கறுப்பி

நவம்பர் 13, 2005

எமக்கும் இதுதான் ஊர் – நிகழ்வு

Filed under: இலக்கியம் — suya @ 8:04 முப

வடபுலத்திலிருந்து விடுதலைப்புலிகள் அமைப்பினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிற்காகக் குரல் கொடுக்கும் வகையில் 12ம் திகதி ஸ்காபுரோவில் இடம்பெற்ற நிகழ்வின் தொகுப்பும் – குறிப்பும்.

நிகழ்வைத் தொகுத்து வழங்கிய கருமையத்தின் முக்கிய அங்கத்தவர்களில் ஒருவரான தர்ஷன், நல்ல ஒரு இலக்கிய வாசகர், விமர்சகர், அண்மையில் நாடகங்களிலும் நடித்து வருகின்றார். முஸ்லீம் மக்களின் வாழ்வின் அவலத்தை நினைவு கூறும் விதமாக கவிதை ஒன்றைப் படித்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து பதினைந்து வருடத்திற்கு முன்பு இடம்பெற்ற ஒரு சம்பவத்தை, எதற்காக இப்போது தூக்கிப் பிடித்து நிகழ்வு வைக்கின்றார்கள் என்ற சில பொதுமக்களின் புறுபுறுப்பிற்கும், முழக்கம் பத்திரிகை வெளியிடப்பட்ட அலசலுக்கும் பதில் சொல்லும் வகையில், ஐம்பது வருடத்திற்கு முன்பு ஜேர்மனிய சர்வாதிகார ஆட்சியில் நாசிகளால் அழிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை எப்போதும் உலகம் நினைவு கூறும், அதே போல் பதினைந்து வருடத்திற்கு முன்பு தமது சொந்தமண்ணிலிருந்து தூக்கி எறியப்பட்ட முஸ்லீம் மக்களை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் நினைவு கூறுவான் என்றும் கூறினார்.

குறிப்பு – முஸ்லீம் மக்கள் தாம் பிறந்து வளர்ந்த மண்ணிலிருந்து தூக்கியெறியப்பட்டு பதின்நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவர்கள் புத்தளத்தில் தம்மால் முயன்றவரை சந்தோஷமாக வாழத்தொடங்கிவிட்டார்கள் இனி எதற்காக இதனை தூக்கிப் பிடித்து திடீரென்று நிகழ்வு நடத்துகின்றார்கள். முழக்கம் பத்திரிகையின் அங்கலாய்ப்பு இது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் தனது சொந்தநாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு கிட்டத்தட்ட இதே காலஅளவு இருக்கலாம். இன்றும் தனது பத்திரிகையில் தமிழ்காக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருக்கின்றார். தமிழீழம் கிட்ட வேண்டும் என்பது பற்றி மிகவும் சிரத்தையுடன் செய்திகள் வெளியிட்டு வருகின்றார். கனடாவில் தன்னால் முயன்றவரை சந்தோஷமாக வாழ்ந்து வரும் இவர் போன்றவர்கள், இனியாவது ஈழம், மொழி, மண் என்ற பேச்சை விடுத்து கனேடியச் செய்திகளில் கவனம் செலுத்துதல் சாலச்சிறந்தது.
சரி இத்தனை வருடம் மௌனம் சாதித்து விட்டு எதற்கு பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று? இந்தக் கேள்வி எனக்குள்ளும் எழுந்ததுதான்.

நிகழ்வில் உரையாற்றிய கற்சுறா முஸ்லீம் மக்களின் அவலங்கள் கணிசமான அளவில் பதியபடவில்லை என்றும், அன்று முஸ்லீம் மக்களின் அவலத்தைத் தனது எழுத்தில் கொண்டு வந்த வ.ஐ.ச ஜெயபாலன், இன்று அதற்கு எதிர்மாறான கருத்துக்களை எழுத்தில் வைக்கின்றார் என்று ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார். தொடர்ந்து ஒட்டாமடி அரபாத், இளையஅப்துல்லா, றாஷ்மி, சோலைக்கிளி போன்ற சில எழுத்தாளர்களும், தாயகம், சரிநிகர், தேடல், எக்சில், போன்ற சில சஞ்சிகைகளும் மட்டுமே முஸ்லீம் மக்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுத்திருக்கின்றார்கள என்றும் கூறினார்.
கனேடியச் சூழலிலிருந்து கொண்டு, ஈழத்தில் இடம்பெற்று வரும் அராஜகமான போராட்டித்திற்கு எதிர்குரல் காட்டியவர்கள் பலர். இவர்களில் சிலர் காலப்போக்கில் “கொள்கை மாற்றம்” கொண்டும், இன்னும் சிலர் விரக்தியின் பேரிலும், இன்னும் சிலர் வேறுநாட்டங்களினால் விலகி தாமும் ஏதோ செய்வதாய் ஜாலம் காட்டிக்கொண்டும் இருக்கின்றார்கள். இருந்தும் தனது சிறுகதைகள், கவிதைகள், கவிதா நிகழ்வு, நாடகம் போன்றவற்றால் அன்று தொடக்கம் இன்று வரை மனிதக்கொலைக்கு எதிராகவும், முஸ்லீம் மக்களின் அவலத்துக்காகவும் குரல் கொடுத்து வரும் எழுத்தாளர் சக்கரவர்தியை எப்படி கற்சுரா குறிப்பிட மறந்தார்? எழுத்தாளர் சக்கரவர்தி ஒரு தனி மனிதனாக அன்று எக்சிலில் தொடங்கி இன்று கருமையத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து கொண்டும் தனது கொள்கையில் எந்த மாற்றமும் இன்றி, விட்டுக்கொடுப்பு இன்றி மனிதக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருபவர். எனவே பதினைந்து வருடத்தின் பின்னர் திடீரென்று ஏன்? என்று சக்கரவர்தியை பார்த்துக் கேட்டுவிட முடியாது.

முன்னாள் காங்கிரஸ், தமிழரசுக்கட்சிகளின் உறுப்பினர், இடதுசாரியும் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட அடுத்த பேச்சாளர் நடராஜான் படுகொலை செய்யப்பட்ட கோப்பாய் கல்லூரி அதிபர் நடராஜா சிவகாட்சம் அவர்களையும், யாழ்மத்தியகல்லூரி அதிபர் இராஜதுரை அவர்களையும் நினைவு கூர்ந்தார். அதிபர் இராஜதுரை தனது மாணவன் என்றும் அழிந்து நிலையில் இருந்து யாழ்மத்தியகல்லூரியைக் கட்டி எழுப்பி யாழ்ப்பாணத்து மாணவர்களுக்கு கல்வியை வழங்க முனைந்த ஒரு நல்ல மனிதரைக் கொன்றதன் காணரம் என்ன? என்று குரல் தழுதழுக்கக் கேள்வி எழுப்பினார். இரண்டு அதிபர்களின் படுகொலையின் பின்னர் ஊடகங்கள், அதிபர் நடராஜாவிற்குக் கொடுத்த கவனத்தை அதிபர் இராஜதுரைக்குக் கொடுக்கவில்லை இதற்கு சாதியம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார். தொடர்ந்த இவர் உரையில் என் தலைவர் ஆனந்தசங்கரி என்று விழித்த போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. டக்ளஸ் தேவானந்தா, கருணா, ஆனந்தசங்கரி போன்றோரை அழிக்கும் வரை விடுதலைப்புலிகள் ஓயமாட்டார்கள் என்றும், எமது நாடு அழிந்து விட்டது, யாழ்ப்பாணத்தில் உயிர்பு இல்லை, இனி ஒரு போர் சூழல் வரப்போவதில்லை, விடுதலைப்புலிகள் இயக்கம் இதனை முற்றாக உணர்ந்து கொண்டு விட்டதால் மிகவும் அவசரமாகப் புலம்பெயர்ந்த தமழிர்களிடம் அடுத்த போர் வரப்போகின்றது என்ற பொய்யான தகவலைக் கூறி பணம் சேகரித்துத் தம் பைகளை நிறப்பிக் கொள்கின்றார்கள் என்றும் கூறினார்.

கன்னிகா திருமாவளவன் பேசுகையில் இனத்துவேசம் நாம் அறிந்த வகையில் நிறம் மதம் மொழி சமுதாயம் நாடு என்று பலவகையாக பரவிக்கிடக்கின்றது, நாம் அறியாத வகையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிய வெறி இருக்கின்றது. எம்மை அறியாமலேயே இனத்துவேசர்களா நாம் வாழ்ந்து வருகின்றோம், அன்றாட வாழ்க்கையில் எமது பேச்சு வாழ்க்கை முறையிலேயே நாம் இதனை அவதானிக்கலாம் என்றும் கூறினார்.

பலர் தம்மை சிறந்த முற்போக்கிகளாகப் பிரகடணம் செய்யப் பிரயோகிக்கும் வார்த்தையில் முக்கியமானது “நான் சாதி பார்ப்பவன் அல்ல” இவ்வரிகளை ஒரு தலித் பாவிக்க முடியுமா? இவ்வரிகளைக் கொண்டு தன் உயர்சாதியை மறைமுகமாக நிலை நாட்டுகின்றான் யாழ்ப்பாணத்து முற்போக்குத் தமிழன். நான் சாதி பார்ப்பவன் அல்ல, நான் நல்ல முற்போக்குவாதி, நல்ல மனம்கொண்ட பிரஜை. ஆகா!

"நம்மொழி" ஆசிரியர் பாஸ்கரன் முஸ்லீம் மக்களிற்கு ஏற்பட்ட அநியாயங்களை தனது பேச்சில் எடுத்துக்கூறித் தமிழனாய் வாழ்வதற்காகத் தான் தலை குனிந்து நிற்பதாகக் கூறினார்.

ப.அ ஜெயகரன் தேடல் சஞ்சிகையில் முஸ்லீம் மக்களின் இடம்பெயர்வு தொடர்பாக வெளிவந்த கவிதை ஒன்றை படித்துக் காட்டினார்.

கருமையம் அமைப்பின் சார்பாக முஸ்லீம் மக்களின் அவலத்தை முன்நிறுத்தி “கைநாட்டு” எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டது.

தொடர்ந்த நிகழ்வாக காத்தான்குடியில் இடம்பெற்ற முஸ்லீம் மக்களின் படுகொலையைக் காட்டும் விவரணப்படம் பார்வைக்காகப் போடப்பட்டது.

சக்கரவர்தியின் ஆக்கத்தில் “ஞானதாண்டம்” எனும் குறுநாடகம் இறுதி நிகழ்வாக இடம்பெற்று பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

இறுதியாக நிகழ்வு பற்றிய விமர்சனங்கள் வாதங்களுடன் நிகழ்வு நிறைவிற்கு வந்தது.

Advertisements

23 பின்னூட்டங்கள் »

 1. அன்று முஸ்லீம்கள் வெளியேற்றப்படாது இருந்தால், ஜூலைக்கலவரம் போன்று ஒரு மிகப்பெரிய இன அழிப்பில், சிறீலங்காஇராணுவத்துடன் இனைந்து மேற்கொள்ள சதித்திட்டம் போட்டிருந்தது, அனைவருக்கும் தெரியும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களே அதற்கு சாட்சி, தெரிந்தோ தெரியாமலோ சிங்களப்பேரினவாதத்திற்கு அவர்கள் துணை போனார்கள். இருப்பினும் அவர்களின் பூமியில் அவர்க வாழ உரித்துடயவர்கள், அதற்காகவே இபோது அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலகாலங்களில் சில நடவடிக்கைகள் தவிர்க்கப்படமுடியாதவை, எல்லாவற்றிற்க்கும் மேலாக தமிழனின் இருப்பு முக்கியமானது, இல்லாவிட்டால் ஈழத்தில் தமிழன் இருந்தான் என்ற வரலாறு மட்டுமே எஞ்சி இருக்கும்.

  பின்னூட்டம் by ஈழபாரதி — நவம்பர் 13, 2005 @ 9:29 முப

 2. விரிவாகத் தொகுத்துத் தந்துள்ளீர்கள் கருப்பி.அவ் நிகழ்வில் பங்குபற்றிய உணர்வைத் தங்கள் பதிவு ஏற்படுத்தி விடுகிறது.நன்றி கருப்பி.

  பின்னூட்டம் by Sri Rangan — நவம்பர் 13, 2005 @ 10:06 முப

 3. நாம் அனைவரும் மனிதர்கள், நாம் அனைவரும் பிழைகள் விடுபவர்கள். புலிகள் முஸ்லீம்களுக்கு இழைத்த அநீதி சிலரால் முன்நிறுத்தப்பட்ட ஈழபோராட்டத்தின் “புனித” தன்மையை கழைந்து, யாதார்த்த நிலையை உணர்த்தியது. யாதார்த்தம் யாதெனில் நாம் அனைவரும் மனிதர்கள், பிழைகள் விடும் மனிதர்கள், இவ் பூமி பந்தில் சிறப்பாக வாழ முயற்சி செய்கின்றோம், அவ்வளவுதான்.

  சிங்கள அரசுகளும், சிங்கள இனவாத குழுக்களும் பிளைகளை செய்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் அவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் தமிழ் சமூகத்துக்கும் இருக்கும் தொடர்பு தமிழர்களுக்கும் உலகின் பிற இனத்தவர்க்ளுக்கும் இருக்கும் தொடர்பை விட நீண்டது, முக்கியமானது.

  ஒரு இனத்தின் சிறந்த தனித்துவங்களை பாதுகாப்பதும், வளர்ப்பதும் சிறந்த கோட்பாடே. அவற்றை பிற மக்களுடன் பகிர்ந்தும், அவர்களிடம் இருப்பதை பெற்றும் மேலும் வளர வேண்டும். அதைவிட்டு, மேலான்மையையோ, இன வேறுபாட்டையோ, பிரிந்துணர்வையோ தொடர்ந்தும் முன்நிறுத்துவது அனைவரின் ஆக்கபூர்வமான வாழ்வுக்கு வழிசெய்யா.

  ஜெ.வி.பி மற்றும் இனவாத கட்சிகள் கக்கும் இனவாதம் கொடுரூமானது. அதை நாம் எதிர்கொள்ளும் நிலையிலும், அப்படிப்பட்ட இனவாதத்தை நாமும் பிறப்பிக்ககூடாது. முஸ்லீம்களுக்கு நாம் இழைத்த அநீதி இதை எமக்கு உணர்த்த வேண்டும். அதை நினைவு கொள்வதன் மூலம் அவ் வழியில் நாம் மீண்டும் செல்வதை தடுப்பதற்க்கு உதவும் என்றும் நானும் நம்புகின்றேன்.

  பின்னூட்டம் by நற்கீரன் — நவம்பர் 13, 2005 @ 10:10 முப

 4. விபரத்துக்கு நன்றி.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 13, 2005 @ 10:47 முப

 5. [நகைச்சு வை]
  ஈழபாரதியின் கருத்து எறிகிற பந்துக்கு இருட்டிலே குருட்டாம்போக்கிலே ஆறு அடிக்கும் முயற்சிக்கான வியூகமென்றால், கறுப்பியின் பதிவு(கள்) தனக்கான பார்வையாளர்களைத் தேர்ந்தெடுத்து, மிகவும் கவனத்துடன் பிடித்திருக்கும் துடுப்பிலே பட்டுத் தெறித்து ஆறாகப் போய்விழ அமைக்கப்பட்ட வியூகம். 😉

  சக்கரவர்த்தி, கறுப்பி, ராஜேஸ்வரி குரூப்புக்கும் ஈழபாரதி, முழக்கம் குரூப்புக்கும் “ஆற்றுக்கு அந்தப்பக்கம் நீர்; இந்தப்பக்கம் நாம்” என்பதைத் தவிர பெரிதாக வித்தியாசமில்லையென்பதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது.

  இரு சாராருமே தக்கிப் பிழைத்துக்கொள்வீர்கள். 😉

  எழுதுங்கள் ஈழபாரதியின் கல்லறையில்:
  இவர் மேற்கிலிருந்து தமிழ்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவரென்று.

  பாடுங்கள் கறுப்பியின் கல்லறையில்:
  இவர் கனடாவிலே மனிதவுரிமையைக் கண்டு காவலராய் நின்றவரென்று…

  இது யாருக்காக!
  இந்தப்பதிவுகள் மனித உரிமைப்பதிவுகள்.
  திசைகள், அறிவுஜீவிகள் பாராட்டப்போகும் பதிவுகள்…
  யாருக்காக!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ;-)))))))))))
  [/நகைச்சு வை]

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 13, 2005 @ 10:50 முப

 6. கறுப்பி உங்கள் பதிவிற்கு நன்றி.

  பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் வடக்கே யாழ்ப்பாணத்தில் முஸ்லீம் மக்கள், விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்டும், கிழக்கே காத்தான்குடி பள்ளிவாசலில் நூற்றுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது, மனிதநேயம் உள்ள ஒவ்வொரு ஈழத்தமிழனையும் வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது.

  உங்கள் பதிவில் ஈழபாரதியின் குறிப்பில்:
  சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லீம்கள் தமிழர்களின் அழிப்பிற்கு சதித்திட்டம் போட்டிருந்தார்கள் என்ற கருத்து மிகவும் அப்பட்டமான பொய்யாக இருக்கின்றது. இன்னும் ஒரு படி மேலே போய் அவர்களிடம் ஆயுத்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுளார். அப்பட்டமான பொய்த் தகவல்களை சொல்லுவதால் என்ன லாபாம்?
  இலங்கை அரசாங்கத்திற்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

  ‘சில காலங்களில் சில நடவடிக்கைள் தவிர்க்க முடியாதவை”
  இது தமிழர்களுக்கும் பொருந்தும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுகின்றீர்களா?

  கொழும்பிலும் ஏனைய தென்பகுதிகளிலும் ஆயுதங்களுடன் தமிழர்கள் இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள் அப்படியானால் ஒட்டுமொத்த தமிழர்களையும் வடக்கு நோக்கி விரட்டியடிக்கப்படவேண்டும் என்ற கருத்துடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா?

  ஒவ்வொரு இனத்திற்கும் தங்கள் இருப்பு முக்கியம் அதை எந்தப் பேரினவாதிகளும் ( தமிழ், சிங்கள) நசிக்கிவிட அனுமதிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள்.

  பின்னூட்டம் by Anonymous — நவம்பர் 13, 2005 @ 10:57 முப

 7. அப்படி ஒரு வெளியேற்றம் நடந்திராவிட்டால் இன்றைய நாட்டின் நிலை எப்படியிருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிப்பாருங்கள். தார்களில் எரித்தும் வெட்டியும் இவர்களும் செய்திருப்பார்கள் தமிழரிற்கு. இத்தனை வளர்ச்சியை தமிழர் கண்டிருக்கமுடியாது.

  தமிழச்சி.

  பின்னூட்டம் by Anonymous — நவம்பர் 13, 2005 @ 11:06 முப

 8. தமிழிச்சி:
  தமிழர்களின் வளர்ச்சி நன்கு தெரிகிறது!
  யாழ்ப்பாணத்தை விட்டு தமிழர் வெளியேற்றப்பட்டார்கள் அது தமிழர்களுக்கு வளர்ச்சி!
  முஸ்லீம்களை கொன்று குவித்ததால் இரத்தம் படிந்த புலிகளின் கை தமிழர்களுக்கு வளர்ச்சி!
  உலகளாவிய மட்டத்தில் கொலைகள் மூலமாக தமிழர்களுக்கு நன்மதிப்பு பெற்ற வளர்ச்சி
  சிங்களப் பேரினவாதத்தை எண்ணைய+ற்றி வளர்த்து முழுச் சிங்கள மக்களையும் தமிழருக்கு எதிராக்கியதில் வளர்ச்சி!
  தேங்காய்ப்ப+வும் பிட்டுமாக வாழ்ந்த முஸ்லீம் தமிழர்களை நிரந்திர பகையாளிகளாக மாற்றியதில் வளர்ச்சி!
  இப்படி தமிழிரின் வளர்சியை சொல்லிக் கொண்டு போகலாம் தமிழிச்சி

  பின்னூட்டம் by Anonymous — நவம்பர் 13, 2005 @ 11:25 முப

 9. பெயரிலி கூறியதுபோல் இது நகைச்சுவையாகவே இருந்திட்டு போகட்டும் அதில் எனக்கொரு வருத்தமும் இல்லை, காலம்காலமாக அந்தமண்ணில் வாழ்ந்தவர்களை வெளியேறச்சொன்னது தவறுதான், ஆனால் அத்தவறு பெரியதொரு நன்மைக்காகச் செய்யப்பட்டது, வள்ளுவரே நன்மைபயக்குமென்றால் பொய்யும் சொல்லலாம்மென்றார், வெளியேற்றும் போதே நீங்கள் மீண்டும் இங்குவரலாம் என்று கூறித்தான் அனுப்பினார்கள், அதை இப்போது நிரூபித்தும் இருக்கிறார்கள்.
  ஆயுதங்கள் எடுத்ததை எனது கண்கள் கண்டன, இல்ல தீரவிசாரித்தால்தான் ஒப்புக்கொள்வீர்கள் என்றால் தீர விசாரித்தும் பார்கலாம் அதில்தவறில்லை.
  தென்பகுதியில் தமிழர் ஆயுதம் வைத்திருப்பது அப்பவிகளை கொல்வதற்கல்ல, கட்டுநாயக்காகளை தகர்பதற்காக, இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்கே புரியுமென நினக்கிறேன்.

  பின்னூட்டம் by ஈழபாரதி — நவம்பர் 13, 2005 @ 1:17 பிப

 10. ஐயா ஈழபாரதி,
  இலங்கை மத்திய வங்கி குண்டுவெடிப்பில் யார் கொல்லப்பட்டார்கள்?
  மருதானை குண்டு வெடிப்பில் யார் கொல்லப்பட்டார்கள்?
  தெகிவளை புகையிரவண்டியில் யார் கொல்லப்பட்டார்கள்?
  புறக்கோட்டை சந்தியில் யார் கொல்லப்பட்டார்கள்?
  இதன் எதிரொலியாக எத்தனை தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்?

  நகைப்பிற்கிடாமாக உள்ளது உங்கள் கட்டுநாயக்கா விடயம்!!!!!!!!!!

  பின்னூட்டம் by Anonymous — நவம்பர் 13, 2005 @ 6:06 பிப

 11. வயலில் களை பிடுங்கும்போது களையுடன் சேர்த்து சில நெற்கதிர்களும் பிடுங்கப்படுவது தவிர்க்கமுடியாது. சிலநெற்கதிர்களுக்காக களைகளை பிடுங்காதுவிட்டால் முழு வயலுமே, களைமண்டி நாசமாய் போய்விடும். அதே போன்றே எதிரியின் பொருளாதார மையங்கள் மீதான தக்குதலின் போதும் சில நல்ல நெற்கதிர்கள் அழிவது வருந்தத்தக்கதுதான், இயன்றவரை நெற்கதிர்கள் பாதுகாக்கப்படுகிறது, அதற்கு நல்ல உதாரணம் கட்டுநாயக்கா தாக்குதலின் போது தமிழ்,சிங்கள, ஆங்கில, பிரன்ஞ் மொழிமூலம் மக்களை வெளியேறுமாறு அறிவித்தல் கொடுத்தபின்னர்தான், தாக்குதல் நடத்தப்பட்டது, அதே நேர்மை சிங்களத்திடம் இல்லை “லிபரேஷன் ஒப்பிரேஷன்” தாக்குதலின் போது அல்வாய் முத்துமாரி அம்மன் கோவிலுக்கு மக்களை செல்லுமாறும், அப்பிரதேசம் பாதுகாப்பு பிரதேசமாக சிங்கள அரசினால் பிரகடனப்படுத்தப்பட்டு வானொலியில் அறிவிக்கப்பட்டும், உலங்குவானூர்திமூலம் துண்டுப்பிரசுரங்களும் வீசப்பட்டது, பின்னர் அங்கு கூடியமக்களை நோக்கி இலக்கு நோக்கி குண்டுகளும் வீசப்பட்டது, முதல் குண்டு வசந்தமண்டபத்தில் வீழ்ந்து வெடித்தது, ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர், அன்நிகழ்வின் சாட்சிகள் இன்று உலகம்பூரா பரவி இருக்கிறார்கள், அந்தவகையில் அடியேனும் கண்ணால் கண்ட ஒரு சாட்சி.

  பின்னூட்டம் by ஈழபாரதி — நவம்பர் 13, 2005 @ 7:11 பிப

 12. உங்களின் நியாயப்படுத்தலைப் பார்த்தால் வடபகுதி மக்கள் அதிபெரும்பான்மையானவர்கள் புலிகளுக்கு ஆதராவாக இருந்தார்கள். எனவே சிங்கள அரசைப் பொறுத்தவரை புலிகளுக்கு ஆதரவானவர்கள் அப்பாவித்தமிழ் மக்கள் என்று சொல்ல முடியாது அதாவது பயங்கரவாதிகளுக்கு துணை நிற்பவர்களும் பயங்கர வாதிகளே எனவே வடபகுதியில் குண்டு பொழியப்படும் போது அது புலிகள் மேல் விழுந்தால் என்ன அல்லது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மேல் விழுந்தால் என்ன என்ற எண்ணக் கருவை உங்கள எழுத்தில் இருந்து பெறக்கூடியதாக உள்ளது அத்தோடு பொழியப்படும் குண்டுகள் குறி தவறி கோவில்களுக்கு மேலும் பாடசாலைகளுக்கு மேலும் விழுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன. என்றும் எண்ணும் வகையிலே உங்கள் விவாதம் உள்ளது நல்லது ஐயா.

  பின்னூட்டம் by karikaalan — நவம்பர் 13, 2005 @ 7:37 பிப

 13. பின்னூட்டங்களுக்கு நன்றி

  பெயரிலி ஐயா நீர் நல்ல கெட்டிக்காறன். நகைச்சுவை என்று விட்டு நன்றாகக் கடிக்கச் செய்கின்றீர்
  இதோ என் நகைச்சுவையையும் கேளும் –
  பெயரிலிக்கு ஈழபாரதி போல் இயக்கத்தை முற்று முழுதாக ஏற்க முடியவில்லை.- சிந்திக்கத் தெரிந்திருக்கின்றது.
  சிறீரங்கன் போல் முற்று முழுதாக எதிர்க்கவும் திராணியில்லை – பிழைக்கத் தெரிந்தவர்.
  சரி இரண்டுமற்று நானும் என்ர வேலையும் உண்டு என்று இருக்கவும் பிடிக்கவில்லை. எழுத்து, வாசிப்பு என்று வரும் போது பிறந்தமண் பற்றிக் கதைத்தே ஆக வேண்டிய கட்டாயம். ஏதோ சாமாளிப்பில் காலத்தைக் கடத்துகின்றார் – கெட்டிக்காறன். (*_*)

  ஈழபாரதி உங்கள் புளொக் அந்த மாதிரி இருக்கின்றது.

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 13, 2005 @ 7:58 பிப

 14. This post has been removed by the author.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 13, 2005 @ 9:03 பிப

 15. அப்படியென்கின்றீர்கள் கறுப்பி 😉

  கனடா வந்தபின் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக சிந்திக்கச் செய்கின்றவர் நீங்களென்பதாலே, ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். அதனால், இதற்குமுன்னான எனது ஊட்டப்பின்னை விலக்கியிருக்கின்றேன். ;-))

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 13, 2005 @ 9:29 பிப

 16. அப்படியென்றில்லை பெயரிலை.கறுப்பிக்கும் கனடா போய் பதினேழு பதினெட்டு வரியத்துக்குப் பிறகு இப்பத்தான் மேல்வீடு வேலை செய்கிறது.

  ஆனந்த சங்கரியைத் தலைமையென்று விளிக்கும் நடராஜன் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு முதலைக் கண்ணீர் வடிக்கிறாராம் தூ.

  பின்னூட்டம் by ஈழநாதன்(Eelanathan) — நவம்பர் 13, 2005 @ 9:58 பிப

 17. என்னடா தம்பி பெயரிலி?1,2,3 என்றென்வோ எழுதியிருந்தாய்!பிறகு அதை அடித்துவிட்டு,இப்ப என்னமோ எழுதுவதும் அழிப்பதுமாக…ஏன்டாம்பி ஒரு கருத்துக்கு வரமுடியாதிருக்கா?கறுப்பி தன்னளவில உண்மையாகவும்,நேர்மையாகவுமே எழுதியுள்ளார்!நீங்கள்தான் குழப்பமான நிலையிலிருந்துகொண்டு கறுப்பிக்கு ‘ஆப்பு’வைக்கப் பார்க்கிறீங்கள்.ஆனால் கறுப்பி தெளிவாச் சொல்லுறா.இதைக்கூட’நம்ம பொடிப்பயல்’ஈழநாதன் செக்கு,சிவலிங்கம்,நக்கல் எண்டு மிருகங்களை வம்பு பண்ணுகிறான்.அவன்ர இயக்கம் மனுஷரைக் கொல்ல இவனோ மிருகத்தில் அனுபவிக்கிறான்.போங்கடா போய் வடிவாகப் படியுங்கோ!நாளைக்கு நல்லாயிருப்பியள்.கறுப்பிக்கு ஆலோசனை சொல்லுமளவுக்கு உங்களுக்கு மண்டையில என்ன இருக்கெண்டு உங்கட எழுத்தே நிரூபிக்கிறது.முதலில் என்ன எழுதலாம்,எதை எப்படியெண்டு பாடம்படியுங்கோ.கற்றுக்குட்டிப்பயல்களே.

  பின்னூட்டம் by Karunaa — நவம்பர் 13, 2005 @ 10:51 பிப

 18. கருணா அண்ணை,

  அதுவாக இருத்தலும் அதுபோல இருத்தலும் அறிவோம் நாமும். 😉

  கறுப்பி தெளிவாத்தான் எழுதியிருக்கிறா எண்டால் சரியெண்டே வைச்சுக்கொள்ளுங்கோ. 😉

  முழக்கமும் புலியின்ரை வாலைப் பிடிச்சுத்தான் தன்ரை இருப்பைக் கொண்டோடுது; தேனியும் புலியின்ரை வாலைப் பிடிச்சுத்தான் தன்ரை இருப்பைக் கொண்டோடுது.

  “பொடிமட்டை நீங்கள் உங்கடை மூக்குக்குள்ளை ரெண்டு சிட்டிகை போட்டுட்டுத் தும்மும். சளி தன்ரை பாட்டுக்கு வெளியில வந்திடும்” எண்டதைத் தவிர, வேற என்னத்தை உங்களுக்கு இங்கை சொல்ல? 😉

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 13, 2005 @ 11:41 பிப

 19. எட தம்பி பெயரிலி,உம்மோட ‘அதுவாக இருத்தலும்,அதுபோல இருத்தலும்’உம்முடைய வினையூக்கத்துக்குக் கைகொடுக்காது.புரிவதும்,புரியாததும்,ஏற்பதும்,ஏற்காததுமில் முகம் குத்தி மூக்குவழியாக தும்மலில் தூக்குது தெரியுமோ?

  ”முழக்கமும் புலியின்ரை வாலைப் பிடிச்சுத்தான் தன்ரை இருப்பைக் கொண்டோடுது; தேனியும் புலியின்ரை வாலைப் பிடிச்சுத்தான் தன்ரை இருப்பைக் கொண்டோடுது.”

  உதுல வந்தும் பாரும் ஐசே,உம்முடைய சிராய்ப்புக்கு- புலிக்கு தமிழ் தேசிய வாலைப்பிடிச்சுக்கொண்டதான் தமிழரைக் கொல்லுதல் சாத்தியமாகிறப்போ மற்றவர்களுக்குப் புலிவால் பிடிப்பது சுலபம் கண்டீரோ!’சும்மா கீச்சு மாச்சு தம்பலம்’ விளையாடுற நீரே உம்மட பங்குக்கு முரசெறியறப்போ,கறுப்பிக்கு எவ்வளவு சமூகப் பொறுப்பிருக்கும்!அவரின்ர குறும் படங்களின் சமூக அடித்தளம் உங்கட வேரிலைதான் இருக்குது தம்பிப்பயலே.எழுதுறதை அப்படியே எழுதுவதற்குக்கூட ஒரு ‘தெம்பு’வெணுமடா தம்பி.அவரைச் சொறிஞ்சு இவரைச் சொறிஞ்சு யோசித்தால் உப்பிடிதான் ‘தூக்கலா’சிந்திப்பீர்.போய் ஈரப்பாயில கொஞ்சம்’நீட்டி நிமிரும்’அப்பவாவது ‘இயங்குதாண்டு’பார்ப்போம்.இலஇலையெண்டா உது’ புலிக்காய்சல்’தான்.உந்த நோய் மாறாது.தேசியக் காச்சலின்ர தம்பிதான் உது.உதுக்கு நல்ல பேதி கொடுப்பதற்கு எனக்குத் தெரியும்.வேணுமெண்டால் பத்மநாபனிடம் வரும்போது
  இலண்டன் இறோயல் கொலிச்சுப் பகுதில் உடற்கூறுயியல் பகுதிக்குவாரும்.அங்கு வந்து மிஸ்டர் பரமுவேலனைப் பார்ப்பதாகச் சொன்னீரானால் நான் வந்து உம்மைக் கண்டு…எப்பிடி ஐடியா?

  பின்னூட்டம் by Karunaa — நவம்பர் 14, 2005 @ 3:52 முப

 20. karikaalan hat gesagt…
  “உங்களின் நியாயப்படுத்தலைப் பார்த்தால் வடபகுதி மக்கள் அதிபெரும்பான்மையானவர்கள் புலிகளுக்கு ஆதராவாக இருந்தார்கள். எனவே வடபகுதியில் குண்டு பொழியப்படும் போது அது புலிகள் மேல் விழுந்தால் என்ன அல்லது அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மேல் விழுந்தால் என்ன பொழியப்படும் குண்டுகள் குறி தவறி கோவில்களுக்கு மேலும் பாடசாலைகளுக்கு மேலும் விழுவதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன.”

  அனைத்து தமிழரையும் குண்டு வீசி அழித்துவிட்டால், எஞ்சபோவது டக்கிளசும், ஆனந்தசங்கரியும், கருனாவும், நீரும்தான். கடைசியில் உங்களுக்கும் ஆப்புதான். இவ்வளவு பலத்தோடு இருக்கும் புலிகளுக்கே மாநிலசுயாட்சியை கொடுக்க 1000தடவை யோசிக்கும் சிங்களம், தமது தேவைக்காக இராணுவத்துடன் ஒட்டிவாழ அனுமதித்திருக்கும் சிங்களம், தம் தேள்வை முடிந்ததும் ராணுவத்தை வைத்தே இந்த ஒட்டுண்ணிகளை பிடுங்கி நெருப்பில் போட்டுவிடுவார்கள்.
  என்ன? கோவில்கள்மீதும் பாடசாலைமீதும் குண்டுதவறி விழுமா?
  உங்களுக்கு தெரியுமா? போர்தொடங்கியகாலத்தில் மருத்துவமனைகள்மீதும்,பாடசாலைகள்மீதும் சிவப்புநிற + குறிபோட்டிருப்பார்கள். இது எதற்காக? காக்கை குருவிகளுக்கா? அது எப்படி சரியாக குறிபார்த்து தவறுதலாக அல்வாய் முத்துமாரிஅம்மன்கோவில்,நவாலிகிறிஸ்தவதேவாலயம்,நாகர்கோவில் பாடசாலை போன்றவற்றின்மீதும் தொடர்ந்து சரியாக தவறுகிறது? ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் புலிகள் மட்டும் இல்லாவிட்டால் நீங்களும் இல்லை நானும் இல்லை. யாழ்பாணம் வெறும் சுடுகாடாய் இருந்திருக்கும் அல்லது ஒரு அடிமை சமுதாயம் இருந்திருக்கும்.

  பின்னூட்டம் by ஈழபாரதி — நவம்பர் 14, 2005 @ 5:27 முப

 21. ஈழநாதன் சௌக்கியமா கனகாலமாச்சு (*_*)

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 14, 2005 @ 5:46 முப

 22. This post has been removed by the author.

  பின்னூட்டம் by -/பெயரிலி. — நவம்பர் 14, 2005 @ 8:56 முப

 23. கற்சுறா சக்கரவர்த்தியை எப்படி குறிப்பிட மறந்தார் என்ற கருப்பியின் கேள்வி நியாயமானது. கற்சுறா இதற்குப் பதிலளிப்பார் என நம்புகிறேன். இதேபோல் தாயகம் எக்சில் தேடல் சரிநிகர் சஞ்சிகைகள் மட்டுமே முஸ்லிம்களின் பிரச்சினையில் குரல்கொடுத்தது என்றும் சொன்னதாக கருப்பி குறிப்பிடுகிறார். இது உண்மையானால் இங்கும் ஒரு கேள்வி. இதில் மனிதம், சுவடுகள் (வேறு பத்திரிகைகளும் விடுபட்டிருந்தால் நினைவுக்குக் கொண்டுவருபவர்கள் குறிப்பிடுவது நல்லது) எப்படி விடுபட்டது அவரது பேச்சில் என்ற கேள்வியை கேட்பது சரியெனப் படுகிறது எனக்கு. முஸ்லிம் மக்களுக்கான குரல்கள் மனிதத்தில் சரியாகவே பதியப்பட்டுத்தான் உள்ளது. இதை அவர் வாசித்தறியும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இதை குறுக்கிச் சொல்லும் அவரது தைரியம்தான் பலவீனமாகப் படுகிறது எனக்கு. இந்த இடத்தில் என்னை உறுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு கேள்வி… அவரது பங்களிப்புடன் வெளிவந்த அல்லது வெளிவரும் அறிதுயில் இணையச் சஞ்சிகையில் முஸ்லிம் மக்களுக்கான குரலை காணக்கிடைக்காமல் இருப்பதுதான் இருந்துவிட்டுப் போகட்டும்… இந்த அநியாயங்களைச் செய்த புலிகளின் செய்தி உற்பத்திச்சாலையான தமிழ்நெற் க்கு லிங் கொடுத்துள்ளதைத்தான் எம்மைப் போன்றவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. -ரவி–>

  பின்னூட்டம் by noblog — நவம்பர் 15, 2005 @ 12:39 பிப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: