கறுப்பி

மே 31, 2005

பிள்ளை கெடுத்தாள் விளை

Filed under: Uncategorized — suya @ 10:07 முப

சுந்தரராமசாமியின் “பிள்ளை கெடுத்தாள் விளை” சிறுகதை பல சர்ச்சையைக் கிளப்பியிருப்பது எல்லோரும் அறிந்ததே. காலச்சுவட்டில் இச்சிறுகதையைப் படித்த போது மிக மிக நல்ல கதை என்றோ, இல்லாவிட்டால் தலித்களைக் கேவலப்படுத்தும் ஒரு சிறுகதை என்றோ என் மனதில் எதுவும் எழவில்லை. படைப்பாளியின் பின்புலங்கள், சாதி, சமயம் என்று பாராமல் ஒரு படைப்பு என்ற விதத்தில் பெரிதாக எனைத் தாக்காத ஒரு சாதாரண கதையாகவே என்னால் பார்க்க முடிந்தது. அதன் பின்னர் தொடர்ந்து வந்த விமரச்சனங்கள் சு.ரா வேண்டுமென்றே தலித்களைக் கேவலப்படுத்தியிருக்கின்றார் என்ற கருத்துக்கள் என்றால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. பதிவுகளில் ரவிக்குமாரின் பார்வையும், ஆதவன் தீட்சண்யாவின் பார்வையும் இரு வேறுபட்ட கோணங்களில் இருந்தன. எல்லாவற்றையும் படித்த படியே இருந்தேன். வலைப்பதிவுகளிலும் பல சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. அனேகமா எல்லோரும் சு.ரா தலித்களைக் கேவலபடுத்தியிருப்பதாக ஒத்துக் கொண்டே எழுதியிருக்கின்றார்கள்.
கடந்த சனிக்கிழமை ஒரு ஒன்று கூடலிலும் இது பற்றிய பேச்சு எழுந்தது. அங்கும் சு.ராவைத் திட்டியே எல்லோரும் கதைத்தார்கள். நான் என்னால் அவர்கள் பார்வையை ஒத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறியபோது, சு.ரா ஒரு பார்ப்பன் அவர் ஏன் தலித் பெண்ணைக் கேவலப்படுத்தி எழுத வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அந்தத் தலித் பெண் இருக்கும் இடத்தில் ஒரு பார்பானியப் பெண்ணை வைத்துச் சுராவால் எழுத முடியுமா என்ற கேள்வியும் வைக்கப்பட்டது. என் கருத்தாக ஒரு பார்பானியப் பெண் இந்த நாயகியின் இடத்தில் இருந்திருந்தால் இப்படியான அவலத்திற்கு ஆளாகியிருக்கமாட்டாள். கதை வேறுமாதிரித் திரிக்கப்பட்டிருக்கும். அவளைப் புனிதப்படுத்திச் சிறுவனைக் கேவலப்படுத்தியிருக்கும் இந்த உலகம். ஆனால் தலித் பெண் எனும் போது அங்கே அப்பெண் கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றாள் இங்கிருந்துதான் படைப்பின் தேவை உள்ளது என்றேன். இல்லை சுராவால் தலிப்பெண்ணைக் கேவலமாக எழுத முடியும், ஒரு பார்பானியப் பெண்ணை எழுத முடியாது என்று இந்த வாதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. சு.ராவின் அத்தனை நாவல்களையும் வாசித்துள்ளேன். சிறுகதைகளும், கட்டுரைகளும் அனேகம் படித்திருக்கின்றேன். தலிக்களை மையமாக வைத்து இமையம், பாமா, பூமணி போன்று சு.ரா படைப்புக்களைப் படைத்ததில்லை. இருந்தும் “தோட்டிமகன்”, “செம்மீன்” போன்ற நாவல்களை மொழிபெயர்ப்பு செய்திருக்கின்றார்.
நான் பின்பு யோசித்துப் பார்த்தேன் என் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் தோன்றவில்லை அதற்குக் காரணங்களாக சுரா. எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி மட்டுமல்ல, அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் என் நண்பர்களும் கூட. இது என்னை சு.ராவைத் தவறாகப் பார்க்க அனுமதிக்கின்றது இல்லை. (அப்படியாயின் என் பார்வை தவறானதே) இல்லாவிடில் சு.ரா உண்மையாகவே தலித்களைக் கேவலப்படுத்தி எழுதவில்லை. அவர் பார்ப்பன் என்பதால் மட்டும் அவர் விமர்சிக்கப்படுகின்றார். இதில் ஒன்றுதான் காரணமாக இருக்கும். ஆனால் சு.ரா வாசகர்களால் வைக்கப்பட்ட அவர் படித்த அத்தனை விமர்சனங்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றார்.

Advertisements

2 பின்னூட்டங்கள் »

 1. பிள்ளை கெடுத்தாள் விளை முனைவர் பஞ்சாங்கம் விதப்பதைப்போல் விதக்கவேண்டிய மிக உயர்வான படைப்போ அல்லது மற்றவர்கள் மிதிப்பதைப்போல் மிதிக்கவோவேண்டிய படைப்போ அல்ல.
  திருச்சிப் பக்கமாக கொடும்பாளூர் என்றொரு ஊர் உள்ளது. சுந்தரராமசாமியின் அடுத்தகதை அந்தப்பெயர் எப்படி வந்தது என்ற விளக்கத்தைத்தருவதாகக்கூட இருக்கலாம். பி.கெ.விளையில் ஆதவன் தீட்ஷண்யா குறிப்பிடும் காலவழுக்கள் இருப்பது உண்மையே. அது வெளிக்கட்டமைப்பில் உள்ள மறு/மறை. அதனால் படைப்பின் இலக்கியத்தரம் கெடுகிறதென்ற வாதம் அர்த்தமில்லாதது. படைப்பின் உள்ளீடு தலித்துக்களை எதுவிதத்திலும் கேவலப்படுத்துவதில்லை. இதே கதையை ஒரு பாமாவோ, இமயமோ எழுத நேர்ந்திருந்தால் இதேபேர்வழிகள் அதைத் தலையில் வைத்துக்கொண்டாடி இருந்திருப்பார்கள்.

  ஏப்ரல் இதழில் ‘நதியின் புன்னகை’ என்ற நீண்டகதையை டி.சாணக்கியா எழுதிச்செல்கிறார். ஒரு ஆற்றில் நீராடப்போன இரு சகோதரியரும் ஒரு சிறுவனுமான மூன்று அலர் அகவையினர் நீந்தத்தெரிந்திருந்தும் அநியாயத்துக்கு தாமரைக்கொடியில் சிக்கி இறந்து போகிறார்கள். மரணம் ஏற்படுவதற்கும், அவர்கள் உடல்கள் வெளியில் எடுத்துப்போடப்படுவதற்குமிடையில் எதற்கென்று தெரியவில்லை அவர்களை ஒரு மாய உலகத்துக்கு அழைத்துச்செல்கிறார் ஆசிரியர். சகோதரியருடன் கூடப்போன அந்த இளைய அரைக்காற்சட்டைச் சிறுவன். முதல் நிஜத்திலும், பின் மாயத்திலும் சகோதரியர் இருவரினதும் மார்புகளை மாறிமாறிச் சுவைக்கிறானாம். காமத்தை அனாவசியமாக இங்கெ புகுத்தி மகிழ்வதில் படைப்பின் கனம் எவ்வகையில் ஏறுகிறது/மாறுகிற தென்று தெரியவில்லை.

  இந்த அபத்தத்தை எழுதியதற்காக டி.சாணக்கியாவை எவர்தான் வைதார்கள்? பி.கெ.விளையைப் பொறுத்தமட்டில் இங்கே நடப்பது பிராமணன் அப்பிராமணன் என்ற அரசியல் மாதிரமே. அது இலக்கியச் சர்ச்சையேயல்ல.
  கதையைப் புரியவேண்டியவர்கள் புரியவேண்டியவிதத்தில் புரிந்தேயிருப்பார்கள்/புரிந்துகொள்வார்கள்.
  படைப்பாளி எல்லா விமர்சனங்களுக்கும் / விஷமங்களுக்கும் தன்னிலை விளக்கமளிக்கவேண்டியதில்லை.

  = காருண்யன் கொன்பூசியஸ் =

  பின்னூட்டம் by Couvin — ஜூன் 20, 2005 @ 4:54 பிப

 2. A pretxt==>

  பிள்ளை கெடுத்தாள் விளையை சுந்தரராமசாமி எழுதினலும் எழுதினாரோ அது படுகிறபாடும் ஜெயேந்திரர் கைதையும்
  விஞ்சிவிடும்போல் இருக்கிறது. ஒரு தலித் பெண் மேல் சாதியென மேல் சாதியினரால் கருதப்படும் சிறுவனைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக ஊகிக்க இடம் தருகிறது கதை. கவனியுங்கள் ==> அப்படியேதும் இல்லாமலும் இருக்கலாம். அத்தலித் பெண்ணானவள் தலித்துக்களாலேயே துரத்தியடிக்கப்படுகிறாள். எந்த விமரிசகனும் சந்தேகத்தின் பலனைத் தலித்துக்குத்தரத் தயாராயில்லாத நிலையில் கதையும் ; அதன் ஆசிரியரின் தலையும் உருட்டுப்படுவதுதான் கேவலம்.

  Karunyan Konfuzius

  பின்னூட்டம் by Couvin — ஜூன் 21, 2005 @ 9:16 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: