கறுப்பி

ஜூன் 22, 2005

ரத்த உறவு

Filed under: Uncategorized — suya @ 1:20 பிப

தமக்கான பெறுதல்களை நாடிப் போராடும் குணாம்சம் தவிர்க்க முடியாத ஒன்று. உரிமைக்குக் குரல் கொடுத்து மனிதன் மிருகமாகிப் போகும் பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அங்கே சில நியாயப்படுத்தலுக்கும் இடமுண்டு. திருமணம், குடும்பபந்தம், ஆண்பெண் உறவு, குழந்தைகள் பெற்றோரிற்கான உறவு என மிகவும் இதமாக அணைப்புக்களும், பகிர்தல்களும் கொண்டு நகர வேண்டிய இந்த உறவு பல இடங்களில் சிதறிப் போகின்றது. காரணம் உலகின் ஒட்டுமொத்த ஆணாதிக்கத் தன்மை. நிரூபித்தல, அடக்குமுறை, தலைமை, என்று ஆண்கள் தமது குடும்ப அங்கத்தவர்களிடமே ஆளுமையைச் செலுத்தும் போது உறவுகள் உடைகின்றன. நம்பிக்கை இன்மை வளர அதுவே குடும்பத்தின் வெடித்தலுக்குக் காரணியாகின்றது. நாடு, கலாச்சாரம், நிறம்குணம் அற்று ஒட்டு மொத்த உலகும் ஆணாதிக்க வடிவில் தழைத்து நிற்கின்ற தருணத்தில் ஆணாதிக்கத்தின் உச்சக் கட்டமாக சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனேக மூன்றாம் உலக நாடுகளில் குடும்பம் எனும் கூட்டினுள்ளும், ஆணாதிக்க வெறி தலை தூக்கி ஆடுவதால் பல பெண்கள் வார்தைகளற்று அடிமைகளாக உளன்று கொண்டிருக்கின்றார்கள்.

இதமான அலங்காரங்களுடனான மனதை வருடிவிடும் வசன அமைப்புக்களின் தேடல்களுக்காய் மனம் ஏங்க, நெஞ்சில் உதைக்கும் சம்பவக்கோர்வைகளால் வாசகர்களைக் கட்டிப்போட்டு எங்கேனும் எங்கேனும் ஒரு பொழுதாவது நிம்மதியாக மூச்சை இழுத்து விசுவாசம் கொள்ளத் துடிக்கும் வாசக நெஞ்சங்களை யாதார்த்தம் இது, உறைந்து போ என்று கட்டிப்போட்டுத் தாக்கி, “ரத்த உறவை” நகர்த்தியுள்ளார் எழுத்தாளர் யூமா வாசுகி.

ஒரு குரூரமான ஆளுமையின் உருவு. தனது தலமையில் உழைப்பில் குடும்பத்தை இயக்கிச் செல்லும் அதீத திமிர். நியாய தர்மங்களுக்கு அப்பாற்பட்ட அதர்மவாதி. அலட்சிய ஆண்மையின் திமிரால் தன் சொந்த மகனையே நோயுக்குக் காவு கொடுக்கும் குரூரம். தனது சகோதரனின் மனைவியுடனான உறவு இருந்தும், சமூக இயக்கத்தில் நிராகரிப்பின்றி வாழும் மனித மிருகம். அப்பா என்ற உருவ அமைப்பின் அசைவில் திடுக்கிடும் குழந்தைகள். மனதில் “அப்பா” என்ற பொருளுக்கான அன்புப் பீறிடல்கள் மதிப்பாய் ஊசலாடல நெருக்கத்தைக் கனவிலில் விரிக்கும் ஆதங்கம். தமக்கு இயமனாக இருந்திருக்கக் கூடிய தந்தையின் சாவு வீட்டில்; “டேய் தம்பி அப்பாவெடா” என்று உடலைக் காட்டிக்கதறும் மகள். தண்டிக்கப்படுவது எதற்கென்று தெரியாத தடுமாற்றத்துடனும், அப்பாவின் பசுமையான ஒரு பார்வை வீச்சுக்காகவும், அப்பாவைக் கோபம் கொள்ளாமல் செய்வதிலேயுமே வாழ்நாளைக் கழிக்கும் சின்னஞ் சிறுசுகள். அப்பாவின் அதீத இம்சைகளால் இறந்தாளோ என்று தாயின் உடலைப் புரட்டிப் போட்டு பார்த்து கண்ணீருடன் நிம்மதி கொள்ளும் அவர்களின் அன்றாட வாழ்க்கை வாசகர்களின் இருதயத்தைப் பலவீனப்படுத்தி எப்படியாவது உதவிடத் துடிக்கின்றது.

திருக்கை வாலுடன் வந்த அப்பா, மெதுவாக அதற்கு எண்ணெய் போட்டு உருவி எடுத்துக் காய வைக்கும் போது அதன் உபயோகத்தை எண்ணி கைகள் நடுங்குகின்றது. நாவலின் எந்த ஒரு பகுதியிலும் நியாயமான தீர்வுக்கான சாயல்கள் காட்டப்படவில்லை. குரூரமான மிருகத்திடம் விடப்பட்ட அபலைக் குஞ்சுகளின் வேதனையை வேடிக்கை பார்க்கும் உறவுகள், சமூகங்களுடன் சேர்ந்து ஒரு குரூரமான இறப்பை காண்பதற்கு வாசகர்களையும் தயார் படுத்தி நாவலை நகர்த்துகின்றார் எழுத்தாளர். அப்பாவின் அந்தக் குடூரமான கைகளுக்குள் அகப்பட்டு இறக்கப் போவது அம்மாவா, அக்காவா, பெரியதம்பியா, தம்பியா என்று மனம் அடித்துக் கொள்கின்றது. “டேய் தம்பி சின்னப்பிள்ளைத் தனமாக அப்பாவுக்குப் பிடிக்காத எதையும் தயவுசெய்து செய்து வைக்காதே” என்று வாசகர்கள் வாயும் புலம்புகின்றது.

அப்பாவின் இறப்பிற்குப் பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட மாற்றம் சில பக்கங்களில் மட்டும் காட்டப்பட்ட போதும் வாசகர்கள் ஒவ்வொருவரும் வேண்டி நின்றது அதைத்தான் என்ற நிம்மதியுடன் நாவலை மூட முடிகின்றது. “அக்கா” என்று கதையில் விழிக்கப்படும் அந்தச் சிறுமி பாவாடை தாவணி அணிந்து பாடசாலை போகும் காட்சி ரம்மியமாக மனதை நிறைக்கின்றது. இத்தனை இம்சைகளை தாங்கி வாழப்பழகிய அந்தக் குடும்பம் இனித் தப்பிவிடும் என்ற நிம்மதி. இப்படியான குடும்பங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்ற என்ற உண்மையை எச்சில் விழுங்கி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
மனதை உலுக்க வைக்கும் கதைப் பின்னணியை தனது எளிமையான நடையில் வாசகர்களுக்குத் தந்த யூமா வாசுகியின் “ரத்த உறவு” அண்மைக்காலங்களில் வந்த சிறந்த நாவல்களில் ஒன்று என்று வாசகர்கள் எல்லோராலும் வாதங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisements

6 பின்னூட்டங்கள் »

 1. கறுப்பி,
  நான் வாசிக்கவில்லை. ஆனால், வாசித்தவர் ஒருவர் நீங்கள் சொல்வதுபோலவே அண்மைக்காலத்திலே வந்த புதினங்களிலே குறிப்பிடத்தக்கதென்று சொன்னார்.

  பின்னூட்டம் by -/peyarili. — ஜூன் 22, 2005 @ 2:09 பிப

 2. கறுப்பி,
  நான் வாசிக்கவில்லை.
  ஒருவர் அண்மைக்காலத்திலே வந்த புதினங்களிலே குறிப்பிடத்தக்கதென்று சொன்னார்.

  Thanks.

  பின்னூட்டம் by Thangamani — ஜூன் 22, 2005 @ 3:12 பிப

 3. பெயரிலி வாசியுங்கள்.. இப்படியான சில குடும்பங்களை எனக்கு ஊரில் தெரியும். நெஞ்சைப் பதைக்க வைக்கும் சம்பவக் கோர்வைகள்.
  என் மாமா ஒருவரும் தங்கள் வீட்டு வேலைக்காறப் பெண்ணை (8வயதுச் சிறுமி) மிகவும் அடித்துத் துன்புறுத்துவார். மனித மனங்கள் ஏன் இப்படி வர்கிரமித்துப் போய் கிடக்குதோ.

  தங்கமணி you are bad! cut and paste ahhhh (*_*)

  பின்னூட்டம் by ??????? — ஜூன் 23, 2005 @ 5:55 முப

 4. எங்கேயோ கேட்ட கதை.

  பின்னூட்டம் by ???????????? — ஜூன் 23, 2005 @ 10:41 முப

 5. //எங்கேயோ கேட்ட கதை\
  என்ன எங்க கேட்டீர்கள். கிடைத்தால் வாசித்துப் பாரும்.

  பின்னூட்டம் by ??????? — ஜூன் 23, 2005 @ 11:56 முப

 6. இந்தக் கதையில் வருவதாக நீங்கள் குறிப்பிடும் சம்பவங்கள் எங்கள் ஊரிலும் நடந்திருக்கின்றன. ஆனால் ஒரே குடும்பத்தில் எல்லாச் சம்பவங்களும் நடக்கவில்லை.

  எனவே, எங்கேயோ கேட்ட கதைதானே.

  பின்னூட்டம் by ???????????? — ஜூன் 23, 2005 @ 12:58 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: