கறுப்பி

மே 31, 2005

சூட் வாங்கப் போறன்

Filed under: Uncategorized — suya @ 12:38 பிப

நெஞ்சை எதுவோ அழுத்தி, அழுத்தி இறுக்கிக் கொள்ள பொய்யற்ற வேதனையுடன் அந்த வீதியால் நடந்து செல்கின்றேன். பல முக்கிய சந்தர்ப்பங்களில் எனது கார் என்னை கை விட்டு விடுவதுண்டு. இன்றும் அப்படித்தான். அனேகமாக இந்த வீதியால் காரில் செல்லும் போது அந்த ஃப்யூன்றல் ஃகோம்மைக் கடக்கையில் எனக்குள் பலவிதமான கற்பனைகள் வந்து செல்லும். எத்தனை உயிரற்ற உடல்கள் இந்த மண்டபத்திற்கு வந்து சென்றிருக்கும். கைக்குழந்தையில் இருந்து கைத்தடிக்காறர்கள் வரை, ஒரு வினாடியில் விபத்தால் இறந்தவரும் பலவருடங்களாக நோயால் அவதிப்பட்டுச் சிதைந்தவரும், வாழ ஆசைகொண்ட கொலைசெய்யப்பட்டோரும் வாழ்வை வெறுத்த தற்கொலையாளிகளும், வடதுருவம் தென்துருவம், மொழிகளால் வேறுபட்டோர் நிறங்களால், குணங்களால்.. இப்படியே என் கற்பனை வளர்ந்து செல்ல செல்ல வேண்டிய இடத்திற்கு கார் தானாக எனைக் கொண்டு சேர்பதுண்டு. இரவு நேரங்களில் இந்த வீதியால் தனியே வருவதை தவிர்ப்பேன். ஆவி, பேய் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லாததுபோல் வெளி உலகிற்குக் காட்டிக் கொண்டாலும் தனியே இந்த வீதியில் வரும் போது தேவையில்லாத கற்பனை எல்லாம் வந்து என்னைப் பயமுறுத்தும். அவசரமாக அந்தப் பொழுதுதான் நான் பார்த்த பேய்ப்படத்தில் ரீல் மனக்கண்ணில் ஓடும். நண்பன் சொன்ன ஆவிக்கதையில் ஞாபகம் வரும். பல வருடங்களிற்கு முன்னமே இறந்த உறவுகளின் முகம் தெரியும். பேய் இருக்கோ என்னவோ நான் வீணாக “ரிஸ்க்” எடுக்க விரும்பாதவனாக்கும்.

ஒருநாள் என் தற்போதைய மனைவியும் முன்னாள் காதலியுமான சாரதாவோடு இந்தப் பாதையால் இரவு வரவேண்டியிருக்க நான் காரை வேறுபக்கமாகத் திருப்புவதைக் கண்டு விட்டு “எங்க போறியள்?” எண்டாள். உண்மையைச் சொன்னால் என் ஆண்மைக்கு இழுக்கென்று விட்டு நான் சமாளிக்க, அவள் வாயுக்க சிரிச்சுக் கொண்டு “அப்ப பிள்ளை சொன்னது உண்மைதான்” எண்டாள். எனக்குக் கொஞ்சம் விளங்கி விட நான் மௌனமானேன். “அப்பாக்குப் பேய்க்குப் பயமம்மா” மகள் சொல்லிச் சிரிச்சது நினைவுக்கு வந்தது. அப்ப நான் மட்டுமா இந்த ரோட்டால போகப் பயப்பிடுறன். மற்றாக்கள் என்னை மாதிரியெல்லாம் கண்ட, கண்ட கற்பனை பண்ணிப் பயப்பிடுறேலையோ? எனக்குள் குடையத் தொடங்கியது.

பள்ளிக் கூட நாட்களில வகுப்புக்குக் குண்டு போட்டிட்டு பெடியளோடை ராணி தியேட்டருக்க புகுந்து படம் பார்க்கும் போது எல்லாப் பெடியங்களும் நாயகிகளின் மார்பு, இடை, தொடை எண்டு ரசிச்சு விசிலடிக்க நான் மட்டும் நாயகிக்கு மிக நெருங்கியிருக்கிற நாயகனின்ர “குறி” யில கண்ணாய் இருப்பன். ஒரு வடிவான பொம்பிளையோட இவ்வளவு கிட்டக் கட்டிப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் உணர்ச்சிகள் கிளறுப்படாதோ? எண்ட கேள்வி என்னைப் போட்டுக் குடையும். ஆங்கிலப் படம் பாக்கேக்க முத்தக் காட்சிகளில இவர்களின் வாய் மணக்காதோ? கேள்வி எழும்பும். இப்பிடி வினோதமான கேள்வி எழும்பி, எழும்பி அடங்குமே தவிர நான் ஒருத்தரிடமும் இதுபற்றிக் கேட்பதில்லை.

இன்னும் கொஞ்சத் தூரம் தான் இருந்தது அந்த ஃபியூன்றல் ஃஹோமை அடைவதற்கு. வழியில் இருந்த கண்ணாடிக் கட்டிடம் ஒன்றை நான் கடக்கும் போது என் உருவபிரதிபிலிப்பைக் கண்டு சிறிது நேரம் அங்கு நின்று எனது உடை, தலைஇழுப்பு போன்றவை சரியாக இருக்கிறதா? என்று நோட்டம் விட்டேன். செத்த வீட்டிற்காக கறுப்பு பாண்ட்ஸ்உம், வெள்ளை சேட்டும் போட்டிருந்தேன். கனநாட்களாக அலுமாரியில் போடப்படாமல் தூங்கியதால் சேட் கொஞ்சம் இறுக்கமாய் இருந்தது. புதுசா ஒண்டு வாங்குவம் எண்டால் மனம் வரவில்லை. ஒருநாள் கூத்துக்கு ஏன் வீணாக் காசைச் சிலவழிப்பான் என்று இறுக்கி பட்டினைப் பூட்டிவிட்டு வந்து விட்டேன். கொஞ்ச நேரம் தானே சரிக்கட்டுவம் என்று மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு நடந்தேன்.
கனடா வந்து இத்தின வருஷத்தில நான் ஒரு நாளும் ஃபியூன்றல் ஃஹோம் போனதில்லை. யாராவது செத்தா அவர்கள் வீட்டிற்கு போய் ஒருக்கா முகத்தைக் காட்டி விட்டு மாறி விடுவது எனது வழக்கம். ஆனால் இது என்னுடைய நண்பன் நேசனின் மரணவீடு. அதுவும் என்னோடு ஒன்றாய் படித்து. ஒன்றாய் வேலை செய்து ஒரு உடன் பிறப்பு போல வாழ்ந்தவன் திடீரெண்டு நெஞ்சு நோவென்று சொல்லி இறந்து போனான்.
சாரதா கத்தினாள். “சொன்னாக் கேக்கிறியளே ஆடு ஆடாச் சாப்பிடுங்கோ. பத்தாததுக்கு தேங்காய்ப்பூ போட்ட புட்டு வேற ஒரு நாளைக்கு நீங்களும் இப்பிடித்தான் திடீரெண்டு போகப்போறியள், நான் இந்தப் பிள்ளைகளோட கிடந்து மல்லுக்கட்டுறன்” எனக்கு அவள் அவசரமாக நாள் குறித்தாள். நான் என்னைக் குனிந்து பார்த்தேன் கால்களைக் காணவில்லை. நாளையில இருந்து விடி விடிய வீட்டைச் சுத்தி ஓட வேணும். முடிவெடுத்தேன். அடிக்கடி இப்பிடி முடிவெடுத்த படியே இருந்தேன்.

இறப்பதற்கு முதல்நாள் கூட நேசன் என்னுடன்தான் கழித்தான். ஊர்ப் பெடியளின் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து விட்டு இரவு என்னுடைய வீட்டில் ஆட்டு இறைச்சிக்கறியும், புட்டும் சாப்பிட்டு விட்டுச் சென்றவன் அடுத்தநாள் காலை வேலையில் நெஞ்சு நோகுது எண்டான் மௌனமாக ஆர்பாட்டம் இன்றி இறந்து போனான்.
நான் பொக்கெற்றுக்குள் இருந்து சீப்பை எடுத்து தலையை ஒருமுறை இழுத்துக் கொண்டேன். ஆட்டு இறைச்சிக்கறியும், புட்டும் என் மனதுக்குள் வந்தது. இதனால்தான் நேசன் இறந்தானோ? நான் தான் அவனைக் கொன்றேனோ? அவனுக்கு ஏன்கெனவோ இருதயக்கோளாறு இருப்பது தெரிந்தும் கொழுப்புக் கூடிய சாப்பாட்டை சாப்பிட வைத்தது என் தவறோ? குற்றஉணர்வு எனைத் தாக்கி, அந்த வேகத்திலேயே “சா” யாருக்கும் எந்த நேரமும் வரும் சும்மா நான் என்னை குற்றவாளியாக்கிக் கொண்டு என்று என்னை நானே சமாதானப் படுத்தி கண்ணாடியில் முகத்தை சோகமாக வைத்துப் பார்த்து மரணவீட்டிற்கு இது போதும் என்ற திருப்தியோடு அந்த ஃப்யூன்றல் ஃஹோமிற்குள் நுழைந்தேன்.
வாசுகி கதறிக்கொண்டிருந்தாள். அவளை யாரோ ஒரு பெண் அணைத்துக் கொண்டிருந்தாள். நல்லா நடிக்கிறான் எப்ப பாத்தாலும் நேசனை பேசிக்கொண்டிருப்பாள் இப்ப கத்துறாள். “பாவம் அந்தப் பிள்ளை நேசன் குடிச்சுப் போட்டுக் கார் ஓடினா பேசுவாள்தானே, உங்களுக்கு உங்கட ப்ரெண்டுக்கு புத்தி சொல்ல வக்கில்லை அந்தப் பிள்ளையில குறைகண்டு பிடிச்சுக் கொண்டு” என் பாரியார் என் மேல் பாய்ந்தாள். “ஆம்பிளைகள் அப்பிடி இப்பித்தான் இருப்பீனம் பொம்பிளைகள் தான் அட்ஜெஸ் பண்ணிக் கொண்டு போக வேணும், ஆக்களுக்கு முன்னால இப்பிடிப் புருசனை மரியாதை இல்லாமல்” வாய்வரை வந்ததை விழுங்கிக் கொண்டன்.

நேசன் படுத்திருந்தான். முகத்தில் சின்ன ஒரு புன்னகை தெரிந்தது. முகம் கறுத்திருந்தது. நெற்றியில் விபூதி சந்தணம். 42 வயசிருக்கும் ரெண்டு சின்னப் பிள்ளைகளுக்கு அப்பா. என்னைப் போல இல்லை நேசனுக்கு கனக்க கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தன. குடி, சிகரெட் எண்டு.. கனக்க எண்டு போட்டு ரெண்டு மட்டும்தான் சொல்ல முடிந்தது. மௌனமாக நின்றேன். அவனுக்குக் கெட்ட பழக்கவழக்கங்கள் இருந்தன அதானால்தான் செத்தான். “நேசன் கெட்டவன்”.

“மல்லி” என் கண்களுக்குள் வந்தாள். என்னோடு வேலை செய்பவள். திருமணம் முடித்துப் பிரிந்து தனியாக வாழ்பவள். தனது உடலின் அம்சங்களை அம்மபலப்படுத்தவென்றே உடை உடுத்தி கண்களால் சிரித்துத் திரிபவள். நேசன் சொன்னான் “நல்ல வடிவா இருக்கிறாள். புருசனோட இல்லாட்டியும் வேற யாரையாவது கலியாணம் கட்டிக்கொண்டு சந்தோஷமா இருக்கலாமே. ஏன் சும்மா பேரைக் கெடுக்கிறாள்” எனக்கு அதில் உடன்பாடு இல்லை. திருமணம் என்ற பந்தத்தை அவள் விரும்பினால் என்போன்ற திருமணமான ராமர்கள் என்ன செய்வது. மல்லி என் கண்கள் பார்த்துச் சிரித்தாள். என் கைகள் அவள் உடல் கசக்கத் துருதுருத்தன. நான் ரூம் போடுவம் எண்டன், ஒத்துக் கொண்டாள். இன்றும் தொடருகிறது எமது உறவு. ஆனால் ஒரு காக்கை குருவிக்கும் தெரியாது. சிகரெட், குடிபோல் இது வெளியில் காட்டிக்கொடுத்து விடாத கெட்ட பழக்கம். “நான் நல்லவன்”.

பலர் வந்து பார்த்து அழுது செல்லும் பார்வைப் பொருளாக நேசன் படுத்திருந்தான். எனக்கும் அவனுக்குமான நெருக்கம் பலர் அறிந்திருப்பதால் நான் பிரத்தியேகமாக என்னை முன் வரிசையில் அமர்த்திக் கொண்டேன். அழகான பூக்களின் அலங்காரத்தின் நடுவே நேசன் படுத்துக் கிடந்தான். என் பார்வை அவனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தது. நேற்று நேசன் என்று அழைக்கப்பட்டவன் இன்று பிரேதம், “(b)பொடி” என்று பல பெயர்களால் அழைக்கப்படுகின்றான். நாளை மீண்டும் அவன் பார்வைக்கு வைக்கப்படுவான். நாளை மாலை நெருப்புப் போறணைக்குள் வைக்கப்பட்டுப் பொசுங்கிப் போவான். அதன் பின்னர் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு சுவடுகள் அழிந்து போகும். என் கண்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. இது நேசன். இன்று அவனின் மரணச்சடங்கு. இதுபோல் ஒருநாள் எல்லோருக்கும் வரும். உறவுகள் அழுது சிதறும். இதுபோல ஒருநாள் எனக்கும் வரும். நினைத்தபோது என் உடல் புல்லரித்தது. நான் குனிந்து பார்த்தேன். கால்களைக் காணவில்லை. நடந்து களைக்கும் போது மூச்சு வாங்கியது. சாப்பாட்டைக் குறைக்க வேணும். உடற்பயிற்சி செய்ய வேணும். மனம் சுழன்று சுழன்று வந்தது. பாவம் சாரதா நான் திடீரென்று செத்துப் போனால் துடித்துப் போவாள். தனிய பிள்ளைகளுடன் ஐயோ நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. தனியே அவள் என்ன செய்வாள்? ஒருவேளை மறுமணம் செய்து கொள்வாளோ? என் உடம்பில் கோபம் உருப்பெற்றது. அழகாகவும் இளமையாகவும் இருக்கின்றாள். நான் செத்தால் நிச்சயம் மறுமணம் செய்வாள். நான் உறுதியானேன். சிலவேளை இப்பவே யாரோடையாவது தொடர்பிருக்குமோ? கடைக்குப் போனனான் அது இது என்று சாட்டுச் சொல்லி அவள் வேலையால் நேரம் கழித்து வரும் நாட்கள் நினைவிற்கு வந்தன. அப்பிடி ஏதாவது இருந்து மாட்டுப் பட்டால் கொலைதான் விழும். நான் கால்களை இறுக்கி அடித்துக் கொள்ளப் பக்கத்தில் நின்றவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்தார். நான் நிலத்தில் எதையோ மிதிப்பது போல் பாவனை செய்தேன் (எறும்போ?)

யாரோ தேவாரம் பாடினார்கள். நேசன் அசையாமல் கிடந்தான். அவனின் தலை சிறிது உயர்ந்து இருப்பது போல்ப்பட்டது. பாவம் கிடத்தியவர் கவனிக்கவில்லை. உயிரற்ற உடல் என்ற அலட்சியம். தலையை பதித்து விட வேண்டும் போல் மனம் பரபரத்தது. நெஞ்சு நோகேக்க எப்பிடி உணர்ந்திருப்பான். நான் கார் விபத்து ஒன்றில் அடிபட்ட போது உயிர் போவது போல் நோ கண்டேன். ஆனால் உயிர் போகவில்லை. அப்பிடியாயின் உயிர் போகும் நெஞ்சு நோ இன்னும் கூடுதலாக இருந்திருக்கும். பாவம் நேசன். என் பார்வை அவனின் உடல் மேய்ந்தது. அவன் கால் விரல்களிலிருந்து தலை வரை நினைவலைகளால் மேய்ந்தேன். துடையில் பெரிதாக ஒரு மச்சமிருக்கு. கடற்கரையில் குளிக்கும் போது கண்டுள்ளேன். எல்லாமே பொசுங்கப் போகுது. ஐயோ ஐயோ ஐயோ ஏன் சாவென்று ஒன்று உலகில்?

என் பார்வை அவன் நெஞ்சுப் பகுதியில் வந்து நின்றது. கறுப்பு சூட்டிற்கு வெள்ளை சேட் போட்டிருந்தான். கறுப்பு சூட்டின் கொலர் பகுதி மெல்லி மினுங்கும் கடும் கறுப்பு நிறத்தில் இருந்தது. நான் உற்றுப் பார்த்தேன். நேசனிடம் ஒரே ஒரு சூட் மட்டும்தான் இருக்கிறது. கடும் நீல நிறம். அது மிகப் பழையது. அவனுக்குக் கொஞ்சம் கட்டையும் கூட. இருந்தும் அவன் அதைத்தான் எல்லா விழாக்களுக்கும் போட்டு வருவான். இது கறுப்பு. புதிதுபோல் இருக்கிறது. அப்பிடியெண்டால் இதை எப்போது வாங்கினான். செத்தவீட்டிற்காக புதிதாக வாங்கியிருப்பார்களோ? இருக்காது. நேற்று செத்தவன் இண்டைக்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறான். அதற்கிடையில் யார் சூட் வாங்கக் கடைக்கு ஓடுவார்கள். உது உவன் புதிதாக வாங்கியிருக்கிறான். எனக்கு மறைச்சுப் போட்டான். எனக்கு நேசன் மேல் கோவம் வந்தது.
“இப்ப உங்களுக்கு என்னத்துக்கு சூட்? ஒருநாள் கூத்துக்கு இவ்வளவு காசைச் செலவு செய்ய வேணுமே. பேசாமல் வேட்டி கட்டிக்கொண்டு வாங்கோ” புதுச் சீலையில் இருந்த சாரதா ஒரேயடியாகச் சொல்லிப் போட்டாள். கலியாண வீடு என்றால் வேட்டி, சால்வை வேறு விழா வென்றால் வெறும் பாண்ட், சேர்ட் என்று என்னைக் கட்டுப் படுத்தி வைத்திருந்தாள். நான் செத்தாப் போட உருப்படியா ஒரு சூட் இல்லை. பதினைந்து வருடத்திற்கு முன்பு என்னுடைய திருமணத்துக்கு வாங்கிய ஒன்று அலுமாரியில் எங்கோ தொங்கிக் கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. அது இப்ப ஒற்றக் காலுக்க நுழையுமோ தெரியவில்லை. நான் செத்தால் அதைத்தான் போடுவார்களோ? சாரதா மேல் கோவம் வந்தது. நான் உழைக்கிறன். எனக்கு அவ ஒரு முதலாளி. நாளைக்கே நான் போய் நல்ல வடிவான ஒரு சூட் வாங்கப் போறன். நேசனின்ரையிலும் விட வடிவா விலையா..
யாரோ ஒருவர் நேசனை நினைவு கூர்ந்து பேசிக்கொண்டிருந்தார்…

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: