கறுப்பி

நவம்பர் 14, 2005

எனக்கும் ஒரு வரம் கொடு..

Filed under: சிறுகதை — suya @ 7:49 முப

குசினி மூலையில் வருபவர்களுக்குத் தேத்தண்ணி போடும் சாக்கில் நேரத்தைக் கடத்திக்கொண்டு நின்றாள் கௌசி. நினைவு மைவிழியையே சுத்திச் சுத்தி வந்துகொண்டிருந்தது. “தலைக்கு வாருங்கோ” எண்டு அண்ணா கூப்பிட்டுவிட ஆயாசத்தோடு மனம் நிறைய தண்ணியை அள்ளி அள்ளி வார்த்தாள் கௌசி “சரி காணும்” கிண்ணியைப் பிடுங்கி அண்ணியின் அக்கா அடுத்த பொம்பிளையிடம் குடுத்தாள்.
கன்னங்கள் சிவக்க முகத்தில வடிந்த தண்ணியை சிரித்த படியே வாங்கிக் கொண்டு, மைவிழி கௌசியின் கைய வருடி விட்டாள். சிலிர்த்த உடம்பு அடங்க முதல் அவளை கட்டிப்பிடித்து ஈரம் சீலையில் ஊறியதும் உணராமல் கொஞ்சிக் கண்கலங்கி “என்ர குஞ்சு” எண்டாள். உருண்ட முகத்தில், விரிந்த கண்களால் கௌசியைப் பாத்து வெட்கத்துடன் சிரித்தாள் மைவிழி.

மைவிழியின் ஒவ்வொரு அசைவையும் பாக்க ஆசைப்பட்டவளாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த கௌசியிடம் “அண்ணி வாறாக்களுக்குப் பாத்துப் பலகாரம் குடுக்கிறீங்களே, அண்ணி வாறாக்களுக்குப் பாத்து தேத்தண்ணி குடுக்கிறீங்களே” கைக் குழந்தையோடும் பட்டோடும் வேர்க்க விறுவிறுக்கப் பறந்து கொண்டிருந்தாள் அண்ணி.

“என்ன கக்காத் துணி தோச்சனீரே” பெட்டைகள் பின்னேர நேரத்தில அரட்டையடிக்க கிணத்தடியில சந்திக்கேக்க கேக்கிற போது கையையும், சட்டையையும் மணந்து மணந்து பாப்பாள். தோள் பட்டையில எப்பவுமே ஒரு புளிச்ச மணம் நிரந்தரமாய் வீசும். கௌசி தலையச் சரிச்சுச் சரிச்சு மணந்து பாப்பாள். ஒருவித சுகம் அவளை அணைத்துக் கொள்ளும். சட்டை திட்டுத் திட்டாய் அங்குமிங்கும் விறைத்துக் கிடக்கும். பிரசவத்தின் முழு மோகனங்களுடனும் அலைந்து கொண்டிருப்பாள் அவள்.

“நல்லா பால் மண்டீட்டாள் ஒருக்கா ஏவறைக்குத் தட்டுறீரே” குழந்தையைக் குடுத்து விட்டுப் போவாள் அண்ணி. நிமித்தி தோளோட சேத்து அணைத்து முதுகை மெல்ல மெல்லத் தட்ட, நெளிந்து தலையத் தூக்கித் தூக்கி மோதி, தோளைச் சூப்பி பெரிதாகச் சத்தமாய் ஏவறை விட, தோள் ஈரமாகத் திரைஞ்ச பால் பின் சட்டையில் வடியும். வாய் துடைத்து இறுக அணைத்துக் கொஞ்ச, அவள் மார்போடு முகம் தேச்சு முலையை வாயால் கௌவ முயலும் குழந்தை “ச்சீ போடி கெட்ட பெட்டை என்னட்டைப் பால் இல்லை, அம்மாட்டக் குடிச்சது காணாதே குடிகாறப் பெட்டை” கன்னத்தில் செல்லமாய் அடிக்க, சின்னதாய் துடித்து வீடிட்டுக் கத்த இறுக அணைத்துக் கொள்ளுவாள்.

“கக்கா இருந்திட்டாள் போல” அண்ணி கை நீட்ட “நான் மாத்திறனே” கட்டிலில் துணி விரிச்சு குழந்தைய நிமித்திக் கிடத்த அது சிணுங்கும். “எண்ட செல்லமெல்லோ, எண்ட குஞ்செல்லோ” சொன்ன படியே முகத்தோடு முகம் தேச்சுக் கொஞ்ச குழந்தை சிரிக்கும்.
“எண்ர செல்லம் சிரிக்குதோ, ஆ.. என்ர ராசாத்தி சிரிக்குதோ” கண்ணுக்குள் பாத்துக் கேட்டபடியே உடுப்பைக் கழற்றி துணிக்குக் குத்தியிருக்கும் பின்னை ஆட்டாமல் கழற்றுவாள். “சீ கக்காப் பெட்டை, என்னடி செஞ்சு வைச்சிருக்கிறாய்?” கேட்டபடியே மூக்கைச் சுளிச்சு துணியை அகற்றி, சின்னத் துவாயை ஈரமாக்கி உடம்பைத் துடைப்பாள். கால்களை அகற்றி பௌடர் போட்டு “இப்பிடியே கிடந்து கொஞ்ச நேரம் விளையாடு காத்துப் படட்டும்” பக்கத்தில படுத்திருப்பாள்.

“சின்னப்பாப்பா எந்தன் செல்லப் பாப்பா
சொன்ன பேச்சைக் கேட்டாத்தான் நல்ல பாப்பா-
சின்னப் பாப்பா எந்தன் செல்லப் பாப்பா

தின்ன உனக்குச் சீனி மிட்டாய் வாங்கித்தரணுமா
சிலுக்குச் சட்டை சீனாப் பொம்மை பலூண் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்குச் சொல்லித் தரணுமா
அப்போ கலகலலெண்டு சிரிச்சுக் கிட்டு
என்னைப் பாரம்மா…”

குழந்தை அவள் பாட்டை ரசிச்ச படியே “ங்க ங்க” எண்டு சேர்ந்து பாடும்.

“அண்ணி அண்ணி இஞ்ச ஓடிவாங்கோ” பதறியடிச்சு ஓடிவந்த அண்ணியிடம் மைவிழிக் குட்டி உடம்பு பிரட்டப்பாக்கிறாள்” எண்டு பரவசமாய்ச் சொல்லுவாள். “போடி அடுப்பில கறி, நீ கத்த நான் பயந்திட்டன்.” அண்ணி கொஞ்ச நேரம் நிண்டு பாத்துவிட்டு போய் விடுவாள். “என்னடி குட்டி ஏமாத்தீட்டாய்.. இஞ்ச இப்பிடி இப்பிடித் திரும்பு” எண்டு குழந்தைக்குப் பக்கத்தில் கிடந்து தன் உடம்பை பிரட்டிப் பிரட்டிக் காட்டுவாள். அண்ணா அண்ணியைக் கூப்பிட்டு “இஞ்ச எங்கட கௌசிக் குட்டி உடம்பு பிரட்டுறாள் படம் எடுப்பம் கமெராவைக் கொண்டு வாரும்” முகம் சிவக்க சட்டையை இழுத்து விட்டு எழும்பி இருப்பாள்.

“நடவடி சக்கை மாதிரி இருக்கிறாய்.. உன்ர வயசில எல்லாம் ஓடித்திரியுதுகள்” மைவிழியின் கையைப் பிடித்து எழுப்பி, நிப்பாட்டி தன் கைகளோடு அவள் கைகளைப் பிணைத்து, பின்பக்கமாய் தான் நடந்து சின்னச் சின்ன அடியாய் அவளை நடக்கச் செய்வாள். “என்ர குஞ்செல்லே நடவம்மா.. ஆ.. கெட்டிக்காறி அப்பிடித்தான் அப்பிடித்தான்..” கௌசிக்கு முதுகு பிடித்துக் கொள்வதுதான் மிச்சம். முதலாவது பிறந்தநாளுக்கு மைவிழி நடக்காமல் போனது கௌசிக்கு வெக்கக் கேடாய் இருந்தது. “என்ர அக்கான்ர மகள்.. என்ர அண்ணான்ர மகன்.. பெட்டைகள் சொல்லிக் கொண்டே போவார்கள்..

“கௌசிமாமி அந்த ராஜாக்கதை.. கௌசிமாமி பொரியல் தாங்கோ.. கௌசிமாமி எனக்குக் காச்சல் நான் பள்ளிக்கூடம் போகேலை.. கௌசிமாமி..கௌசிமாமி..”

மைவிழியைக் குளிக்கவார்த்தபடியே “சின்னச் சின்னக் கை, சின்ன மூக்கு, சின்ன வாய்” கௌசி அடுக்கிக் கொண்டு போக “இதென்ன கௌசிமாமி, சின்னப் பாப்பா” தன்ர மார்பைத் தொட்டுக் கேட்டுச் சிரிப்பாள். “போடி கள்ளப் பெட்டை” கன்னத்தைத் தட்டுவாள் கௌசி. “உங்களுக்கு மாதிரி எனக்கும் பெரிசாகுமா” கண்கள் அகல கௌசியின் உடம்பைப் பார்த்த படியே கேட்பாள் மைவிழி. அவளின் உடம்பில் சவுக்காரத்தைத் தேச்ச படியே “ஓம் கொஞ்சம் கொஞ்சமாப் பெரிசாகும், அப்ப மைவிழிக் குட்டி பெரிய பொம்பிளையா வளந்து வளந்து வருவாள்.. கௌசி மாமி மைவிழிக் குட்டிக்குச் சீலை கட்டி, தலையெல்லாம் பூ வைச்சு, நகைகளெல்லாம் போட்டு வடிவா வெளிக்கிடுத்தி விடுவன், மைவிழிக் குட்டி ராசாத்தி மாதிரி இருப்பாள் என்ன?” மைவிழியின் கண்கள் கனவில் மிதக்க ஒரு கணம் எங்கோ சென்று திரும்புவாள். “கனக்க ஆக்களெல்லாம் வருவீனமே.. நிறம்ப பிரசெண்ட் எல்லாம் கிடைக்குமே”, “ம்..போடி உனக்கு பிரசெண்ட்தான் முக்கியம்” அவள் துடையில் அடிப்பாள். “ஆ..ஆ” அழுவது போல் நடிக்கும் மைவிழியின் தலையில்
“ஒரு குடம் தண்ணி – நூறாண்டு
ரெண்டு குடம் தண்ணி – நூற்றிப் பத்தாண்டு
மூண்டு குடம் தண்ணி – நூறு நூறு நூறாண்டு
ஐயோ தண்ணி முடிஞ்சுதே” சோகமாக முகத்தை வைத்துக் கொள்ளுவாள்..

துவாயை உதறி தலையைத் துடைச்சு, உடம்பை சுத்தி நடுங்கும் மைவிழியைத் தன் உடலோடு அணைத்துத் தூக்கி அறைக்குள் ஓடி வந்து, உடம்பைத் தேய்த்துத் துடைத்து, பௌடர் போட்டு, தலைக்கு ஓடிக்கொலோன் பூசி, சுருங்கியிருக்கும் கைகளைத் தன் கையோடு சேர்த்துத் தேச்சுச் சூடாக்கி, பொக்கிள் மேல் வாயை வைத்து ஊதிவிட்டு, மைவிழி கூசி நெழிந்து கலகலவென்று சிரிப்பாள்..

கௌசியின் முதலிரவன்று மைவிழி நித்திரை கொள்ளவில்லை. “எனக்குக் கௌசிமாமியோட படுக்க வேணும்” குரலெடுத்துக் கத்தியவளை இரவிரவாகக் கொண்டு அலைந்ததாய் அண்ணி இப்பவும் சொல்லிச் சிரிப்பாள்.
“கௌசி மாமி ஒருக்கா வீட்டை வாறீங்களே” காலம வெள்ளணை போன் வந்தபோது பயந்து போனாள் கௌசி. “என்னம்மா என்ன நடந்தது” கேட்டவளிடம் “நீங்க இப்ப உடன இஞ்ச வாங்கோ” விசும்பினாள். “என்னடா அம்மா எங்கை? என்ன நடந்தது? சொல்லனம்மா” “அம்மாவும், அப்பாவும் நித்திரை, எனக்கு உங்களோட கதைக்க வேணும்” கௌசிக்கு கொஞ்சம் விளங்கியது, கணவனிடம் சொல்லி விட்டு மனம் குதூகலிக்க “உடன மாமி வாறன் நீங்கள் போய் அறைக்குள்ள இருங்கோ சரியே” அண்ணி எழும்பு முதல்லே மைவிழிக்கு நப்பிண் பாவிக்கச் சொல்லிக் குடுத்தாள் கௌசி.

“பதின்மூண்டு பொம்பிளைகள் வேணும் தட்டுத் தூக்க கூப்பிடுங்கோ நேரம் போகுது” அண்ணியின் அக்கா பெரிய குரலில் கத்தினாள். “இஞ்ச உதில இருந்து கொசிப்படிக்காமல் தட்டுத் தூக்க வரட்டாம் பொம்பிளைகளே போங்கோ” பட்டும், நகையுமாய் ஜொலித்த பொம்பிளைகளைக் கிண்டலாய் கூப்பிட்டு குசினிக்குள் வந்து “இஞ்ச என்ன செய்யிறாய் தட்டுக் கொண்டு வரக் கூப்பிடீனம் போ” அண்ணா சொல்லி விட்டுப் போனான். “கௌசி மைவிழி கூப்பிடுறாள், தன்னோட உங்களையும் வரட்டாம்.. அவளுக்குப் பக்கத்தில தட்டோட வாங்கோ” அழுத மகனைத் தோளில போட்டு ஆத்திய படியே அண்ணி வந்து கையைப் பிடித்து இழுத்தாள். “இல்லை அண்ணி உவனை என்னட்டத் தந்திட்டு நீங்கள் போங்கோ”, “இஞ்ச நேரம் போகுது, மைவிழி உங்களத்தான் வேணுமெண்டு கேக்கிறாள் போங்கோ” பிடிச்சுத் தள்ளாத குறையாச் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் அண்ணி.
வரிசையாகப் போன பெண்களோடு தானும் சேர்ந்து கொண்ட கௌசியைப் பார்த்து கண்களால் சிரித்துத் தலையாட்டினான் அவள் கணவன். கௌசிக்கு வெட்கமாக இருந்தது. “இண்டைக்கு இரவைக்கு இருக்கு உங்களுக்கு” அவளும் கண்களால் சொல்லிவிட்டுப் போனாள்.

“இந்தாங்கோ பலகாரத்தட்டு, இந்தாங்கோ பழத்தட்டு, இந்தாங்கோ பூத்தட்டு..” தட்டுகளைத் தூக்கித் தூக்கிப் பெண்களிடம் குடுத்துக் கொண்டிருந்தாள் அண்ணியின் அக்காள். கௌசியில் தோள் மேலால் தட்டுகள் பின்னேறிப் போய்க் கொண்டேயிருந்தன. கௌசி மௌனமாக நின்றாள். சுவர்கள் ஒடுங்கி நீள, மூச்சு முட்டுவதுபோல் சுவாசமின்றித் தடுமாறினாள். தலையில் சடைநாகத்துடன், மூக்கு மின்னியும், நெத்திப் பொட்டும், சீலையுமாய் மைவிழி யாரை ஞாபகப்படுத்துகின்றாள். மைவிழி அவளைக் கட்டிப்பிடிச்சு மார்போடு முகம் வைத்துக் கண்கள் கலங்க கைகளை இறுக்கினாள். “நீர் இப்பவும் சின்னப்பிள்ளையில்லை தெரியுமோ? பெரியபிள்ளை மாதிரி ஃபிகேவ் பண்ணும் பாப்பம், மேக்கப்பெல்லே குழம்பீடும்” கையைப் பிடித்து மைவிழியை இழுத்து விட்டாள் லண்டனிலிருந்து வந்திருந்த அண்ணியின் அக்காள்.
தொண்டைக் குழி இறுக, தொடைகள் நடுக்கம் கண்டன. கௌசியின் கால்கள் இயங்க மறுத்தன. பெரிதாய் நாதஸ்வரம் அலறியது. சிரிப்பும் சிங்காரமுமாய் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், முதியவர்கள்..

எங்கோ காட்டில் தனித்து விடப்பட்டவள் போல் கௌசியின் மனம் பயம் கண்டது. கணவனை இறுக அணைத்து உடலுறவு கொள்ளவேண்டும் போல் வேகம் கொண்டது உடம்பு. உன்னை நான் இறுக அணைத்துக் கொள்கின்றேன். என் கருப்பைக்குள் உன் விந்தைக் கொடு, அது கருக்கட்டி உருப்பெற்றுக் குழந்தையாக மாறட்டும்.. என் அடிவயிறு நோக் காண கால்கள் வலிக்கட்டும். என் வயிற்றைக் காலால் சிசு எட்டி உதைக்கட்டும், என் பெருத்த வயிறுடன் உன் தோள் தாங்கி நெடுந்தூரம் நடந்து வருகின்றேன். பிரவச வலி எனக்கும் வேண்டும். என்னைத் தாங்கு உன்னுடன் பிணைத்துக் கொள்.. உலகின் எல்லா நோவும் என்னைத் தாக்கட்டும்.. என் யோனி கிழித்து உலகை குழந்தை ஒன்று எட்டிப் பார்க்கட்டும்;, என் முலையின் கட்டிப் போன பாலை அது சப்பி உறிஞ்சிக் குடிக்கட்டும்… என் உடலிலிருந்து உதிரம் வழிந்து தெருவெங்கும் ஓடட்டும்.. நானும் தாயாக எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு.. எனக்கும் ஒரு வரம் கொடு..

“தட்டுத் தூக்க ஒரு ஆள் குறையுது கூப்பிடுங்கோ” அண்ணியின் அக்கா குரல் எங்கோ தொலைவில் கேட்டது.

Advertisements

12 பின்னூட்டங்கள் »

 1. …கோபம் தீர்ந்த அப்பா உன்னைக் கூப்பிடுவாரூ-நீ
  கொஞ்சிக் கொஞ்சிப் பேசினாத்தான் சாப்பிடுவாரூ…
  சின்னப்பாப்பா எங்கட சின்னப்பாப்பா…கதையென்ன பாப்பா?

  பின்னூட்டம் by Sri Rangan — நவம்பர் 14, 2005 @ 9:33 முப

 2. கோழி மிதிச்சுக் குஞ்சு முடம் ஆகி விடாது
  உனக்குக் கொய்யாப் பழம் பறிச்சுத் தாறேன் அழவும் கூடாது..

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 14, 2005 @ 9:57 முப

 3. கடைசி பந்தி சொல்லவரும் கருத்து என்னவோ..?? இல்லை இந்தக்கதை தான் சொல்லவரும் கருத்துத்தான் என்னவோ??

  பின்னூட்டம் by thamizhachchi — நவம்பர் 14, 2005 @ 12:07 பிப

 4. புரியவில்லையா தமிழச்சி? தெளிவாகத்தானே இருக்கிறது கருவும், கதையும்

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 14, 2005 @ 12:18 பிப

 5. ஆங்கிலத்துக்காக பேசும் உங்கள் கதைகளில; தமிழ் விளையாடுவது
  ஆச்சரியம்தான்..

  கறுப்பியை விட கறுப்பியின் கதை
  புரியும்படி உள்ளது.பாராட்டுக்கள்.

  -theevu-

  பின்னூட்டம் by btamil — நவம்பர் 14, 2005 @ 12:50 பிப

 6. என்ன இப்பிடிச் சொல்லி விட்டீர்கள் btamil? வம்பாப் போச்சு. நான் எப்போது எங்கே ஆங்கிலத்துக்காகக் கதைத்தேன் என்று சாட்சியுடன் நிரூபிக்க முடியுமா? நான் கதைத்தது சைனீஸ் மொழிக்காகவல்லவா?

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 14, 2005 @ 2:37 பிப

 7. Hello pretty young lady,

  முதலில் உங்கள் தமிழ் புரிதல் கடினமாக இருந்தது. இருப்பினும் விடாப்பிடியாகப் படித்தேன். நல்ல கதை ஒன்று படிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே அடைந்தேன்.

  இப்படித்தான் வாழ்க்கையிலும் நடக்கிறது. கஷ்டப்பட்டு குழந்தையின் தாயை விட அதிக பிரயத்தினப்பட்டு வளர்த்திருப்பாள் ஒருத்தி. அப்பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் நடக்கும்போது எங்கிருந்தோ வந்து அவளை ஒதுக்குவாள் அண்ணியின் அக்கா போன்றோர். ஏன், இவள் குழந்தை பெறாதவள் என்பதாலா?

  நீங்கள் தரும் வர்ணனைகள் எனக்கு புகழ் பெற்ற எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனை நினைவுபடுத்துகிறது. கஷ்டப்பட்டு உணர்ந்ததாலவோ என்னவோ உங்கள் தமிழ் வட்டார நடையும் பிடித்திருக்கிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  பின்னூட்டம் by dondu(#4800161) — நவம்பர் 14, 2005 @ 5:55 பிப

 8. The story was excellent.

  Anubavithavargalukku puriyum ….

  பின்னூட்டம் by Jayashree — நவம்பர் 15, 2005 @ 5:58 முப

 9. Thanks Dondu and jayeshree

  பின்னூட்டம் by கறுப்பி — நவம்பர் 15, 2005 @ 8:05 முப

 10. நீங்கள் இதை படமாக்கினால் இன்னமும் ரசனையாக செய்வீர்கள். கெளசியின் தவிப்பைச் சொல்ல வார்த்தைகள் போதாமல் போய் விட்டது.

  படமெடுங்கள் – டைட்டில் “வரம்”

  பின்னூட்டம் by Mookku Sundar — நவம்பர் 15, 2005 @ 10:10 முப

 11. //புரியவில்லையா தமிழச்சி? தெளிவாகத்தானே இருக்கிறது கருவும், கதையும்.//

  புரீயவில்லை என்று தான் கேட்கிறேன் கறுப்பி. இதில் நீங்கள் சொல்லவாறது என்ன?? உங்கள் கதை சொல்லவாறது என்ன?

  பின்னூட்டம் by thamizhachchi — நவம்பர் 15, 2005 @ 10:36 முப

 12. கதையும் தமிழ்நடையும் அருமை.

  குழந்தைகள் தினம் என்பதற்காக இந்தப் பதிவா?

  பின்னூட்டம் by பாலராஜன்கீதா — நவம்பர் 15, 2005 @ 10:41 முப


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: