளைகளுக்கு வடமொழி கலக்காமல் நல்ல தமிழில் பெயர் வையுங்கள் என்றும் பரவலாக ஊடகங்கள் கனடாவில் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். ஈழத்தில் இந்தத் தமிழ் மொழிப் பற்று எப்போதோ பெடியளால் தொடங்கி விட்டது என்று அறிந்து கொண்டேன்.
பெடியளின் இந்த அதீத தமிழ் மொழிப்பற்றால் நகரத்தில் இருக்கும் வியாபாரத் தளங்களுக்கு சுத்த தமிழில் பெயரிடப்படல் வேண்டும் என்ற சட்டத்தின் பெயரில் பல வியாபரத்தலங்களின் பெயர் பலகையை சுத்த தமிழில் மாற்றும் படி அறிக்கை விடப்பட்டது. வியாபாரிகள் உடனேயே தமது வியாபாரத் தளங்களின் பெயர்பலகையை தமிழாக்கிக் கொண்டார்கள்.
உதாரணத்திற்கு –

மஞ்சுளா பாஷன் – மஞ்சுளா நாகரீகம்

சிட்டி பேக்கறி – நகர வெதுப்பம்

அம்பிகா யுவெர்லேஸ் – அம்பிகா நகைமாடம்

இப்படியான மாற்றங்கள் பெடியளுக்கு மனத்திருப்தியை அழித்தாலும் ஒரு வியாபாரி தனது பெயர்பலகையை கழற்றி வைத்து விட்டு வெறும் கடையில் இருந்து வேலை செய்தது அவர்களுக்கு கோபத்தைக் கொடுத்தது. “பெயர் பலகை இல்லாமல் நீர் என்ன தொழில் செய்கின்றீர் என்று யாருக்குத் தெரியும்? தமிழில் பெயரை உடனே மாற்றி பலகையைத் தொங்கவிடும்” என்று கூறி விட்டுப் போய் விட்டார்கள். ஒரு கிழமையாயிற்று பெயர்பலகை மாட்டப்படவில்லை. வியாபாரி விசாரணக்கு உட்படுத்தப் பட்டார். தன்னால் பெயர்மாற்றம் செய்ய முடியவில்லை. தாங்கள் உதவ முடியுமா? என்று வியாபாரி அவர்களைக் கேட்க பெடியங்கள் கோபத்துடன் சம்மதித்தார்கள். அடுத்த நாட் காலை வியாபாரி தனது தளத்திற்கு வந்த போது இப்படி ஒரு பெயர்பலகை தனது வியாபார தளத்தின் முன்னால் தொங்குவதைக் கண்டார்.

– அருளப்பர் சின்னப்பர் ஓட்டுவது ஒட்டகம்

இதன் ஆங்கில வடிவம் தங்கள் கற்பனைக்கு

Advertisements

17 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி, என் மரமண்டைக்கு ஏறவில்லை. ஆங்கில வாக்கியத்தை நீயே சொல்லி விடு.

  பின்னூட்டம் by விமர்சகன் — மே 5, 2005 @ 8:33 முப

 2. //அருளப்பர் சின்னப்பர்//

  Pope John Paul / பாப்பரசர்? வசந்தனின் பதிவில் அவ்வாறு பார்த்த ஞாபகம்.

  //ஓட்டுவது ஒட்டகம்//

  Tyre punctureகளை் ஒட்டு போடும் கடையா? 🙂

  பின்னூட்டம் by Voice on Wings — மே 5, 2005 @ 9:04 முப

 3. Something like “St Peter/john paul Cycle puncture repair shop”?

  பகடி இருக்கட்டும், நீங்கள் எப்படித் தமிழாக்குவீர்கள்!:) கலாச்சாரச் சீரழிவினை இன்னொரு இனம்/மொழி வலிந்து செய்யும் போது (உதாரணம், நேற்று எங்கோ மறுமொழிப்பெட்டியில் நடந்த வேதாரண்யம், விருத்தாச்சலம் பற்றிய தகவல்கள்) அதனை இப்படியான செய்கைகளின் மூலந்தான் வேரறுக்க முடியும்.

  பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — மே 5, 2005 @ 9:06 முப

 4. கறுப்பி, மக்களுக்குப் புரிவதற்காகத்தான் மொழி; தனித்தமிழ்தான் வேண்டுமென்று நின்றாட முடியாது; அதேநேரத்தில், அம்மொழியினை அதன் பெறுமதி அறியாது (“இந்த மொழி இல்லாவிட்டால், எப்படியாக எமது தேவைகளைப் பூர்த்தி செய்திருப்போம்?” என்ற உணர்தலற்று), பயன்படுத்துதல் எந்தளவு சரி? அந்த அடிப்படையிலேனும், ஒரு மொழியினைப் பயன்படுத்துவோருக்கு, அம்மொழிக்கான புதிய சொற்களைப் பயன்படுத்திப்பார்க்கும் சிறிய சிரமத்தினை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இயலுமானவரை ஏற்கனவே தம்மொழியிலிருக்கும் வேர்ச்சொற்களினைப் பயன்படுத்தி, ஆகும் புதுச்சொற்களைப் பயன்படுத்தும் ஆர்வம் வேண்டும். புதிய தீனிகளுக்கு, புதிய இசைக்கு, புபுதிய புலங்களுக்குத் தம்மைப் பழக்கிக்கொள்ளும் புலன்களைக் கொண்ட மக்களுக்கு, இவ்வாறான சொற்களைப் பயன்படுத்துதல் அவற்றினைவிட மிக இலகு. மொழிச்சொற்களை உருவாக்குகின்றவர்களும் இச்சிரமத்தினைக் குறைக்கும்வண்ணம், மக்களிடையே இலகுவிலே பயன்படக்கூடிய சொற்களாக உருவாக்கவேண்டும். வார்த்தைகளில்/சொற்றொடரிலே பகிடி என்றளவிலே சரி; ஆனால், இதை வைத்தே தமிழிலே சொல்லாகுவதைப் பகிடி பண்ணுவதென்றால், என்னத்தைச் சொல்ல!! பேசாமல் மத்தியான ரைஸையும் கறியையும் சாப்பிடப்போகிறேன் 😉

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 5, 2005 @ 9:21 முப

 5. பெயரிலி சொல்வதை ஆமோதிக்கிறேன். தனித்தமிழிலே தான் பேசவேண்டும் எழுதவேண்டும் என்பதில்லாமல், முடிந்தவரை தொடர்புடைய சொற்களை ஏற்கனவே இருக்கிற வேர்களில் இருந்து நீட்டித்துப்பார்க்க என்ன தயக்கம்? தனிப்பட்டுச் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். ஒரு உதாரணத்திற்குத் தான் – “வலைப்பதிவு” என்று புழக்கத்தில் வந்து ஓரிரு ஆண்டுகளாயிற்று. “புளொக்கு” என்று புரியாமல் எழுதுவதை விட வலைப்பதிவு என்பது சிரமமா என்ன?

  பின்னூட்டம் by செல்வராஜ் (R. Selvaraj) — மே 5, 2005 @ 9:44 முப

 6. சந்தில சிந்து படுறதெண்டுறது இதை தான் கறுப்பி. உங்கள் பேரறிவார்ந்த நகைச்சுவை ……………………………… இதை இப்படியாக்க வேண்டிய தேவையில்லை .

  அது சரி கறுப்பிக்கு தெரியுமா ????நவீனத்தின் பிறப்பிடம் எல்லோ அவர்

  பின்னூட்டம் by ஜெயச்சந்திரன் — மே 5, 2005 @ 10:37 முப

 7. பெயரிலி (பகிடிக்குத்தான்) கடைகளுக்குப் பெயர் வைக்கும் போது தமிழ் பெயர்களை வையுங்கள் என்பது நியாயம். ஏற்கெனவே ஆங்கில மோகத்தில் வைக்கப்பட்ட பெயர்களை தமிழாக்கும் போதுதான் பிரச்சனையே. அதைத்தான் குறிப்பிட்டேன்.

  அந்த வரிசையில் கனடாவில் கடைகள் சில வற்றைப் பார்ப்போம்..

  New spice Land

  Diana Saloon

  Lucky Grocery

  Millennium Saree Palace

  இப்பிடியான பெயர்களைக் கனடாவில் வைப்பதற்கு மற்றைய சமூகத்தவர்களிடமும் தமது வியாபாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று வியாபாரிகள் கூறலாம். ஆனால் ஈழத்தில் எதற்காக? (அங்கும் இருப்பதாக அறிந்தேன்) ஒரு வேளை சுற்றுலாப் பயணிகளுக்காக என்று அவர்களும் கூறலாம்.

  செல்வராஜ் நீங்கள் சொல்வது நியாயம்தான். வலைப்பதிவு என்று எழுதலாம். ஆனால் “புளொக்கு” என்று எழுதும் போதே ஒரு நகைச்சுவை உணர்வு இருக்குப் புரியவில்லையா? அதை விடவும் பழக்க தோஷம் என்பதும் சில வேளைகளில் வந்து விடும்.

  Voice on Wings/ Sunthara vadivel- yes very close

  பின்னூட்டம் by கறுப்பி — மே 5, 2005 @ 10:47 முப

 8. //அது சரி கறுப்பிக்கு தெரியுமா ????நவீனத்தின் பிறப்பிடம் எல்லோ அவர்\

  குமிலி தாங்கள் பழைய பஞ்சாங்கமா?

  பின்னூட்டம் by கறுப்பி — மே 5, 2005 @ 10:52 முப

 9. கருப்பி யதார்த்தமாகச் சொல்ல,பலர் தத்தம் பாட்டிற்குத் திட்டுவது தேவையற்ற செயல்.தமிழ் ஒரு மொழி. அதன் வளர்ச்சி-அழிவு யாவும் அதன் பயன்பாட்டை நுகரும் மக்களின் பொருளாதாரப் பலத்துடன் சம்பந்தப்பட்டது.பொருள் வளர்ச்சியுடன்தாம் மொழிதோன்றி வளர்கிறதேயொழிய வெறும் மனவிருப்புகளின் படியல்ல.உற்பத்திச் சக்திகளை அன்நிய மொழிகள்தாம் கட்டுப்படுத்தும்போது உற்பத்தியுறுவுகளின் பயன்பாட்டு மொழியான தமிழ் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்கும்.எந்த மொழியும் தனித்தூய்மையாக வளரமுடியாது.வளர்ச்சியடைந்த ஐரோப்பிய மொழிகள் யாவும் வேற்று மொழிச்சொற்களை உள்வாங்கி வளர்ந்;துள்ளன.மருத்துவம் பயிலும் மாணவருக்குப் புரியும் இலத்தீனது சொற்கள் எவ்வளவு ஜேர்மன்,ஆங்கிலம்,பிரஞ்சிலும் கொட்டிக்கிடக்கிறதென.தமிழின் கட்டுமரத்தை ஐரோப்பிய மொழிகள் அப்படியே’கற்றுமறாம்’என்றே அழைக்கின்றார்கள்.மொழிமாற்றும்-ஒலிமாற்றும் ஒருமொழிக்கு அவசியமானது.இதைமறுக்கும் மொழி மெல்லச் சாகும்.பஸ்,கார்,இரயில்,சயிக்கிள்,பேனை,கொப்பி,பென்சில்,ரேசர்,கட்டர்,கொம்பாஸ்,ரயர்,ரேடியோ,டெலிபோன் இவையாவும் ஒலிமாற்றாகும்.இவை தமிழ் கிடையாது, எனவே தமிழல்தான் மாற்றி எழுதுவோமெனும் அறிவு மூடத்தனமானது.இவையும் ஒலிமாற்றுத் தமிழ்.அன்நிய வார்த்தைகள் பிரிவுக்குள் அடங்கும்.நம்மிடம்தாம் அப்படியொரு அகராதியே கிடையாதே.வார்த்தைகளுள் தூய்மை காண்பது இருக்கட்டும்,முதலில் தமிழுக்கொரு சிறந்த முறையிலான-எல்லோரும் கற்கும் வகையிலான இலக்கண நூலை உருவாக்குங்கள்.அப்போது தமிழின் விருத்திக்கு வித்திட்டதாக இருக்கும்.தொல்காப்பியத்தை வைத்துச் சவாரிசெய்வது விருத்தியுறும் மொழிக்கு உதவாது.ஆங்கிலம்,ஜேர்மன்,பிரஞ்சு மொழிகளில் இருக்கும் இலக்கண நூல்கள்போன்ற அறிவார்ந்த இலக்கணக் கட்டுக் கோப்பை உருவாக்கி முன்வைக்கும் தேவையே மிக,மிக அவசியம் தமிழுக்கு.மீளவும் சொல்வோம்: ஒரு மொழியின் வாழ்வு சொல்லாக்கத்துடன்- ஒலிமாற்றுடன்தாம் வளர்வுறும்.தனித்த கெட்டிப்பட்ட சொல்லுருவாக்கம் -உதாரணம்:துவிச்சக்கரவண்டி,பேரூந்து,புகையிரதம் போன்று பின் தங்கிவிடும்.மக்களால் பரவலாகப் பேசப்படும் தொழில்நுட்பப் பெயர்களான ‘ஒலிமாற்றுச் சொற்களைக்’ களைவது மொழியை அழிப்பதற்குச் சமன்.மொழியின் உயிர் வாழ்வானது ஒழுங்கமைந்த அரசினதும்,பொருளாதாரப் பலத்தினதும் காத்திரமான உறுதியினாலேதாம் தீர்மானிக்கப்படுகிறது.இதைவிட்டு தன்னார்வச் செயற்திட்டம் ஒருபோதும் மொழியினது இருப்பை உறுதி செய்யமுடியாது.

  நட்புடன்
  ஸ்ரீரங்கன்

  பின்னூட்டம் by Sri Rangan — மே 5, 2005 @ 2:22 பிப

 10. ஸ்ரீரங்கன்,
  வானொலி என்பதிலும் ரேடியோ என்பது சிறப்பானது என்று சொல்ல வருகின்றீர்களா?

  elctron என்பதற்கு இலத்திரன் என்று ஒலிமாற்றலாம். அதற்கீடாக எதையும் உருவாக்கத் தேவையில்லை. மின்னணு என்பது கொஞ்சம் உதைக்கிறது. ஆனால், வானொலி, தொலைக்காட்சி என்று ஆக்கமாகச் சொற்கள் எழ வசதியிருக்கும் வண்ணம் வேர்ச்சொல்கள் இருக்கின்றபோதிலே, அவை அநாவசியமென்பீர்களானால், ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

  இன்றைய தமிழ்நெற்றிலே யாழ்ப்பாணத்திலே எரிந்த கடைகள் என்பதன்கீழே ஒரு கடையின் பெயர் ஒலி மாற்றியே தமிழிலே சன்லைற் ரைக்கிளீனேர்ஸ் என்றிருக்கின்றது. இந்த இடத்திலே அஃதொரு பதிவு செய்யப்பட்ட பெயர். கடைக்காரர் அப்படியாக வைக்க விரும்பின் வைத்திருக்கட்டும். அதற்கான காரணம் அவர் ஆங்கிலம் கலக்கையிலே ஒரு மேன்மை கிடைக்கின்றதென்ற வழிவழிவந்த ஆட்டுமந்தைத்தனமாக இருக்கலாம். ஆனால், பொதுவிலே ரைக்கிளேனேர்ஸ் என்றுதான் எழுதவேண்டுமென்று சொல்ல அவசியமில்லையே. உலர்சலவையாளர்கள் என்று கூறலாம்.
  அல்லவா? சலவை என்பது சனத்துக்கு விளங்குமா? அல்லது, க்ளினேர்ஸ் என்பது சனத்துக்கு விளங்குமா? ரைக்ளீனேர்ஸ் என்பதைச் சனம் ஒரு பெயராகத்தான் பார்க்கிறதேயொழிய அதற்கு என்ன அர்த்தமென்று புரிந்துகொண்டு பார்ப்பதில்லை.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 5, 2005 @ 4:45 பிப

 11. கறுப்பி இது உங்கள் முற்போக்கு கருத்து என்ற அவதானத்துடன் ஏதாவது பலிலளிப்போமென்று பின்னூட்டம் பார்த்தால் விளையாட்டுக்குச் சொல்லியிருக்கிறீர்கள் எனப் புரிகிறது.மஞ்சுளா நாகரீகம் என்று வைக்கத் தேவையில்லை ஆடையகம் என்று வைக்கலாம்.

  சிறீரங்கன் ஒலிமாற்றிகளை அப்படியே பயன்படுத்தலாம் என்பது ஏற்புடையதல்ல.தொலைபேசி என்ற சொல் வழக்கத்திற்கு வந்துவிட்டது.ரெலிபோன் என்பதன் செயற்பாட்டை அப்படியே தமிழில் விளக்கப் போதுமாக உள்ளது அதனைத் தமிழ்ப்படுத்தும்போது எமக்கு புதிதாக ஒரு வார்த்தை கிடைக்கிறது.
  நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறதென்றால் ரைஸ் என்பதை ஏன் தமிழில் சோறு என அழைக்கவேண்டும் ரைசென்றே சொல்லலாமே என்றவாறு எனக்குப் படுகிறது.
  ஆங்கிலத்தில் முருங்கைக்காயை ட்ரம்ஸ்ரிக் என்றுதான் அழைக்கிறான் முறுங்கா என்று அல்ல.சோற்றை ரைஸ் என்றுதான் அழைக்கிறான் சோர் என்ற அல்ல.ஏன் அவர்கள் அப்படியே ஒலிமாற்றிகளைப் பயன்படுத்தக் கூடாது என்றால் அதனை உபயோகத்திற்கு இலகுவாக்குவதற்கு தேவை இருக்கிறது.அதையேதான் தமிழிலும் செய்ய நினைக்கிறார்கள்

  பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — மே 5, 2005 @ 10:58 பிப

 12. //இப்படியான மாற்றங்கள் பெடியளுக்கு மனத்திருப்தியை அ*ழி*த்தாலும் //

  ???

  பின்னூட்டம் by Thangamani — மே 5, 2005 @ 11:45 பிப

 13. நகைச்சுவை ஒன்றைக் கூறப்போய் நல்ல பல கருத்துக்களைக் கொண்ட ஒரு விவாதத்தைக் கண்டு கொண்டேன். என் கருத்துப் படி முடிந்தவரை தமிழ்ச் சொற்களை எழுதும் போதாவது உபயோகிப்பது சிறந்தது. அதற்காக பல சரளாமான பாவனையில் உள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழ் படுத்த வெளிக்கிட்டு மக்களுக்கு புரியாத உச்சரிக்க முடியாத தமிழ் சொற்களைப் பாவனைக்குக் கொண்டு வர முயல்வது சிறுபிள்ளைத் தனம். இதனைத் தமிழ் பற்று என்றோ தமிழ் வளர்க்க முயல்தல் என்றோ கொள்ள முடியாது. ஒரு வகை வெறி அல்லது மோட்டுத் தனம் என்றுதான் கொள்ள முடியும். உதாரணத்திற்கு பேக்கறி என்பதை பெயர் பலகையில் வேண்டுமானால் வெதுப்பகம் என்று போட்டுக் கொள்ளலாம். ஆனால் பேச்சுத் தமிழாக அது ஒரு போதும் உபயோகப் படப்போவதில்லை.

  தங்கமணி எனக்குத் தமிழில் பிடிக்காததே இந்த ள ழ குழப்பம் தான். (என்னுடைய அம்மாவும் அப்பாவும் தமிழ் வாத்திகள்) கையால் எழுதும் போது நின்று நிதானித்து இந்தக் குழப்பத்தைத் தீரத்துக் கொள்வேன். ஆனால் ரைப்பண்ணும் (தட்டச்சு?) முடிவதில்லை. ஆனால் எதிர் மறைவான கருத்தைத் தருகின்றதே அதுதான் மன்னிக்கமுடியாத குற்றம். இனிமேல் நின்று நிதானித்து ரைப் பண்ண முயல்கின்றேன்.

  பின்னூட்டம் by கறுப்பி — மே 6, 2005 @ 6:25 முப

 14. பெயரிலி;, ஈழநாதன் இருவருக்கும் நான் சொல்வதன் நோக்கம் தவறாகப் புரியப் பட்டுள்ளது.படித்த நடுத்தர வர்க்கச் சனங்கள் பேசும் தமிங்கலத்தை நீங்கள் கற்பனை செய்த வண்ணம் கருத்தாடுகிறீர்கள்.நான் கூறுவது பாணை பாணெண்றே விட்டுவிடவும்,சயிக்களை சயிக்கிள் என்றே விடவும் இவையெல்லாம் ஒலிமாற்றுத் தமிழ்.புதிகாக வரும் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கேற்வாறு தமிழ்ச்சொற்களை உருவாக்குவதற்கு யாரு குறுக்கே நிற்கிறார்கள்?தாரளமாகச்செய்யலாம்.ஆனால் பன்னெடுங்காலமாக நாவிலும்-நினைவிலிமனதிலும் பதியப்பட்ட பஸ்,கார்,பாண்,சயிக்கிள்,பேனை போன்ற இத்தியாதி ஒலிமாற்றுத் தமிழை விட்டுவிடவேண்டும்.அதற்காக ரைஸ் என்று கூறும் தமிங்கலத்தையல்ல.அதை அவர்கள் தடுத்தாலும் பேசத்தான் செய்வார்கள்.நான் மொழிகளின் பயன்பாட்டோடு மட்டும் இவற்றைக் கூறவில்லை.மொழியை மானுடவியல் நோக்கில் புரிந்துதாம் சொல்கிறேன்.மொழியின் பண்பானது ‘பெறுதலும்-வழங்குதலும் ‘ எனும் பரஸ்பர உறவோடுதாம் வளர்ந்து வருகிறது.இதை மறுப்பவருக்கு மொழியின் தோற்றுவாய் பற்றிய அரிச்சுவடிகூடப் புரியவில்லையென்பதே வெளிப்படை.எந்தவொரு மானுடமொழியும் தனித்துவமான கலைச்சொற்களைக் கொண்டிருக்கமுடியாது.அப்படியிருப்பதற்கான எந்த நியாயமும் கிடையாது.நாங்கள் தமிழைத் தூய்மைப் படுத்துவதாகவெண்ணி அன்நியச்சொற்களாகவுள்ள ஒலிமாற்த் தமிழை களைய வெளிக்கிட்டால், தமிழிலுள்ள இருபதினாயிரத்துக்குமேற்பட்ட வடமொழிச் சொற்களைக் களையவேண்டும்.நாம் தமிழாகவெண்ணும் பற்பல கலைச் சொற்கள் வடமொழியூடாகவும்,பாரசீகமொழியூடாகவும் இன்னும் பல வேற்று இந்திய மொழிகளாலும் உருவாகியுள்ளன.இந்த நோக்கில்தாம் கூறுகிறோம் ஜனநாயகத்தை,ஜனநாயகமென்றே அழைக்கவும்.இது தமிழாகிவிட்டது.அதற்காக அதை டெமோக்கறற்றி என்று ஆங்கிலம் படித்த மேற் தட்டு மக்கள் கூறினால்-இல்லை நீங்கள் தமிழில்தாம் கூறவேண்டுமெனச் சட்டம் போடமுடியாது.உலகத்தில் மொழிகளின் உயிர்வாழ்வை வெறும் தூய்மைப்படுத்துவதால் காப்பாற்றியதாக வரலாறில்லை.மனிதர்களின் இயல்பான ஒலிமாற்றுப் பெயர்களை அப்படியே ஏற்பதுதாம் மொழியியலாளர் கூறும் கருத்தாகும்.எந்த வொரு வளர்ச்சியடைந்த மொழியும் தனிச் சுத்தமான சொற்களைக் கொண்டிருக்கவில்லை. பாணை வெதுப்பியென்பதும்,சயிக்கிளை ஈருருளி யென்பதும் காலத்தால் நிற்கும்போதே வெற்றியாகும்.எனினும் ஒலிமாற்றுச் சொற்களை அகற்றுதல் தமிழின் அழிவை விரைவாக்குவதுதாம். இன்றைய தேசங்கடந்த வர்த்தகத்தில் மூன்றாமுலக மொழிகள் ஆங்கிலத்துக்கு முன் எவ்வளவு காலத்துக்குத் தாக்குப் பிடிக்கும்? மிகப்பெரும் இலக்கணக்கட்டுக்கோப்பும்,பொருளாதார வலுவும்,அரசகட்டமைப்புமுடைய ஜேர்மன் மொழியான டொச்சே தாக்குப் பிடிக்க முடியாது திண்டாடும் போது, தமிழ் எவ்வளவு காலத்துக்கு? அதுவும் ஏழு இலட்சம் சொற்களடங்கிய ஜேர்மன் படும்பாட்டை பார்க்கும்போது மூன்றாமுலகப் பொருளாதாரவலுவற்ற-வெறும் மூன்று இலட்சம் சொற்களோடுள்ள மொழிகள் பல மெல்ல இனிச் சாகும்.

  பின்னூட்டம் by Sri Rangan — மே 6, 2005 @ 6:41 முப

 15. >>>>ரேடியோவில் போன ஒரு நிகழ்ச்சிதான் ஞாபகம் வருகிறது.

  பின்னூட்டம் by Sri Rangan — மே 7, 2005 @ 2:38 முப

 16. கறுப்பி உங்களைப் புரிந்துகொண்டேன்.
  பேக்கரிதான் நிலைக்கும் என்று உங்களளவில் சிந்திக்காதீர்கள் வன்னியில் வெதுப்பகம் என்று பரவலாகச் சொல்கிறார்கள் இன்னும் கொஞ்சநாளில் அதுவே நிலைத்தும் விடும்.

  ஆங்கிலப் பெயர்களை தமிழ்ப்படுத்துதல் உணர்வுபூர்வமாக அன்றி அறிவுபூர்வமாகச் செய்யப்படவேண்டியது.சிறீரங்கன் சொல்லியதன் முழுக்கருத்தும் இப்போதுதான் புரிகிறது.தமிழில் உபயோகத்தில் இல்லாமல் ஆங்கிலேயராலோ பிறநாட்டவராலோ புகுத்தப்பட்ட சொல்லை அப்படியே தமிழ் ஒலிக்கு மாற்றி ஏற்றுக்கொள்வதை கருத்தளவிலாவது ஏற்றுக்கொள்ளலாம்.
  முக்கியமாக இலத்திரன் ஐதரசன் என்று விஞ்ஞானப் பெயர்கள் புதியதொரு சொல்லால் வழங்கப்படும்போது குழப்பத்தையே ஏற்படுத்தும். ஆனால் முழுச்சொற்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றி வழங்குவதென்பது தமிழை இன்னும் விரைவான அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

  உதாரணமாக கணனி என்று மொழிபெயர்க்கப்பட்டு வழக்கத்திற்கும் வந்துவிட்டது.அதை கம்பியூட்டர் என்று மாற்றினால் கடைச்யில் தமிழுக்கென்று எதுவுமே எஞ்சாது எல்லாமே திசைச்சொல்லாகப் போய்விடும்.

  உதாரணமாக கறுப்பி ஒருபதிவில் புளொக் என்கிறார்.ஒருபதிவில் வலைப்பதிவென்கிறார்.தட்டச்சென்கிறார் ரைப்படிக்கிறதென்கிறார் இதெல்லாம் தானாகத் திருந்தாமல் சொல்லித் திருந்துமென்கிறீர்களா.

  இங்குதான் அறிவை விட்டு உணர்வை பிரயோகியுங்கள்.

  பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — மே 7, 2005 @ 6:58 முப

 17. /தங்கமணி எனக்குத் தமிழில் பிடிக்காததே இந்த ள ழ குழப்பம் தான். (என்னுடைய அம்மாவும் அப்பாவும் தமிழ் வாத்திகள்) கையால் எழுதும் போது நின்று நிதானித்து இந்தக் குழப்பத்தைத் தீரத்துக் கொள்வேன். ஆனால் ரைப்பண்ணும் (தட்டச்சு?) முடிவதில்லை./
  தட்டச்சிடுகையிலே, ல/ள குழப்பமென்றால், புரிந்துகொள்ள முடிகிறது; ள/ழ குழப்பமென்றால்…. இது நல்ல குளப்படியாய் இருக்குது 😉

  ஸ்ரீரங்கன்,
  /நாங்கள் தமிழைத் தூய்மைப் படுத்துவதாகவெண்ணி அந்நியச்சொற்களாகவுள்ள ஒலிமாற்த் தமிழை களைய வெளிக்கிட்டால், தமிழிலுள்ள இருபதினாயிரத்துக்குமேற்பட்ட வடமொழிச் சொற்களைக் களையவேண்டும்./
  இஃது மெய்யே; குறிப்பாக, எது தமிழ் எது வடமொழி என்ற உணர்தலுக்கு அப்பாலே இருக்கும் நிறையச் சொற்கள் இருக்கின்றன. நான் சொல்வது, இயலுமானவரை புதிதாகத் தமிழின் வேர்ச்சொற்களிலிருந்து ஆக்குதலும் அதனைப் பயன்பாட்டிலே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் நுழைத்தலும் அவ்வாறு ஆக முடியாத, ஆனால், வேண்டிய இடத்திலே திசைச்சொற்களைப் பயன்படுத்துதலையும் பற்றியதாகும்.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — மே 7, 2005 @ 9:13 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: